பிரதமர் அலுவலகம்
இந்தியா - இங்கிலாந்து தலைமைச் செயல் அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
09 OCT 2025 4:41PM by PIB Chennai
மாண்புமிகு பிரதமர் ஸ்டார்மர் அவர்களே,
இந்தியா மற்றும் இங்கிலாந்தின் வணிகத் தலைவர்களே,
வணக்கம்!
இந்தியா - இங்கிலாந்து தலைமைச் செயல் அதிகாரிகள் மன்றக் கூட்டத்தில் பங்கேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. முதலில், பிரதமர் ஸ்டார்மரின் மதிப்புமிக்க சிந்தனைகளுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
சமீபத்திய ஆண்டுகளில், வணிகத் தலைவர்களாகிய உங்களின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் இந்த மன்றம் இந்தியா-இங்கிலாந்து உத்திசார் ஒத்துழைப்பின் முக்கியமான தூணாக உருவெடுத்துள்ளது. இன்று உங்கள் கருத்துகளைக் கேட்ட பிறகு, இயல்பான கூட்டாளிகளாக நாம் இன்னும் அதிக வேகத்துடன் முன்னேறுவோம் என்ற எனது நம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளது. இதற்காக உங்கள் அனைவரையும் முழு மனதுடன் வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
உலகளாவிய நிச்சயமற்ற தன்மையின் மத்தியில், இந்த ஆண்டு இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்துள்ளது. இது இந்தியா-இங்கிலாந்து உறவுகளின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தியுள்ளது. இந்த ஜூலையில் இங்கிலாந்துக்கு நான் மேற்கொண்ட பயணத்தின் போது, நாங்கள் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். இந்த வரலாற்றுச் சாதனைக்கான என் நண்பர், பிரதமர் ஸ்டார்மரின் உறுதிப்பாடு மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு எனது பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் அல்ல, உலகின் இரண்டு முக்கிய பொருளாதாரங்களுக்கு இடையிலான பகிர்ந்து கொள்ளப்பட்ட முன்னேற்றம், செழிப்பு மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகளுக்கான பாதையின் வரைபடமாகும். சந்தை அணுகலுடன், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளிலும் உள்ள சிறு,குறு, நடுத்தர தொழில நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புக்கான வழிகளைத் திறந்து விடும்.
நண்பர்களே,
விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் முழு திறனை அடைவதற்கு உதவ, நான் இந்த கூட்டு ஒத்துழைப்பின் நான்கு புதிய பரிமாணங்களை உங்கள் முன் முன்வைக்க விரும்புகிறேன். இந்த பரிமாணங்கள் அதற்கு மிகவும் பரந்த அடித்தளத்தை வழங்கக்கூடும்:
சி என்பது வணிகம் & பொருளாதாரம்
இ என்பது கல்வி & மக்களுக்கு இடையிலான உறவுகள்
டி என்பது தொழில்நுட்பம் & புதுமையான கண்டுபிடிப்புகள்
ஏ என்பது விருப்பங்கள்
இன்று, எங்களது இருதரப்பு வர்த்தகம் சுமார் 56 பில்லியன் டாலர்களாக உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இதை இரட்டிப்பாக்கும் இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். மேலும், இந்த இலக்கை நாம் குறித்த காலத்திற்கு முன்பே அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
இன்று, இந்தியா கொள்கை நிலைத்தன்மை, கணிக்கக்கூடிய ஒழுங்குமுறை மற்றும் பெரிய அளவிலான தேவையை வழங்குகிறது. இந்த சூழலில், உள்கட்டமைப்பு, மருந்துகள், எரிசக்தி மற்றும் நிதி உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் வாய்ப்புகள் உள்ளன. ஒன்பது இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் விரைவில் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க உள்ளன என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில், கல்வி-தொழில் கூட்டாண்மைகள் நமது புதுமை பொருளாதாரத்தின் மிகப்பெரிய இயக்க சக்தியாக மாறும்.
நண்பர்களே,
இன்று, தொலைத்தொடர்பு, செயற்கை நுண்ணறிவு, உயிரித் தொழில்நுட்பம், குவாண்டம் தொழில்நுட்பம், செமிகண்டக்டர்கள், இணையப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி போன்ற துறைகளில் நமக்கிடையே எண்ணற்ற புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. பாதுகாப்புத் துறையிலும், நாங்கள் இணை வடிவமைப்பு மற்றும் இணை உற்பத்தியை நோக்கி நகர்ந்து வருகிறோம். இப்போது இந்த சாத்தியக்கூறுகள் அனைத்தையும் விரைவாகவும், உறுதியுடனும் வலுவான ஒத்துழைப்புகளாக மாற்ற வேண்டிய நேரம் இது. முக்கியமான கனிமங்கள், அரிய மண் கனிமங்கள் மற்றும் செயலில் உள்ள மருந்து பொருட்கள் போன்ற உத்திசார் துறைகளில் நாம் கட்டமைக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் முன்னேற வேண்டும். இது எங்கள் கூட்டாண்மைக்கு எதிர்கால திசையை வழங்கும்.
நண்பர்களே,
நிதி தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் வலிமையை நீங்கள் அனைவரும் கண்டிருக்கிறீர்கள். இன்று, உலகின் நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் சுமார் 50% இந்தியாவில் நடைபெறுகின்றன. நிதிச் சேவைகளில் இங்கிலாந்தின் நிபுணத்துவத்தை இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புடன் இணைப்பதன் மூலம், மனிதகுலம் முழுவதற்கும் அபரிமிதமான நன்மைகளை நாம் உருவாக்க முடியும்.
நண்பர்களே,
பிரதமர் ஸ்டார்மரும் நானும் எங்கள் உறவுக்கு புதிய ஆற்றலை அளிக்க தொலைநோக்கு பார்வை 2035-ஐ அறிவித்தோம். இது எங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட விருப்பங்களின் வடிவமைப்பு ஆகும். இந்தியா மற்றும் இங்கிலாந்து போன்ற வெளிப்படையான மற்றும் ஜனநாயக சமூகங்களுக்கு இடையே, ஒத்துழைப்பு வளர முடியாத துறை எதுவும் இல்லை. இந்தியாவின் திறமை மற்றும் அளவை இங்கிலாந்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டு மற்றும் நிபுணத்துவத்துடன் இணைப்பது, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளை வழங்கும் திறன் கொண்ட கூட்டு செயல்பாட்டை உருவாக்குகிறது. இந்த விருப்பங்களை இலக்கு வைத்து காலக்கெடுவுடன் நிறைவேற்றுவதில் உங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் முக்கியமானவை.
நண்பர்களே,
உங்களில் பல நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் உள்ளன. இன்று, இந்தியாவின் பொருளாதாரம் தேவையற்ற இணக்கங்களைக் குறைப்பதன் மூலம் வணிகம் செய்வதற்கான எளிமைக்கு வலுவான கவனம் செலுத்தி பரந்த சீர்திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது. சமீபத்தில், நாங்கள் சரக்கு மற்றும் சேவை வரியில் சீர்திருத்தங்களை அறிவித்தோம், இது எங்கள் நடுத்தர வர்க்கம் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக் கதையை மேலும் வலுப்படுத்தும், அதே நேரத்தில், உங்கள் அனைவருக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
நண்பர்களே,
உள்கட்டமைப்பு மேம்பாடு எங்களுக்கு முன்னுரிமையாக இருக்கிறது. நாங்கள் அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பில் முதலீடு செய்கிறோம் மற்றும் 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைவதற்கான எங்கள் இலக்கை நோக்கி விரைவாக நகர்ந்து வருகிறோம். அணு மின் துறையில் தனியார் பங்கேற்புக்கு நாங்கள் அனுமதி அளித்து வருகிறோம் என்பதைப் பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் இந்தியா-இங்கிலாந்து ஒத்துழைப்பு இன்னும் பெரிய உயரங்களை அடைவதற்கான புதிய வழிகளை உருவாக்குகின்றன. பாரதத்தின் வளர்ச்சிப் பயணத்தில் சேர உங்களை நான் அழைக்கிறேன். இந்திய மற்றும் இங்கிலாந்து வணிகத் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து நாம் உலகளாவிய தலைவர்களாக ஆகக்கூடிய துறைகளை அடையாளம் காண முடியும் என்று நான் நம்புகிறேன் - அது நிதி தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன், செமிகண்டக்டர்கள் அல்லது தொடக்க நிறுவனங்களாக இருக்கலாம். இதுபோன்ற இன்னும் பல துறைகள் இருக்கலாம். இந்தியாவும் இங்கிலாந்தும் ஒன்றாக சேர்ந்து உலகளாவிய தரநிலைகளை அமைப்போம்!
இன்று இங்கே வருவதற்கு நேரம் ஒதுக்கியதற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை மிக்க நன்றி.
***
(Release ID: 2176838 )
SS/VK/KPG/KR
(Release ID: 2187323)
Visitor Counter : 12
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam