பிரதமர் அலுவலகம்
வேளாண்துறையில் ரூ.35,440 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் 2 முக்கிய திட்டங்கள் தொடங்கும் நிகழ்ச்சியில் விவசாயிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்
प्रविष्टि तिथि:
12 OCT 2025 6:30PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். விவசாயிகள் நலன், வேளாண்மையில் தற்சார்பு, ஊரக உள்கட்டமைப்பை வலுபடுத்துதல் ஆகியவற்றில் பிரதமரின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.
வேளாண்துறையில் ரூ.35,440 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் 2 முக்கிய திட்டங்களைத் தொடங்கும் நிகழ்ச்சிக்கு முன்னதாக விவசாயிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். பிரதமரின் தன் தானிய வேளாண் திட்டத்தை ரூ.24,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் அவர் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.11,440 கோடி ஒதுக்கீட்டுடன் பருப்பு வகைகளில் தற்சார்புக்கான இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார். வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றில் ரூ.5,450 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்பணித்த அதே வேளையில் ரூ.815 கோடி மதிப்பிலான கூடுதல் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிரதமர், காய்கறி உணவை உட்கொள்வோருக்கு பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து தேவைப்படுவதை எடுத்துரைத்தார். பருப்பு வகைகளை பயிரிடுவது விவசாயிகளுக்கு வருவாயை அதிகரிப்பது மட்டுமின்றி நாட்டின் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கும் பங்களிப்பு செய்கிறது என்று அவர் கூறினார். கூட்டு விவசாயம் என்ற யோசனையை ஊக்கப்படுத்திய திரு மோடி, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் ஒருங்கிணைந்து அவர்களின் நிலத்தை ஒரு தொகுப்பாக கொண்டு வந்து உயர் மதிப்புள்ள பயிர்களை தெரிவு செய்ய கவனம் செலுத்த முடியுமென்று கூறினார். இதன் மூலம் உற்பத்தி அதிகரிப்பதோடு செலவு குறையுமென்றும் சந்தைகளுக்கு கொண்டு செல்வது எளிதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முத்துச்சோளம், கம்பு போன்ற சிறுதானியங்கள் சாகுபடிக்கு அரசின் ஊக்கம் பற்றி பிரதமர் எடுத்துரைத்தார். இதையடுத்து கருத்து தெரிவித்த விவசாயி ஒருவர் சிறுதானியம் பயிரிடுதல் தொடர்ந்து நடைபெறுவதாகவும் சந்தையின் தேவை மற்றும் சுகாதார விழிப்புணர்வு அதிகரித்திருப்பதன் காரணமாக இவை பிரபலம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் சிறுதானியம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றும் இதற்கு உலகலாவிய சந்தை வெகுவேகமாக வளர்ந்து வருகிறது என்றும் திரு மோடி தெரிவித்தார்.
காஷ்மீரைச் சேர்ந்த ஆப்பிள் விவசாயி ஒருவர் பேசுகையில் ரயில் போக்குவரத்து ஆப்பிள் கொண்டு செல்வதில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார். 60,000 டன்னுக்கும் கூடுதலான பழங்களும், காய்கறிகளும் தில்லிக்கும் அதற்கு அப்பாலுள்ள பகுதிகளுக்கும் இதன் மூலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் பாரம்பரியமான சாலைகளுடன் ஒப்பிடுகையில் நேரமும், செலவும் குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த நிகழ்ச்சியின் போது பிரதமருடன் கலந்துரையாடினர். இதற்கு பல விவசாயிகள் உணர்ச்சி ததும்ப நன்றி தெரிவித்ததுடன், பிரதமரை சந்திப்பதை இயற்கை மருத்துவம் போல் உணர்வதாகவும், ஒரு தலைவரிடம் பேசுவது போல் உணராமல் சொந்த வீட்டில் ஒருவருடன் பேசுவது போல் உணர்வதாகவும் கூறினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178330
***
SS/SMB/AS/KPG/KR
(रिलीज़ आईडी: 2187274)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam