மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான தீர்மானம் மத்திய அமைச்சரவையில் நிறைவேறியது

Posted On: 12 NOV 2025 8:17PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, நவம்பர் 10, 2025 அன்று மாலை தில்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கரவாத சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது. அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததற்காக அமைச்சரவை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.

அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த விவரங்கள்  பின்வருமாறு:

2025 நவம்பர் 10 அன்று மாலை செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பின் மூலம் தேசவிரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான பயங்கரவாத சம்பவத்தை நாடு கண்டுள்ளது. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த உணர்வற்ற வன்முறைச் செயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சரவை தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும்  தெரிவித்துக் கொள்கிறது.

காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அவசரகால உதவியாளர்களின் உடனடி முயற்சிகளையும் அமைச்சரவை பாராட்டுகிறது.

 

அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த இந்த கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலை அமைச்சரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அமைச்சரவை மீண்டும் வலியுறுத்துகிறது.

உலகெங்கிலும் உள்ள பல அரசுகள் வெளியிட்ட ஆதரவு அறிக்கைகளுக்கு அமைச்சரவை தனது பாராட்டுகளைப் பதிவு செய்தது.

துயரமான தருணத்திலும் கூட சரியான நேரத்தில், தைரியத்துடனும் கணிவுடனும் செயல்பட்ட அதிகாரிகள், பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை அமைச்சரவை பாராட்டுகிறது. அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடமை உணர்வு மிகவும் போற்றத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை மிகவும் அவசரமாகவும், தொழில்முறை ரீதியாகவும் தொடர வேண்டும் என்று அமைச்சரவை அறிவுறுத்துகிறது. இதனால் குற்றவாளிகள், அவர்களுக்கு ஒத்துழைத்தவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அரசின் உயர் மட்டங்களில் நிலைமை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.

தேசிய மற்றும் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பிற்கும் அதன் நீடித்த அர்ப்பணிப்புடன், அனைத்து இந்தியர்களின் உயிர்களையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதற்கான அரசின் திடமான உறுதிப்பாட்டை  அமைச்சரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

(Release ID: 2189384)

***

SS/BR/SH


(Release ID: 2189444) Visitor Counter : 25