உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான டிஜிட்டல் தளங்கள் மற்றும் சின்னங்களை புதுதில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அறிமுகப்படுத்தினார்

மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027, இரு கட்டங்களாக நடத்தப்படும் - நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தப் பணியில் ஈடுபடுவார்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2026 1:11PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-க்கான நான்கு டிஜிட்டல் தளங்களை புதுதில்லியில் அறிமுகம் செய்தார். அத்துடன் கணக்கெடுப்புக்கான "பிரகதி" (பெண்), "விகாஸ்" (ஆண்) என்ற சின்னங்களையும் அவர் வெளியிட்டார். நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக, கணினி மேம்பாட்டு மையம் மேம்பட்ட டிஜிட்டல் தளங்களை உருவாக்கியுள்ளது. மத்திய உள்துறை செயலாளர், இந்திய தலைமைப் பதிவாளர், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் உட்பட பல மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு ஜூன் 16, 2025 அன்று அரசிதழ் அறிவிப்பு மூலம் அறிவித்தது. இதன் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை முறையாகத் தொடங்கியது. 2 கட்டங்களாக நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையாகும். முதல் முறையாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடத்தப்படவுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027-ன் முகங்களாகச் செயல்படவுள்ள, "பிரகதி" (பெண் கணக்கெடுப்பாளர்), "விகாஸ்" (ஆண் கணக்கெடுப்பாளர்) ஆகிய சின்னங்கள் வெளியிடப்பட்டன. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதியை நிறைவேற்றுவதில் பெண்கள் மற்றும் ஆண்களின் சமமான பங்களிப்பை இந்தச் சின்னங்கள் அடையாளப்படுத்துகின்றன. இந்த சின்னங்கள் மூலம், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல்கள், நோக்கங்கள், முக்கிய செய்திகள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு பயனுள்ள முறையில் பரப்பப்படும்.

2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா பின்வருமாறு நான்கு டிஜிட்டல் தளங்களை அறிமுகம் செய்தார்:

1. வீட்டுப் பட்டியல் உருவாக்கும் (HLBC) இணைய செயலி : நாடு முழுவதும் பல்வேறு புவியியல் பகுதிகளை உறுதிசெய்து, செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி வீட்டுப் பட்டியல்களை டிஜிட்டல் முறையில் உருவாக்க உதவும் ஒரு இணைய-வரைபட செயலி இது.

2. ஹெச்எல்ஓ (HLO) மொபைல் செயலி : வீட்டுப் பட்டியல் தரவைச் சேகரித்து பதிவேற்ற கணக்கெடுப்பாளர்களுக்கான பாதுகாப்பான ஆஃப்லைன் மொபைல் செயலி இது. சிஎம்எம்எஸ்-ல் பதிவுசெய்யப்பட்ட கணக்கெடுப்பாளர்கள் மட்டுமே இந்த செயலியை அணுக முடியும். இந்த செயலி பாரம்பரிய காகித வேலைகளை நீக்கி, களத்திலிருந்து நேரடி தரவு பரிமாற்றத்தை செயல்படுத்துகிறது. இதை 16 பிராந்திய மொழிகளில் இயக்க முடியும்.

3. சுய-கணக்கெடுப்பு (SE) தளம் : முதல் முறையாக, சுய-கணக்கெடுப்பு விருப்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தத் தளம் ஒரு பாதுகாப்பான இணைய அடிப்படையிலான வசதியாகும். இதன் அடிப்படையில் கணக்கெடுப்பாளர் தகவலைச் சரிபார்க்க முடியும்.

4. மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CMMS) தளம் : நிர்வாக நிலைகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிட, நிர்வகிக்க, செயல்படுத்த மற்றும் கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு மையப்படுத்தப்பட்ட, இணைய அடிப்படையிலான டிஜிட்டல் தளம் இதுவாகும். வட்டார, மாவட்ட, மாநில நிலைகளில் உள்ள அதிகாரிகள் ஒருங்கிணைந்த தகவல் பலகை மூலம் கணக்கெடுப்பு முன்னேற்றம், கள செயல்திறன் ஆகியவற்றைக் கண்காணிக்க முடியும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027-ன் கீழ், வீடு வீடாகச் சென்று பாதுகாப்பான மொபைல் செயலிகளைப் பயன்படுத்தி தரவு சேகரிக்கப்படும். இதற்காக, நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், பிற மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்த அளவீடு செய்யப்பட்ட தொழில்நுட்ப தத்தெடுப்பு புதுமையையும் உள்ளடக்கிய தன்மையையும் இணைத்து, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு துல்லியமாகவும், பாதுகாப்பாகவும், விரிவானதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.

கட்டம் 1-ல், வீட்டு நிலைமைகள், வீட்டு வசதிகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். கட்டம் 2-ல் நாட்டின் ஒவ்வொரு நபரின் மக்கள்தொகை, சமூக, பொருளாதார விவரங்கள் பதிவு செய்யப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டத்தில், சாதி தொடர்பான கேள்வியும் சேர்க்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235470&reg=3&lang=1

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2235503) வருகையாளர் எண்ணிக்கை : 168