பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப்பிரதேசத்தின் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

இந்திய நாகரிகத்தின் முக்கிய மாண்பு, சேவையாகும்: பிரதமர்

ஸ்ரீ சத்ய சாய்பாபா, சேவையை மனித வாழ்க்கையின் மையமாகக் கொண்டிருந்தார்: பிரதமர்

உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல் என்ற உணர்வை மேலும் வலுப்படுத்த உறுதியேற்போம்; வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்க நமது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: பிரதமர்

प्रविष्टि तिथि: 19 NOV 2025 1:30PM by PIB Chennai

ஆந்திரப்பிரதேசத்தின்  புட்டபர்த்தியில்  ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டம், இந்த தலைமுறைக்கான கொண்டாட்டம் மட்டுமல்ல, மாறாக, அது ஒரு தெய்வீக ஆசி என்றும், ஸ்ரீ சாய்பாபா தற்போது மானுட வடிவத்தில் நம்மிடையே இல்லாமல் இருந்தாலும், அவரது போதனைகள், அன்பு மற்றும் சேவை உணர்வு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோருக்கு தொடர்ந்து வழிகாட்டும் என்று பிரதமர் கூறினார். 

உலகம் ஒரே குடும்பம் என்று பொருள்படும் வசுதைவ குடும்பகம் என்ற கோட்பாட்டின் சிறந்த உதாரணமாக ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை அமைந்திருந்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார்.  “இதன் காரணமாக அவரது நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உலகளாவிய அன்பு, அமைதி மற்றும் சேவையின் பிரம்மாண்ட திருவிழாவாக மாறியிருக்கிறது”, என்று தெரிவித்தார். “இந்திய நாகரிகத்தின் முக்கிய மாண்பு, சேவையாகும்”, என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த ஆன்மீக மற்றும் தத்துவ பாரம்பரியங்கள், இறுதியில் இந்த ஒரே கொள்கையைத்தான் சென்றடைகின்றன என்று கூறினார். ஸ்ரீ சத்ய சாய்பாபா, சேவையை மனித வாழ்க்கையின் மையமாகக் கொண்டிருந்தார் என்று வலியுறுத்திய பிரதமர், “அனைவரின் மீதும் அன்பு செலுத்துதல், அனைவருக்கும் சேவையாற்றுதல்”, என்ற அவரது வார்த்தைகளை மேற்கோள் காட்டி, சாய்பாபாவைப் பொருத்தவரை, சேவை என்பது செயலின் மீதான அன்பாக இருந்தது என்று தெரிவித்தார். கல்வி, சுகாதாரம், ஊரக மேம்பாடு மற்றும் பல்வேறு துறைகளில் இயங்கும் சாய்பாபாவின் அமைப்புகள் இந்த தத்துவத்தின் வாழும் உதாரணமாக செயல்படுகின்றன, என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ஏராளமான திட்டங்களால், குடிமக்களின் சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு கணிசமாக வலுவடைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் மக்கள் நல மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், உலக அளவில் பாராட்டப்படுவதாகவும் திரு மோடி தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறி வருவதை எடுத்துரைத்த பிரதமர், இதை அடைவதற்கு குடிமக்களின் தீவிர பங்கேற்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.  ‘உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல்’ என்ற தாரக மந்திரத்தை வலுப்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்தார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு, உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது இன்றியமையாதது, என்று அவர் கூறினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை  வாங்கும் பொழுது,  ஒரு குடும்பம், ஒரு சிறு நிறுவனம் மற்றும் உள்ளூர் விநியோக சங்கிலி வளர்ச்சியடைவதுடன், தற்சார்பு இந்தியாவிற்கு இது வழிவகை செய்கிறது என்று பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் திரு கே. ராம்மோகன் நாயுடு, திரு ஜி. கிஷன் ரெட்டி, திரு பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா மற்றும் இதர பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191605  

***

AD/BR/KR

 


(रिलीज़ आईडी: 2191745) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam