ஆயுஷ்
ஆயுஷ் அமைச்சகம் நாளை சென்னையில் 9-வது சித்த மருத்துவ தினக் கொண்டாட்டங்களைத் தொடங்குகிறது; தேசிய சித்த மருத்துவ தினம் ஜனவரி 6 அன்று கொண்டாடப்படுகிறது
प्रविष्टि तिथि:
02 JAN 2026 10:43AM by PIB Chennai
மத்திய ஆயுஷ் அமைச்சகம், அதன் கீழ் இயங்கும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து, தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்துடன் இணைந்து, 2026-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் 9-வது சித்த மருத்துவ தினத்தைக் கொண்டாடுகிறது. "உலகளாவிய சுகாதாரத்திற்காக சித்த மருத்துவம்" என்ற கருப்பொருளைக் கொண்ட இந்தக் கொண்டாட்டங்கள், சித்த மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் அகத்திய முனிவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6-ம் தேதி சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது.
குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன், 9-வது சித்த மருத்துவ தினக் கொண்டாட்டங்களுக்குத் தலைமை வகித்து தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்வில், மத்திய ஆயுஷ் (தனிப்பொறுப்பு), சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ்; தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன்; மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் பத்மஸ்ரீ வைத்தியா ராஜேஷ் கோடேச்சா; தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் பி. செந்தில்குமார்; தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தின் இயக்குநர் திருமதி எம். விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சித்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். சித்த மருத்துவ சட்டப்பூர்வ அமைப்புகளின் மூத்த உறுப்பினர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர். சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள சுயநிதி சித்த மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்கள் பெருமளவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில், சித்த மருத்துவ முறைக்குச் செய்த அசாதாரண மற்றும் பாராட்டத்தக்க பங்களிப்புகளுக்காக ஐந்து முக்கிய ஆளுமைகளை ஆயுஷ் அமைச்சகம் கௌரவிக்கிறது.
9-வது சித்த மருத்துவ தினமானது, நோய்த்தடுப்பு சுகாதாரம், ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய நல்வாழ்வில் சித்த மருத்துவத்தின் பங்களிப்புகளை வெளிப்படுத்துவதாக கொண்டாடப்படும். சுகாதார சேவை வழங்கல், ஆராய்ச்சி ஒத்துழைப்பு, கல்வி மேம்பாடு ஆகியவற்றில் சித்த மருத்துவத்தின் பங்கை வலுப்படுத்துவதற்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதையும், அவற்றை மீண்டும் உறுதிப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்வு, இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளை தேசிய மற்றும் உலகளாவிய சுகாதாரக் கட்டமைப்புகளில் மேம்படுத்துவதற்கும், புதுமைகளை வலுப்படுத்துவதற்கும், சித்த மருத்துவத்திற்கு பரந்த சர்வதேச அங்கீகாரத்தை உறுதி செய்வதற்கும் ஆயுஷ் அமைச்சகத்தின் அர்ப்பணிப்பை விளக்குவதாக அமையும்.
***
Release ID: 2210686
TV/PKV/KR
(रिलीज़ आईडी: 2210727)
आगंतुक पटल : 63