பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் முதல் நமோ பாரத் ஆர்ஆர்டிஎஸ் ரயில் சேவையை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து தில்லி-மீரட் நமோ பாரத் வழித்தடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

உத்தரப்பிரதேசமும் முழு நாடும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பின் புதிய சகாப்தத்தைக் காண்கிறது: பிரதமர்

வளர்ந்த நாடுகள் இப்போது இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளன: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 22 FEB 2026 4:47PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (22.02.2026) மீரட்டில் நமோ பாரத் விரைவு ரயில், மீரட் மெட்ரோ வழித்தடம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை 'வளர்ச்சியடைந்த உத்தரப் பிரதேசம்' மற்றும் 'வளர்ச்சியடைந்த பாரதம்' ஆகியவற்றிற்கான புதிய எழுச்சி என்று அவர் விவரித்தார். இந்த நிகழ்வில் இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் ஒரே மேடையில் இருந்து விரைவு ரயில் மற்றும் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது.

வளர்ச்சியடைந்த இந்தியாவில் போக்குவரத்து இணைப்பு எப்படி இருக்கும் என்பதற்கான அற்புதமான பார்வையை இந்தத் திட்டம் வழங்குகிறது என்று பிரதமர் கூறினார். ஒருங்கிணைந்த நகரங்களுக்குள் பயணத்திற்கு மெட்ரோவையும், "இரட்டை நகரங்கள்" என்ற தொலைநோக்குப் பார்வையை விரைவுபடுத்த நமோ பாரத் ரயில்களையும் பயன்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். இரட்டை இன்ஜின் அரசின் பணிக் கலாச்சாரத்தை பிரதமர் எடுத்துரைத்தார்.

பிரதமர் தமது பயணத்தின் போது, மீரட் மெட்ரோவில் பயணம் செய்து மாணவர்களுடனும் பயணிகளுடனும் கலந்துரையாடினார். இந்த திட்டத்தை மகளிர் சக்தியின் அடையாளமாக பிரதமர் பாராட்டினார். பெரும்பாலான ரயில் ஓட்டுநர்கள், நிலைய கட்டுப்பாட்டு ஊழியர்கள் பெண்கள் என்பதை அவர் குறிப்பிட்டார். நாட்டின் முதல் நமோ பாரத் விரைவு ரயில் சேவைக்காக உத்தரபிரதேச மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

மீரட்டுடனான தமது சிறப்புப் பிணைப்பை நினைவுகூர்ந்த பிரதமர், 2014, 2019, 2024-ம் ஆண்டுகளில் தமது தேசிய தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் இந்தப் புரட்சிகரமான மண்ணிலிருந்தே தொடங்கியதாகக் குறிப்பிட்டார். இந்தப் பகுதியின் விவசாயிகள், கைவினைஞர்கள், தொழில்முனைவோரின் தொடர்ச்சியான ஆசீர்வாதங்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். 2014-க்கு முன்பு, மெட்ரோ சேவைகள் 5 நகரங்களை மட்டுமே அடைந்தன எனவும், ஆனால் இப்போது 25 க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்குகின்றன என்றும் அவர் கூறினார். இதனால் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பாக மாறியுள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்தியாவில் முதல்முறையாக, நமோ பாரத் மற்றும் மெட்ரோ ரயில் ஒரே பாதை மற்றும் நிலையத்தில் இயங்குகிறது என்று திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இந்த ஒருங்கிணைப்பு பயணிகள் நகரத்திற்குள் பயணிக்க அல்லது நேரடியாக தில்லிக்குச் செல்ல அனுமதிக்கிறது என்றும், இதனால் பல தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தில்லியில் வாடகை வீடுகளில் வசிக்க வேண்டிய கட்டாயம் முடிவுக்கு வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

அதிவேக நெடுஞ்சாலைகள், சரக்கு வழித்தடங்கள், சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பில் அரசின் முதலீடு பரந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என அவர் தெரிவித்தார். இந்த திட்டங்கள் புதிய தொழில்கள் மற்றும் வணிகங்களை இந்தப் பிராந்தியத்திற்கு ஈர்க்கின்றன என்று பிரதமர் கூறினார்.

உத்தரப்பிரதேசத்தை உழைப்பு மற்றும் படைப்பாற்றல் மிக்க மாநிலம் என்று வர்ணித்த பிரதமர், மாநிலத்தின் விவசாயிகளும் கைவினைஞர்களும் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் மந்திரத்தை வெற்றிகரமாக உணர்ந்து வருவதாகக் கூறினார். இந்தியாவின் உலகளாவிய வலிமை வளரும்போது, வளர்ந்த நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட ஆர்வமாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

கலவரங்கள் மற்றும் குற்றங்களின் சகாப்தத்திலிருந்து இன்றைய வளர்ச்சிக்கு உத்தரப் பிரதேசம் மாறியதைக் குறிப்பிட்டு பிரதமர் பேசினார். இப்போது குற்றவாளிகள் சிறையில் உள்ளனர் எனவும் மகள்களின் கண்ணியம் பாதுகாக்கப்படுகிறது என்றும் மேலும் மேம்பட்ட சட்டம் ஒழுங்கு ஒரு பெரிய பொருளாதார எழுச்சியையும் உற்பத்தி வளர்ச்சியையும் தூண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

உத்தரப்பிரதேசம் ஒரு உற்பத்தி மையமாக மாற்றப்பட்டு வருகிறது எனவும் சமீபத்தில் மாநிலத்தின் முதல் குறைக்கடத்தி தொழிற்சாலைக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசம் அவசியம் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

***

(Release ID: 2231487)

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2231497) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Gujarati , Odia , Kannada , Malayalam