நிதி அமைச்சகம்
மேம்பாட்டை மையமாகக் கொண்ட இந்தியாவின் காலநிலை மாற்ற உத்திகள் பொருளாதார ஆய்வறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
29 JAN 2026 1:34PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025-26-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா மேற்கொண்டு வரும் விரிவான நடவடிக்கைகள் விளக்கப்பட்டுள்ளன. வெறும் இலக்குகளை மட்டும் நிர்ணயிக்காமல், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டையும் உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த தட்பவெப்பநிலை உத்தியை இந்தியா பின்பற்றி வருகிறது.
காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளுதல் என்பதே இந்தியாவின் முக்கியக் கொள்கையாக உள்ளது. இதற்காக நாட்டின் செலவினம் 2016-ல் ஜிடிபியில் 3.7 சதவீதமாக இருந்தது, 2022-ல் 5.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேசிய காலநிலை மாற்ற செயல்திட்டத்தின் கீழ் உள்ள ஒன்பது திட்டங்கள் மூலம் விவசாயம், நீர் மேலாண்மை மற்றும் நகர்ப்புறத் திட்டமிடலில் காலநிலை மாற்ற அபாயங்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன.
எரிசக்தி துறையைப் பொறுத்தவரை, 2025 டிசம்பர் நிலவரப்படி, புதைபடிவம் அல்லாத எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திறன் 51.93 சதவீதத்தை எட்டியுள்ளது. அணுசக்தி உற்பத்தியில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க 2025 டிசம்பரில் 'சாந்தி' சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், லித்தியம் போன்ற முக்கியமான தாதுக்களைப் பெற 'தேசிய முக்கிய தாதுக்கள் இயக்கம்' தொடங்கப்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளிலும் தாதுச் சுரங்கங்களைப் பெற ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் மற்றும் சமூக அளவிலான வாழ்க்கைமுறை மாற்றத்தை வலியுறுத்தும் 'மிஷன் லைஃப்' இக்கொள்கையின் அடித்தளமாக விளங்குகிறது. வளர்ந்து வரும் நாடுகளுக்குத் தேவையான சர்வதேச நிதி உதவி போதிய அளவில் இல்லை என்றும், இந்தியா தனது தட்பவெப்பநிலை சார்ந்த நிதித் தேவைகளை பெரும்பாலும் உள்நாட்டு ஆதாரங்கள் மூலமே பூர்த்தி செய்து வருவதாகவும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
***
(Release ID: 2219915)
TV/VK/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2220882)
வருகையாளர் எண்ணிக்கை : 19