பிரதமர் அலுவலகம்
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
இடுகை இடப்பட்ட நாள்:
11 MAR 2026 6:58PM by PIB Chennai
திரு பியூஷ் கோயல் அவர்களே, டாக்டர் எல்.முருகன் அவர்களே, திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களே, திரு நயினார் நாகேந்திரன் அவர்களே, திரு தங்கம் தென்னரசு அவர்களே, தமிழ்நாட்டைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே வணக்கம்!
நண்பர்களே,
அற்புதமான திருச்சி மாநகரில் இன்று உங்களுடன் இருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்றைய நிகழ்ச்சி, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான விழாவாகும். 5600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி, இது. தூய்மையான எரிசக்திக்கான உள்கட்டமைப்பு, பெட்ரோலியம் தொடர்பான உற்பத்தி, நெடுஞ்சாலைகள், ரயில்வே மற்றும் கிராம சாலைகள் தொடர்பான திட்டங்கள் இதில் அடங்கும். இவை, எரிசக்தி அணுகலையும், இணைப்பையும் ஊக்குவிப்பதுடன், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
நண்பர்களே,
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்பிற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக சுமார் 3,700 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்கள் பயனடையும். ஒன்பது லட்சம் குடும்பங்களுக்கும், நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்களுக்கும், இந்தத் திட்டம் குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்புகளை வழங்கும். வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு நேரடியாக வழங்கப்படுவதன் வாயிலாக, எளிதான வாழ்க்கை ஊக்குவிக்கப்படும். நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை எரிவாயு, காற்று மாசடைவதைக் குறைப்பதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. எட்டு ஆண்டுகளில் இந்தத் திட்டத்தினால் ஏற்படும் நேர்மறையான சுற்றுச்சூழல் சார்ந்த தாக்கம், நான்கு கோடி மரங்களை நடுவதற்குச் சமமாக இருக்கும் என்று நான் அறிகிறேன்.
நண்பர்களே,
இன்று, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மசகு எண்ணெய் கலவை ஆலை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. உலக அளவில் மிகப்பெரிய ஆலைகளுள் ஒன்றாக இது விளங்கும் என்பது உங்களுக்கு பெருமிதம் அளிக்கும். இந்த ஆலை, தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களில் உள்ள முக்கிய தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். மசகு எண்ணெயின் உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, இறக்குமதிகள் மீதான சார்பையும், பொருட்செலவையும் குறைக்கிறது.
நண்பர்களே,
370 கிலோ மீட்டர் நீளம் உள்ள கிராம சாலைகளை இன்று நாம் திறந்து வைத்திருக்கிறோம். பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு சாலையும் வெறும் இயல் உள்கட்டமைப்பு அல்ல. இந்த சாலைகள் மூலம், நோயாளிகள் மேம்பட்ட சுகாதார சேவையைப் பெறலாம். மாணவர்கள், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வசதியாகச் சென்று வரலாம். உழவர்கள் தங்கள் விளைப் பொருட்களை விற்கவும், உள்ளிட்டுப் பொருட்களை வாங்கவும் பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கலாம். ஒட்டுமொத்தமாக, இந்தச் சாலைகள், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தி, எளிதான வாழ்க்கைக்கு வழிவகை செய்கின்றன.
நண்பர்களே,
கடந்த ஆண்டு ஆடித் திருவாதிரைத் திருநாளன்று கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்திற்கு சென்றிருந்த மகிழ்ச்சியான தருணத்தை நினைவு கூர்கிறேன். பேரரசர் ராஜேந்திர சோழனால் நிர்மாணிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி 1000 ஆண்டுகள் நிறைவடைந்ததை நாம் கொண்டாடினோம். யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ள இந்த ஆலயம், உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கிறது. இந்தப் பகுதியில் ஒரு முக்கியமான நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டியிருக்கிறோம். தற்போதுள்ள நெடுஞ்சாலையின் புறவழிச் சாலைகள், ஆலயத்திற்கு அருகாமையில் இருப்பதால், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. புதிய புறவழிச் சாலை அமைக்கப்படுவதன் மூலம், ஆலயத்தின் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு, இதர வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்படும். அதாவது, இதன் மூலம் அனைவருக்கும் மேம்பட்ட பாதுகாப்பு கிடைக்கும்.
நண்பர்களே,
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட்டு, புனரமைக்கப்பட்ட எட்டு ரயில் நிலையங்கள் கடந்த வாரம் மதுரையில் இருந்து திறந்து வைக்கப்பட்டன. இன்றும் ஏராளமான புதிய ரயில் சேவைகள் கொடியசைத்துத் துவங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த சேவைகள், நாகர்கோயில், கோயம்புத்தூர், ராமேஸ்வரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, காரைக்குடி போன்ற முக்கிய இடங்களை இதர பகுதிகளுடன் இணைக்கும். புதிய ரயில் சேவைகள், சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவித்து, இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். வளர்ச்சியடைந்த இந்தியாவை அடைய, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவது தான் எங்கள் இலக்கு. தமிழ்நாட்டு மக்களின் நலனில் மத்திய அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக நாங்கள் இரவும், பகலும் அயராது பாடுபடுகிறோம், எங்கள் முயற்சி வரும் காலங்களிலும் தொடரும்.
நன்றி
(Release ID: 2238460)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2238675)
வருகையாளர் எண்ணிக்கை : 9