குடியரசுத் தலைவர் செயலகம்
16-வது தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு
வாக்களிப்பது வெறும் அரசியல் செயல்பாடு மட்டுமல்ல; அது ஜனநாயக செயல்பாட்டில் மக்களின் நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும்: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு
प्रविष्टि तिथि:
25 JAN 2026 2:32PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (ஜனவரி 25, 2026) புதுதில்லியில் நடைபெற்ற 16-வது தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நமது ஜனநாயகத்தின் வலிமை வாக்காளர்களின் எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், ஜனநாயக உணர்வின் ஆழத்திலும் உள்ளது என்று கூறினார். வயது முதிர்ந்த வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள், தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் போன்றோர் கூட தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துகிறார்கள் என அவர் தெரிவித்தார். வாக்காளர்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை அவர் பாராட்டினார்.
பொதுமக்களின் பங்கேற்பு, அடித்தள நிலையில் ஜனநாயக உணர்விற்கு நடைமுறை வடிவம் அளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். எந்த ஒரு தகுதியான வாக்காளரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டுக்கான வாக்காளர் தின கருப்பொருளான "எனது இந்தியா, எனது வாக்கு: ஜனநாயகத்தின் மையத்தில் மக்கள்" என்பது நமது ஜனநாயக உணர்வைப் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். இது நமது ஜனநாயக அமைப்பில் வாக்களிக்கும் உரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.
வாக்களிப்பது என்பது வெறும் அரசியல் செயல்பாடு மட்டுமல்ல எனவும் அது ஜனநாயக நடைமுறையில் குடிமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் எனவும் குடியரசுத் தலைவர் கூறினார். மக்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாக வாக்குரிமை உள்ளது என அவர் குறிப்பிட்டார். உரிய வயது வந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் கிடைக்கும் வாக்குரிமை, அரசியல், சமூக நீதி, சமத்துவம் குறித்த நமது அரசியல்சாசன உறுதியை அதிகரிக்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்திய ஜனநாயகம் உலக அரங்கில் ஒரு பெரிய மரியாதையைப் பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார்.
வாக்களிக்கும் உரிமை முக்கியமானது எனவும், உரிய வயது வந்த அனைத்து நபர்களும் தங்கள் அரசியல் சாசன கடமைகளை மனதில் கொண்டு வாக்குரிமையைப் பயன்படுத்துவது முக்கியமானது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். நாடு முழுவதும் புதிதாக வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்ற இளம் வாக்காளர்களுக்குக் குடியரசுத் தலைவர் வாழ்த்துத் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய, மிகவும் துடிப்பான ஜனநாயகத்தில் தீவிரமாகப் பங்கேற்க இந்த அட்டை அவர்களுக்கு விலைமதிப்பற்ற உரிமையை வழங்குகிறது என்று அவர் கூறினார். புதிய வாக்காளர்கள் இந்தியாவின் எதிர்காலத்தின் சிற்பிகள் என்று அவர் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள அனைத்து இளம் வாக்காளர்களும் தங்கள் வாக்களிக்கும் உரிமையை பொறுப்புடன் பயன்படுத்தி தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிப்பார்கள் என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் 2011-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு ஜனநாயகத்தில் வாக்காளர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதையும், மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், ஜனநாயக செயல்பாட்டில் அவர்களின் தீவிர பங்கேற்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
(Release ID: 2218444)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2218676)
आगंतुक पटल : 26