பிரதமர் அலுவலகம்
ஜி-20 உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமரைச் சந்தித்துப் பேசினார்
प्रविष्टि तिथि:
23 NOV 2025 9:44PM by PIB Chennai
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் திருமிகு ஜார்ஜியோ மெலோனி-ஐ சந்தித்துப் பேசினார். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கனடாவில் உள்ள கானனாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் நடந்த பயங்கரவாதச் சம்பவம் குறித்து பேசிய இத்தாலி பிரதமர் திருமிகு மெலோனி, இந்தியாவுடன் இத்தாலி துணைநிற்கும் என்று தெரிவித்தார். பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது குறித்து இத்தாலியின் வலுவான நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார். இதன் பின்னணியில், இரு தலைவர்களும் 'பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா-இத்தாலி நாடுகள் இணைந்து செயல்படுவது' என்று ஒப்புக்கொண்டனர். பயங்கரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும், நிதி நடவடிக்கைகளுக்கான பணிக்குழு மற்றும் உலகளவிலான பயங்கரவாத எதிர்ப்பு மன்றம் உட்பட சர்வதேச மற்றும் பல்வேறு தளங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் இந்த கூட்டு நடவடிக்கையின் நோக்கமாகும்.
வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, மக்கள்- தொடர்பு போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் உத்திசார் கூட்டு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இரு தலைவர்கள் மதிப்பீடு செய்தனர். 2025-29 - ம் ஆண்டுக்கான கூட்டு உத்திசார் செயல் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.
இந்த ஆண்டு புதுதில்லி மற்றும் ப்ரெஸியாவில் நடைபெற்ற இரண்டு வர்த்தக மன்றக் கூட்டங்களை வரவேற்பதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர். இதில் பல்வேறு துறைகளின் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவ்விரு நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் போட்டியிடும் தன்மையை மேம்படுத்துவதையும், நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட வர்த்தகம், தொழில்நுட்பம், புதுமைக்கண்டுபிடிப்பு மற்றும் முதலீட்டுப் பங்களிப்பை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து இருவரும் குறிப்பிட்டனர்.
அண்மையில், இத்தாலி நாட்டின் விண்வெளி தூதுக்குழு இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருந்ததை, இரு தலைவர்களும் பாராட்டினர். இது அரசு மற்றும் தனியார் துறைகள், இணைந்து செயல்படுவதற்கான ஒத்துழைப்பை அதிகரிக்கும்.
பரஸ்பரம் நன்மை அளிக்கும் வகையில், இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்தும், 2026-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் தாக்கம் குறித்த உச்சி மாநாடு வெற்றி பெறுவதற்கும் தனது வலுவான ஆதரவை மீண்டும் அளிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் திருமிகு மெலோனி தெரிவித்தார்
***
(Release ID: 2193306)
SS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2195228)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Kannada
,
Assamese
,
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia