மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் விதிகளுக்கு உட்பட்டது; அவையில் எந்தவொரு உறுப்பினரும் விதிகளை மீறக் கூடாது: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAR 2026 4:33PM by PIB Chennai

நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், ஆனால் அது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், நாடாளுமன்ற நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கும் உட்பட்டது என்றும் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று (12.09.2026) கூறினார். அவையில் உறுப்பினர்கள் பேசும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விதிகளின் கீழ் விரிவான வழிகாட்டுதல்கள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் தொடர்பாக அரசியலமைப்பின் 105-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். தம் மீதான பதவி நீக்கத் தீர்மானம் நேற்று தோல்வி அடைந்த நிலையில் இன்று அவையில் உரையாற்றிய திரு ஓம் பிர்லா, கடந்த இரண்டு நாட்களில், அவையில் 12 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடந்ததாகவும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்கள், வாதங்களை வைத்தாகவும் கூறினார்.

அவையில் அனைத்து உறுப்பினர்களும் அவையின் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெளிவுபடுத்தினார்.  எதிர்க்கட்சித் தலைவர் எந்த நேரத்திலும் எழுந்து நின்று தங்களுக்கு விருப்பமான எந்த விஷயத்தையும் பேசலாம் என்ற ஒரு சிறப்பு சலுகை உள்ளது என சில உறுப்பினர்கள் நினைப்பதாகவும் அப்படி எந்த விதியும் இல்லை எனவும் அவர் கூறினார்.

விதிகள் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமாகப் பொருந்தும் என்று அவர் எடுத்துரைத்தார். அவையில் உள்ள எந்த உறுப்பினரும் விதிகளின் கட்டமைப்பிற்கு வெளியே பேசுவதற்கு எந்த சலுகையும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

அவைத் தலைவர் நாற்காலி என்பது இந்தியாவின் ஜனநாயக மரபுகள், அரசியலமைப்பின் உணர்வு ஆகியவற்றின் அடையாளச் சின்னமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த அவை, இந்தியாவின் 140 கோடி மக்களின் இறையாண்மையை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், ஒவ்வொரு உறுப்பினரும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு இங்கு வருவதாகவும் அவர் கூறினார்.

விவாதங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலும் முக்கிய விவாதங்களின் போது, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதை விட அதிக நேரத்தைப் பெற்றுப் பேசியுள்ளனர் என்று அவர் தெளிவுபடுத்தினார். சிறிய கட்சிகள், ஒற்றை உறுப்பினர் கட்சிகள், சுயேச்சை உறுப்பினர்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

அவை நடவடிக்கைகளை சீர்குலைக்கும் நடத்தையை அவர் கடுமையாக விமர்சித்தார். கோஷமிடுவது, பதாகைகளைக் காட்டுவது, காகிதங்களைக் கிழிப்பது போன்றவை நாடாளுமன்ற மரபுகளுக்கு முரணானது என்று அவர் கூறினார். இந்த நடவடிக்கைகள் அவையின் செயல்பாட்டை சீர்குலைப்பது மட்டுமல்லாமல் அதன் கௌரவத்தையும் குறைக்கின்றன என்று அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயர்ந்த மரபுகளை நிலைநிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை திரு ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார். கட்சி வேறுபாடுகளைக் கடந்து நாடாளுமன்றத்தை வலுப்படுத்தவும் மக்களின் நம்பிக்கையைப் பேணவும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று திரு ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238946&reg=3&lang=1

(Release ID: 2238946)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2239241) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , Bengali , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam