பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தில்லி யசோபூமியில் நடைபெற்ற இந்தியா மொபைல் காங்கிரஸ் 2025-ல் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 08 OCT 2025 1:19PM by PIB Chennai

என் அமைச்சரவை சக அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, மாநில அமைச்சர் திரு சந்திர சேகர் பெம்மசானி அவர்களே, பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளே, வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் விருந்தினர்களே, தொலைத்தொடர்பு துறையுடன் தொடர்புடைய அனைத்து முக்கிய பிரமுகர்களே, இங்கு வந்துள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என் இளம் நண்பர்களே, தாய்மார்களே, தந்தையர்களே!

இந்தியா மொபைல் காங்கிரஸின் இந்த சிறப்பு பதிப்பிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இப்போது தான், நமது பல தொடக்க நிறுவனங்கள் பல முக்கியமான தலைப்புகளில் தங்கள் விளக்கக்காட்சிகளை வழங்கியுள்ளன. நிதி மோசடி தடுப்பு, குவாண்டம் தொலைத்தொடர்பு, 6ஜி, செயற்கை கண்ணாடி இழை தொடர்பு செமிகண்டக்டர்கள் போன்ற முக்கிய தலைப்புகளில் விளக்கக்காட்சிகளைப் பார்க்கும்போது, இந்தியாவின் தொழில்நுட்ப எதிர்காலம் திறமையான கைகளில் உள்ளது என்ற நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது. இந்த நிகழ்வுக்கும் உங்கள் அனைத்து புதிய முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகள்.

நண்பர்களே,

இந்த ஐஎம்சி நிகழ்வு இனி வெறும் மொபைல் அல்லது தொலைத்தொடர்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. வெறும் சில ஆண்டுகளில், இந்த ஐஎம்சி நிகழ்வு ஆசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தொழில்நுட்ப மன்றமாக மாறியுள்ளது.

நண்பர்களே,

இந்த ஐஎம்சி-யின் வெற்றிக் கதை எப்படி எழுதப்பட்டது? யார் இதை முன்னெடுத்தார்கள்?

நண்பர்களே,

இந்த வெற்றிக் கதையை இந்தியாவின் தொழில்நுட்பம் சார்ந்த சிந்தனை எழுதியுள்ளது, இதை நமது இளைஞர்கள், இந்தியாவின் திறமை முன்னெடுத்துள்ளது, இதற்கு வேகத்தை நமது புதுமை கண்டுபிடிப்பாளர்கள், நமது  புத்தொழில் நிறுவனங்கள் அளித்துள்ளன. நாட்டின் திறமை மற்றும் திறன்களுக்குப் பின்னால் அரசு உறுதியாக நிற்பதால் இது சாத்தியமாகியுள்ளது. தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி மற்றும்  டிஜிட்டல் தகவல் தொடர்பு புதுமை கண்டுபிடிப்பு தளங்கள் போன்ற திட்டங்கள் மூலம், நாங்கள் எங்கள் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குகிறோம். நமது புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை உருவாக்க முடியும் என்பதற்காக, அரசு 5ஜி, 6ஜி, மேம்பட்ட செயற்கை கண்ணாடி இழை தொடர்புமற்றும் டெரா-ஹெர்ட்ஸ் போன்ற தொழில்நுட்பங்களுக்கான சோதனைத் தளங்களுக்கு நிதியளிக்கிறது. புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் நாட்டின் முதன்மை ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையே கூட்டாண்மைகளை நாங்கள் எளிதாக்குகிறோம். இன்று, அரசின் ஆதரவுடன், இந்திய தொழில்துறை, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறை பல பகுதிகளில் ஒன்றாக செயல்படுகின்றன. உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்கி விரிவாக்குவது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம் அறிவுசார் சொத்துக்களை உருவாக்குவது அல்லது உலகளாவிய தரநிலைகளின் மேம்பாட்டிற்கு பங்களிப்பது என்று எதுவாக இருந்தாலும், இந்தியா ஒவ்வொரு பரிமாணத்திலும் முன்னேறி வருகிறது. இந்த முயற்சிகளின் விளைவாகத்தான் இன்று இந்தியா ஒரு திறமைமிக்க  தளமாக உருவெடுத்துள்ளது.

நண்பர்களே,

இந்தியா மொபைல் காங்கிரஸ் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் இந்தியாவின் வெற்றி தற்சார்பு இந்தியா என்ற பார்வையின் பலத்தை பிரதிபலிக்கிறது. உங்களுக்கு நினைவிருக்கும், இந்தியாவில் தயாரிப்போம் என்பதை பற்றி பேசியபோது, சிலர் எப்படி கேலி செய்தார்கள் என்று சந்தேகத்தில் வாழும் மக்கள், இந்தியா எப்படி தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட பொருட்களை தயாரிக்கும் என்று கேட்டார்கள். ஏனென்றால், அவர்களின் காலத்தில், புதிய தொழில்நுட்பம் இந்தியாவை அடைய பல தசாப்தங்கள் ஆனது. நாடு பொருத்தமான பதிலைக் கொடுத்தது. ஒரு காலத்தில் 2ஜி-யுடன் போராடிய நாடு, இன்று 5ஜி அதே நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிட்டத்தட்ட போய்விட்டது. எங்கள் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி 2014-உடன் ஒப்பிடும்போது ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. மொபைல் போன் உற்பத்தி 28 மடங்கும்,  ஏற்றுமதி 127  மடங்கும் வளர்ந்துள்ளது. கடந்த தசாப்தத்தில், மொபைல் போன் உற்பத்தித் துறை மில்லியன் கணக்கான நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. சமீபத்தில், ஒரு பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் தரவு வெளிவந்துள்ளது. இன்று, 45 இந்திய நிறுவனங்கள் அந்த ஒரு பெரிய நிறுவனத்தின் விநியோகச் சங்கிலியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நாட்டில் சுமார் மூன்றரை லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது ஒரு நிறுவனத்தின் புள்ளிவிவரம் மட்டுமல்ல. இன்று, நாட்டில் பல நிறுவனங்கள் பெரிய அளவில் உற்பத்தி செய்கின்றன. இதில் மறைமுக வாய்ப்புகளையும் சேர்த்தால், இந்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை எவ்வளவு பெரியதாக மாறுகிறது என்பதை நாம் கற்பனை செய்யலாம்.

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன்புதான், இந்தியா தனது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4ஜி அலைகற்றையை தொடங்கியது. இது நாட்டிற்கு ஒரு முக்கிய சுதேசி சாதனை. இப்போது இந்தியா இந்த திறனைக் கொண்ட உலகின் ஐந்து நாடுகளின் பட்டியலில் சேர்ந்துள்ளது. டிஜிட்டல் தற்சார்பு, தொழில்நுட்ப சுதந்திரத்தை நோக்கி நாடு எடுத்து வைக்கும் பெரிய படி இது. உள்நாட்டு 4ஜி மற்றும் 5ஜி அலைகற்றை மூலம், நாம் தடையற்ற இணைப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், நாட்டு மக்களுக்கு வேகமான இணையம் மற்றும் நம்பகமான சேவைகளையும் வழங்க முடியும். இதே நோக்கத்திற்காகத்தான், நாம் நமது மேட் இன் இந்தியா 4ஜி அலை வரிசையை தொடங்கிய நாளிலேயே, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 1 லட்சம் 4ஜி கோபுரங்களும் செயல்படுத்தப்பட்டன. உலகின் சில நாடுகள் நாம் 1 லட்சம் கோபுரங்களைப் பற்றி பேசும்போது ஆச்சரியப்படுகின்றன; இந்த எண்ணிக்கைகள் மக்களுக்கு மிகப்பெரியதாகத் தோன்றுகின்றன. இதன் காரணமாக, 2 கோடிக்கும் அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் நாட்டின் டிஜிட்டல் இயக்கத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளனர். டிஜிட்டல் இணைப்பில் பின்தங்கிய பல தொலைதூர பகுதிகள் இருந்தன. இப்போது அத்தகைய அனைத்து பகுதிகளுக்கும் இணைய இணைப்பு சென்றுள்ளது.

நண்பர்களே,

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4ஜி அலைவரிசைக்கு மற்றொரு தனித்துவமான அம்சம் உள்ளது. நமது 4ஜி  அலைக்கற்றை ஏற்றுமதிக்கும் தயாராக உள்ளது. இதன் பொருள், இது இந்தியாவின் வணிக அணுகலுக்கும் ஒரு ஊடகமாக செயல்படும். இது இந்தியா 2030-ல் 'இந்தியா 6ஜி தொழில்நுட்பத்தை' அடைவதற்கும் உதவும்.

நண்பர்களே,

இந்தியாவின் தொழில்நுட்ப புரட்சி கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக முன்னேறியுள்ளது. இந்த வேகம் மற்றும் அளவுக்கு பொருந்தும் வகையில், வலுவான சட்டம் மற்றும் நவீன கொள்கை அடித்தளத்தின் தேவை நீண்ட காலமாக உணரப்பட்டது. இதை அடைய நாங்கள் தொலைத்தொடர்பு சட்டத்தை இயற்றினோம். இந்த ஒற்றைச் சட்டம் இந்திய தந்தி சட்டம் மற்றும் இந்திய வயர்லெஸ் தந்தி சட்டம் ஆகிய இரண்டையும் மாற்றியது. இங்கே அமர்ந்திருக்கும் நீங்களும் நானும் கூட பிறக்காத காலத்தில் இந்தச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. எனவே, கொள்கை மட்டத்தில், 21-ம் நூற்றாண்டு அணுகுமுறைக்கு ஏற்ப ஒரு புதிய அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை இருந்தது, அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம். இந்த புதிய சட்டம் ஒழுங்குபடுத்துபவராக அல்ல, எளிதாக்குபவராக செயல்படுகிறது. ஒப்புதல்கள் எளிதாகிவிட்டன, வழித்தட உரிமை அனுமதிகள் மிக விரைவாக வழங்கப்படுகின்றன. அதன் விளைவுகளும் தெரிகின்றன. செயற்கை இழை கண்ணாடி மற்றும் கோபுர தொடர்புகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. இது எளிமையான வணிகத்துக்கு உதவுகிறது, முதலீடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன, மற்றும் தொழில்துறைகளின் நீண்டகால திட்டமிடல் எளிதாக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

இன்று நாம் நாட்டில் சைபர் பாதுகாப்புக்கு சமமான முன்னுரிமை அளிக்கிறோம். சைபர் மோசடிகளுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன, மற்றும் பொறுப்புணர்வும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புகார் தீர்வு பொறிமுறையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. தொழில்துறை மற்றும் நுகர்வோர் இருவருமே இதிலிருந்து மகத்தான பலன்களைப் பெறுகின்றனர்.

நண்பர்களே,

இன்று, முழு உலகமும் இந்தியாவின் ஆற்றலை அங்கீகரிக்கிறது. உலகில் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு சந்தை நம்மிடம் உள்ளது. இரண்டாவது பெரிய 5ஜி சந்தை இங்கே உள்ளது. சந்தையுடன், நம்மிடம் மனிதவளம், இயங்குதிறன் மற்றும் மனநிலையும் உள்ளது. மனிதவளம் என்று வரும்போது, இந்தியாவிடம் அளவு மற்றும் திறன் இரண்டும் ஒன்றாக உள்ளன. இன்று இந்தியாவில் உலகின் மிகப்பெரிய இளைஞர் மக்கள்தொகை உள்ளது, இந்த தலைமுறை மிகப் பெரிய அளவில் திறமையானதாக உருவாக்கப் படுகிறது. இன்று இந்தியா உலகில் மிக வேகமாக வளரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக உள்ளது.

நண்பர்களே,

இன்று இந்தியாவில், ஒரு ஜிபி வயர்லெஸ் டேட்டாவின் விலை ஒரு கோப்பை டீ யின் விலையை விடக் குறைவு, எனக்கு டீயின் உதாரணத்தைக் கொடுக்கும் பழக்கம் உண்டு. பயனருக்கான டேட்டா நுகர்வில், நாம் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளோம். இதன் பொருள், டிஜிட்டல் இணைப்பு இந்தியாவில் இனி ஒரு சலுகையோ அல்லது ஆடம்பரமோ அல்ல. இது இந்தியர்களின் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

நண்பர்களே,

தொழில்துறை மற்றும் முதலீட்டை வளர்ப்பதற்கான மனநிலையிலும் இந்தியா முன்னணியில் இருப்பதாகத் தோன்றுகிறது. இந்தியாவின் ஜனநாயக அமைப்பு, அரசின் வரவேற்கும் அணுகுமுறை மற்றும் வணிகம் செய்வதற்கான எளிமைபடுத்தப்பட்ட கொள்கைகள் இந்தியாவை முதலீட்டாளர்களக்கு உகந்த நாடாக அறியப்படுத்தியுள்ளன. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் நமது வெற்றி, அரசு டிஜிட்டல் முதலில் என்ற மனநிலைக்கு எவ்வளவு அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதற்கான சான்றாகும். அதனால்தான் நான் முழு நம்பிக்கையுடன் கூறுகிறேன் - இந்தியாவில் முதலீடு செய்ய, புதுமை செய்ய மற்றும் தயாரிக்க இதுவே சிறந்த நேரம்! உற்பத்தி முதல் செமிகண்டக்டர்கள் வரை, மொபைல் முதல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடக்க நிறுவனங்கள் வரை, ஒவ்வொரு துறையிலும், இந்தியாவிடம் நிறைய ஆற்றல் உள்ளது.

நண்பர்களே,

சில வாரங்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 15 அன்று, செங்கோட்டையிலிருந்து இந்த ஆண்டு பெரிய மாற்றங்களின் ஆண்டு, பெரிய சீர்திருத்தங்களின் ஆண்டு என்று நான் அறிவித்தேன். நாங்கள் சீர்திருத்தங்களின் வேகத்தை துரிதப்படுத்துகிறோம், எனவே, நமது தொழில்துறை மற்றும் நமது புதுமையாளர்களின் பொறுப்பும் அதிகரித்து வருகிறது. இதில் நமது புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் நமது இளம் புதுமை கண்டுபிடிப்பாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. தங்கள் வேகம் மற்றும் இடர்பாட்டை எதிர்கொள்ளும் திறன்களால், புத்தொழில் நிறுவனங்கள் புதிய பாதைகளையும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன. அதனால்தான் ஐஎம்சி இந்த ஆண்டு 500-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களை அழைத்து, முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய வழிகாட்டிகளுடன் இணைவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே,

இந்தத் துறையின் வளர்ச்சியில் நமது நிறுவனங்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல  ஸ்திரத்தன்மை, அளவு மற்றும் திசையை வழங்குகிறார்கள். அவர்களிடம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன்கள் உள்ளன. அதனால்தான், புத்தொழில் நிறுவனங்களின் வேகம் மற்றும் நிறுவனங்களின்  அளவு  ஆகிய இரண்டாலும் நாம் இயக்கப்படுவோம்.

நண்பர்களே,

நமது தொழில்துறையுடன் தொடர்புடைய பல தலைப்புகளுக்காக இளம் புத்தொழில் நிறுவனங்கள், நமது கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி சமூகம் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இடையே ஒத்துழைப்பு தேவைப்படுகின்றன. ஐஎம்சி போன்ற ஒரு தளம் இத்தகைய உரையாடலை தொடங்குவதில் பயனுள்ளதாக இருந்தால், ஒருவேளை நமது பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும்.

நண்பர்களே,

உலகளாவிய விநியோகச் சங்கிலியில் எங்கே இடையூறுகள் ஏற்படுகின்றன என்பதை நாம் பார்க்க வேண்டும். மொபைல், தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் முழு தொழில்நுட்ப சூழலியலிலும் உலகளாவிய தடைகள் எங்கெல்லாம் உள்ளதோ, அங்கெல்லாம் உலகிற்கு தீர்வுகளை வழங்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது. உதாரணமாக, குறைக்கடத்தி உற்பத்தித் திறன் சில நாடுகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பதையும், முழு உலகமும் பன்முகப்படுத்தலை தேடிக்கொண்டிருந்தது என்பதையும் நாங்கள் அங்கீகரித்தோம். இன்று, இந்தியா இந்த திசையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியாவில் 10 இடங்களில் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களுக்கான பணி நடைபெற்று வருகிறது.

நண்பர்களே,

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில், உலகளாவிய நிறுவனங்கள், அளவு மற்றும் நம்பகத்தன்மை இரண்டையும் வழங்கும் நம்பகமான கூட்டாளர்களைத் தேடுகின்றன. தொலைத்தொடர்பு வலையமைப்பு உபகரணங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கும் உலகம் நம்பகமான கூட்டாளர்களை விரும்புகிறது. இந்திய நிறுவனங்கள் நம்பகமான உலகளாவிய விநியோகிஸ்தர்கள் மற்றும் வடிவமைப்பு கூட்டாளர்களாக மாற முடியாதா?

நண்பர்களே,

சிப்செட்கள், பேட்டரிகள் முதல் டிஸ்ப்ளேக்கள், சென்சார்கள் வரை மொபைல் உற்பத்தி, வேலைகளில் அதிகமானவை நாட்டிற்குள்ளேயே செய்யப்பட வேண்டும். உலகம் முன்னெப்போதையும் விட அதிகமான தரவை உருவாக்குகிறது. எனவே, சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மை போன்ற பிரச்சினைகள் பெருகிய முறையில் முக்கியமாகிவிடும். தரவு மையங்கள் மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பில் பணிபுரிவதன் மூலம், இந்தியா உலகளாவிய தரவு மையமாக மாற முடியும்.

நண்பர்களே,

வரவிருக்கும் அமர்வுகளில், இந்த அணுகுமுறை மற்றும் இந்த இலக்குடன் நாம் முன்னோக்கி செல்வோம் என்று நம்புகிறேன். மீண்டும் ஒரு முறை, இந்த முழு ஐஎம்சி திட்டத்திற்கும் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.                                                    

***

(Release ID: 2176184 )

SS/VK/AG


(Release ID: 2187296) Visitor Counter : 10