பிரதமர் அலுவலகம்
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 FEB 2026 6:15PM by PIB Chennai
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், பகிரப்பட்ட கலாச்சாரத்தின் அழகிய பன்முகத்தன்மையை எடுத்துரைத்தார். சமூக கொண்டாட்டத்தில் இணைந்ததற்காக தனது அன்பு நண்பர் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவித்தார்.
800-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் இணைந்து நிகழ்த்திய சாதனை அளவிலான கலாச்சார நிகழ்ச்சி, வரும் ஆண்டுகளில் நினைவுகூரப்படும் என்று பிரதமர் கூறினார். தாம் பிரதமர் ஆவதற்கு முன்பே தானும், மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமும் நண்பர்களாக இருந்ததாக திரு நரேந்திர மோடி கூறினார்.
கடந்த ஆண்டு ஆசியான் உச்சிமாநாட்டிற்காக மலேசியாவுக்கு பயணிக்க முடியாததை நினைவு கூர்ந்த பிரதமர், விரைவில் மலேசியாவுக்கு வருவதாக உறுதியளித்ததாகவும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாகவும் கூறினார். 2026-ம் ஆண்டில் இது தமது முதல் வெளிநாட்டுப் பயணம் என்றும், பண்டிகைக் காலத்தில் இந்திய சமூகத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டார். மலேசியாவில் அனைவரும் சங்கராந்தி, பொங்கல் மற்றும் தைப்பூசத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடியிருப்பார்கள் என்று நம்புவதாகவும் பிரதமர் கூறினார். சிவராத்திரி நெருங்கி வருவதாகவும், அதைத் தொடர்ந்து ரம்ஜான் தொடக்கமும் ஹரி ராயா கொண்டாட்டமும் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்க வாழ்த்துவதாக அவர் கூறினார்.
உலகிலேயே இரண்டாவது பெரிய இந்திய வம்சாவளி சமூகத்தை மலேசியா கொண்டுள்ளது என்று கூறிய திரு நரேந்திர மோடி, இந்திய - மலேசிய இதயங்களை இணைக்கும் பல விஷயங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டார். இந்திய வம்சாவளி சமூகம் இரு நாடுகளையும் இணைக்கும் ஒரு பாலமாகும் என அவர் தெரிவித்தார். இரு நாட்டு மக்களும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்கிறார்கள் எனவும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மிகவும் நன்றாகப் பாடுவதாகவும், அவர் புகழ்பெற்ற எம்ஜிஆரின் தமிழ் பாடல்களை விரும்புவது அற்புதம் என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவளி சமூகத்தினரின் இதயங்களில் இந்தியாவுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். 2001-ம் ஆண்டு நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர், தமது சொந்த மாநிலமான குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இந்திய சமூகத்தைச் சேர்ந்த பலர் உதவி வழங்க ஒன்றிணைந்ததாகவும், அவர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் ஆயிரக்கணக்கான மூதாதையர்கள் இந்தியாவை ஒரு சுதந்திர நாடாக மாற்ற பெரும் தியாகங்களைச் செய்தனர் எனவும் அவர்களில் பலர் இந்தியாவைப் பார்த்ததில்லை என்றும் ஆனால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் முதலில் இணைந்தவர்கள் அவர்கள் என்றும் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவாக, மலேசியாவில் உள்ள இந்திய கலாச்சார மையத்துக்கு அவரது பெயரால் பெயர் வைக்கப்பட்டதாகப் பிரதமர் கூறினார். மலேசியாவில் உள்ள நேதாஜி சேவை மையம் மற்றும் நேதாஜி நல அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவளி சமூகம் பல நூற்றாண்டுகளாக அதன் பாரம்பரியங்களைப் பாதுகாத்து வருகிறது என்பதை பிரதமர் மீண்டும் எடுத்துரைத்தார். மலேசியாவில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்திய மொழிகளில் குழந்தைகளுக்குக் கற்பிக்கின்றன என்று தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார். "திருவள்ளுவர் மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற துறவிகளின் செல்வாக்கு மலேசியாவில் காணப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற தைப்பூச கொண்டாட்டங்கள் தெய்வீகமானவை மற்றும் பழனியில் நடைபெற்ற கொண்டாட்டங்களுடன் ஒப்பிடத்தக்கவை" என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
தமிழ் மொழி, உலகிற்கு இந்தியா அளித்த பரிசு என்று திரு நரேந்திர மோடி கூறினார். "தமிழ் இலக்கியம் கலாச்சாரம் உலகளாவியது, தமிழ் மக்கள் தங்கள் திறமைகள் மூலம் மனிதகுலத்திற்கு சேவை செய்துள்ளனர்" என்று பிரதமர் குறிப்பிட்டார். “இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் முருகன் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்” என்று திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார்.
மலேசியாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சமூகத்திற்கு சேவை செய்து வருவதாகக் கூறிய பிரதமர், மலேசியாவில் பல நூற்றாண்டுகளாக தமிழர்கள் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்த வரலாற்றால் ஈர்க்கப்பட்டு, இந்தியா மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கையை நிறுவியுள்ளது என்றும், பகிரப்பட்ட பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த ஒரு திருவள்ளுவர் மையத்தை அமைக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியா-மலேசியா உறவுகள் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சங்களை எட்டுவதாக பிரதமர் கூறினார். 2024-ம் ஆண்டு மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமின் புது தில்லி பயணத்தை நினைவு கூர்ந்த அவர், இருதரப்பு உறவுகள் விரிவான உத்திசார் ஒத்துழைப்பாக உயர்த்தப்பட்டதைக் குறிப்பிட்டார். இரு நாடுகளும் இப்போது முன்னேற்றம் மற்றும் செழிப்பை நோக்கி கைகோர்த்து நடந்து வருவதாகவும், ஒருவருக்கொருவர் தங்கள் வெற்றிகளை கொண்டாடுவதாகவும் அவர் கூறினார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க 140 கோடி இந்தியர்கள் இலக்கு வைத்துள்ளனர் என்றும், இந்தப் பயணத்தில் வெளிநாடு வாழ் இந்திய சமூகம் ஒரு மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கும் என்றும் பிரதமர் கூறினார். “கோலாலம்பூரில் பிறந்தாலும் சரி, கொல்கத்தாவில் பிறந்தாலும் சரி, மலேசியாவின் மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்தில் தீவிரமாகப் பங்காற்றும் புலம்பெயர்ந்தோரின் இதயங்களில் இந்தியா வாழ்கிறது எனவும் அவர்கள் வளமான மலேசியா மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையை அடைய உதவுவார்கள் என்று குறி தமது உரையை பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224954®=3&lang=2
---¬
(Release ID: 2224954)
AD/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2229921)
வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam