குடியரசுத் தலைவர் செயலகம்
புதுதில்லியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்பு
உண்மையான வளர்ச்சியை அடைய பெண்களின் சமமான பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAR 2026 2:55PM by PIB Chennai
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (மார்ச் 8, 2026) புதுதில்லியில் மத்திய பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளையும் பங்களிப்புகளையும் கொண்டாடவும், பாலின சமத்துவம், பாதுகாப்பு, கண்ணியம், பெண்களின் அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கான கூட்டு உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவும் இந்த தேசிய அளவிலான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், கல்வி, நிர்வாகம், நீதித்துறை, ராணுவம், மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், கலை, தொழில்முனைவு என ஒவ்வொரு துறையிலும் பெண்கள் முன்னணிப் பங்காற்றுகின்றனர் என்றார். சுய உதவிக் குழுக்கள் மூலம் கிராமப்புறங்களில் பெண்கள் நிதி ரீதியாக தன்னிறைவு பெற்று வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். பஞ்சாயத்துகளில் கிராமப்புற வளர்ச்சிக்கு அவர்கள் தலைமை தாங்கி வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். தொழில், விளையாட்டு என பல துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர் என்று அவர் கூறினார். வாய்ப்புகளும் ஆதரவும் வழங்கப்பட்டால், பெண்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்க முடியும் என்ற நம்பிக்கையை இத்தகைய உதாரணங்கள் ஏற்படுத்துகின்றன என்று அவர் தெரிவித்தார்.
பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி இந்தியா வேகமாக நகர்ந்து வருவதாகக் குடியரசுத் தலைவர் கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில், பெண்களின் வளர்ச்சிப் பாதையில் உள்ள தடைகளை நீக்குவதற்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். பள்ளிக் கல்வியில் பாலின சமத்துவத்தை இந்தியா அடைந்துள்ளது என்று அவர் கூறினார். உயர்கல்வியில் கூட, மொத்த சேர்க்கை விகிதத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என அவர் தெரிவித்தார். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித பாடங்களான ஸ்டெம் (STEM) கல்வியில் பெண்களின் பங்களிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
பெண்கள் வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக உருவாகி வருவதாக குடியரசுத் தலைவர் கூறினார். கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட புதிய தொழிலாளர் சட்டங்கள் பெண் தொழிலாளர்களுக்கு மிகவும் உள்ளடக்கிய, பாதுகாப்பான, அதிகாரம் அளிக்கும் பணிச்சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
பெண்கள் அதிகாரமளிப்பதற்காக ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர்களின் வளர்ச்சிப் பயணத்தில் இன்னும் பல தடைகள் உள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார். பாலின அடிப்படையிலான பாகுபாடு என்ற மனநிலையைத் தாண்டி நாம் செல்லும்போதுதான் சமூகத்தில் உண்மையிலேயே சமத்துவத்தை நிலைநாட்ட முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
உண்மையான வளர்ச்சியை அடைய, நாட்டின் மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் பெண்களின் சமமான பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதே நமது இலக்கு எனவும் அதை அடைய ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வியும் சம வாய்ப்புகளும் அவசியம் என்றும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236565®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2236670)
வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam