பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய அளவில் 'வீர பாலகர் தினத்தை' மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அனுசரிக்கிறது - பிரதமரின் தேசிய பாலகர் விருது நாளை வழங்கப்பட உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 25 DEC 2025 10:07AM by PIB Chennai

இந்தியாவின் இளம் வீரர்களின் துணிச்சல், தியாகம், முன்மாதிரியான விழுமியங்களைப் போற்றும் வகையில், நாளை (26 டிசம்பர் 2025) தேசிய அளவில் வீர பாலகர் தினத்தை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடைப்பிடிக்கிறது. அன்று, பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ள குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய பாலகர் விருதுகள் வழங்கப்படும்.

பிரதமரின் தேசிய பாலகர் விருது வீரம், கலை, கலாச்சாரம், சுற்றுச்சூழல், சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க தேசிய விருதாகும். 2025  -ம் ஆண்டில் இந்த விருதுக்காக, 18 மாநிலங்கள் /  யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 20 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2025 டிசம்பர் 26 அன்று காலை 10:00 மணிக்கு புது தில்லியில் உள்ள  விக்யான் பவனில் நடைபெறும் சிறப்பு விழாவில் வழங்குகிறார்.

வீர பாலகர் தினம், 2025 என்ற தேசிய அளவிலான நிகழ்ச்சி, 2025 டிசம்பர் 26 அன்று புது தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, குழந்தைகளிடையே உரையாற்றுகிறார். நாட்டைக்  கட்டமைப்பதில், இளையோரின் பங்களிப்பு குறித்து அவர் விரிவாக எடுத்துரைப்பார். இந்த நிகழ்ச்சி, குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் வீரம், மன உறுதி மற்றும் தன்னலமற்ற சேவை குறித்த நிகழ்வுகளை எடுத்துரைக்கும்.

மேலும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, அதிகாரம்  மற்றும் பொறுப்புணர்வு கொண்ட மக்களாக உருவெடுக்கச் செய்யும் மத்திய அரசின் நிலைப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்தும். இந்த நிகழ்ச்சியில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி வரவேற்புரை ஆற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், பி.எம்.ஆர்.பி விருது பெற்றவர்கள் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவின் வளமான நாகரிகப் பாரம்பரியத்தையும், வீர உணர்வையும் வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகள் இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும்.

வீர பாலகர் தினம், 2025 ஒரு தேசிய அளவிலான நிகழ்ச்சியாக, 2025 டிசம்பர் 26 அன்று மதியம் 12:30 மணி முதல் என்.ஐ.சி வெப்காஸ்ட், டிடி நியூஸ் மற்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208359&reg=3&lang=1        

***

AD/SV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2208621) வருகையாளர் எண்ணிக்கை : 67
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam