பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டில் பிரதமரின் உரை

Posted On: 03 NOV 2025 12:37PM by PIB Chennai

நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட், நோபல் பரிசு வென்ற சர் ஆண்ட்ரே கெய்ம், அனைத்து விஞ்ஞானிகள்,  கல்வியாளர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிற பிரமுகர்களே,  தாய்மார்களே!

இன்றைய நிகழ்வு அறிவியலுடன் தொடர்புடையது, ஆனால் முதலில் நான் கிரிக்கெட்டில் இந்தியாவின் அற்புதமான வெற்றியைப் பற்றிப் பேசுகிறேன். முழு இந்தியாவும் அதன் கிரிக்கெட் அணியின் வெற்றியில் மிகவும் மகிழ்ச்சியடைகிறது. இது இந்தியாவின் முதல் மகளிர் உலகக் கோப்பை. நமது மகளிர் கிரிக்கெட் அணியை நான் வாழ்த்துகிறேன். உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். உங்கள் வெற்றி நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களை ஊக்குவிக்கும்.

நண்பர்களே,

நேற்று இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் தனது கொடியை உயர்த்தியது. நேற்று, இந்திய விஞ்ஞானிகள் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவினார்கள். இந்தத்  திட்டத்தில் தொடர்புடைய அனைத்து விஞ்ஞானிகளையும், இஸ்ரோவையும் நான் வாழ்த்துகிறேன்.

நண்பர்களே,

இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் ஒரு குறிப்பிடத்தக்க நாள். 21-ம் நூற்றாண்டின் இந்த நேரத்தில், வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை குறித்து சிந்தனை செய்ய உலகம் முழுவதிலுமிருந்து நிபுணர்கள் ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும் அவர்கள் ஒன்றாக திசையைக் காட்ட வேண்டும். இந்தத் தேவை ஒரு யோசனையைத் தூண்டியது. இந்த யோசனையிலிருந்து இந்த மாநாட்டின் பார்வை வந்தது. இன்று இந்த மாநாட்டின் வடிவத்தில் அந்தப் பார்வை வடிவம் பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பல அமைச்சகங்கள், தனியார் துறை, புத்தொழில்  நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் இந்த முயற்சியில் ஒன்றுபட்டுள்ளனர். இன்று நம்மிடையே ஒரு நோபல் பரிசு பெற்றவரும் இருப்பது நமக்கு  மரியாதைக்குரிய விஷயம். உங்கள் அனைவரையும் நான் மிகவும் வாழ்த்துகிறேன். இந்த மாநாட்டிற்கு உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டின் இந்தச் சகாப்தம் முன்னெப்போதும் இல்லாத  மாற்றங்களின் காலம். இன்று நாம் உலகளாவிய ஒழுங்கில் ஒரு புதிய மாற்றத்தைக் காண்கிறோம். இந்த மாற்றத்தின் வேகம் நேரியல் அல்ல, மாறாக அதிவேகமானது. இந்தச் சிந்தனையுடன், இன்று இந்தியா வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் முன்னெடுத்துச் செல்கிறது, மேலும் அதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. இப்போது, ஆராய்ச்சி நிதி ஒரு எடுத்துக்காட்டு. நீங்கள் அனைவரும் 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற தொலைநோக்குப் பார்வையை நீண்ட காலமாக அறிந்திருக்கிறீர்கள். ஆராய்ச்சியில் கவனம் செலுத்தும் அதே வேளையில், ஜெய் விஞ்ஞான் மற்றும் ஜெய் அனுசந்தனையும் அதில் சேர்த்துள்ளோம். எங்கள் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை அதிகரிக்க அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை உருவாக்கியுள்ளோம். இதனுடன், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்கத் திட்டத்தையும் நாங்கள் தொடங்கியுள்ளோம். இதற்காக ரூ. 1 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.1 லட்சம் கோடி மோடியிடம் இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம்.  இந்த 1 லட்சம் கோடி ரூபாய் உங்களுக்கானது, உங்கள் திறன்களை அதிகரிக்க, உங்களுக்குப் புதிய வாய்ப்புகளின் கதவுகளைத் திறக்க. தனியார் துறையிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதே எங்கள் முயற்சி. முதல் முறையாக,  அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு மூலதனம் கிடைக்கிறது.

நண்பர்களே,

இந்தியாவில் புதுமைகளுக்கான நவீன சூழல் அமைப்பை உருவாக்க, ஆராய்ச்சி செய்வதை எளிதாக்குவதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தத் திசையில், எங்கள் அரசு நிதி விதிகள் மற்றும் கொள்முதல் கொள்கைகளில் பல சீர்திருத்தங்களைச் செய்துள்ளது. முன்மாதிரிகள் ஆய்வகத்திலிருந்து சந்தைக்கு விரைவாக நகரும் வகையில், ஒழுங்குமுறைகள், ஊக்கத்தொகைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளிலும் நாங்கள் சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம்.

நண்பர்களே,

இந்தியாவை ஒரு புதுமை மையமாக மாற்ற கடந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் முடிவுகளின் தாக்கம் இப்போது தெளிவாகத் தெரிகிறது. மிகுந்த திருப்தியுடன் சில புள்ளிவிவரங்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். நான் இயல்பாகவே எளிதில் திருப்தி அடையும் நபர் இல்லை என்றாலும். ஆனால் என்னுடைய இந்த திருப்தி கடந்த காலச் சூழலில் உள்ளது; எதிர்காலச் சூழலில் எனக்கு இன்னும் நிறைய திருப்தி உள்ளது. நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். கடந்த பத்தாண்டுகளில், எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவு இரட்டிப்பாகியுள்ளது, இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கை 17 மடங்கு அதிகரித்துள்ளது. புத்தொழில்  நிறுவனங்களில் கூட, இந்தியா இப்போது உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பாக மாறியுள்ளது. இன்று, எங்கள் 6,000-க்கும் மேற்பட்ட ஆழமான தொழில்நுட்ப புத்தொழில்  நிறுவனங்கள் சுத்தமான ஆற்றல், மேம்பட்ட பொருட்கள் போன்ற துறைகளில் செயல்படுகின்றன. இந்தியாவின் செமி கண்டக்டர்  துறையும் இப்போது வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. உயிரி பொருளாதாரத்தைப் பற்றிப் பேசுகையில், 2014 -ல் இது 10 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருந்தது, இன்று அது சுமார் 140 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

நண்பர்களே,

கடந்த சில ஆண்டுகளில், நாங்கள் பல சூரிய உதய களங்களிலும் நகர்ந்துள்ளோம். பசுமை ஹைட்ரஜன், குவாண்டம் கம்ப்யூட்டிங், ஆழ்கடல் ஆராய்ச்சி, முக்கியமான கனிமங்கள் - இந்த அனைத்து களங்களிலும் இந்தியா தனது 'நம்பிக்கைக்குரிய இருப்பை' பதிவு செய்துள்ளது.

நண்பர்களே,

அறிவியல் அளவு பெறும்போது, புதுமை உள்ளடக்கியதாக மாறும்போது, தொழில்நுட்பம் மாற்றத்தைக் கொண்டுவரும்போது, பெரிய சாதனைகளுக்கான அடித்தளம் வலுவாகவும் தயாராகவும் மாறும். கடந்த 10–11 ஆண்டுகளில் இந்தியாவின் பயணம் இந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்தியா இனி தொழில்நுட்பத்தின் நுகர்வோர் அல்ல, ஆனால் தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றத்தின் முன்னோடியாக மாறியுள்ளது. கோவிட் காலத்தில், சாதனை நேரத்தில் உள்நாட்டு தடுப்பூசிகளை உருவாக்கினோம். நாங்கள் மிகப்பெரிய தடுப்பூசி திட்டப் பணியைச் செயல்படுத்தினோம்.

நண்பர்களே,

இவ்வளவு பெரிய அளவில் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது எப்படி சாத்தியம்? இன்று, உலகின் முதல் மற்றும் மிகவும் வெற்றிகரமான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு யாரிடமாவது இருந்தால், அந்த நாடு இந்தியா என்பதால் இது சாத்தியமானது. நாங்கள் 2 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளை ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைத்துள்ளோம். நாங்கள் மொபைல் டேட்டாவை ஜனநாயகப்படுத்தியுள்ளோம்.

நண்பர்களே,

பல ஆண்டுகளாக, எங்கள் விண்வெளித் திட்டம் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ள நிலையில், எங்கள் விவசாயிகள் மற்றும் மீனவர்களையும் விண்வெளி அறிவியலின் நன்மைகளுடன் இணைத்துள்ளோம். நிச்சயமாக, இந்த அனைத்து சாதனைகளுக்கும் நீங்கள் அனைவரும் பங்களித்திருக்கிறீர்கள்.

நண்பர்களே,

புதுமை உள்ளடக்கியதாக இருக்கும்போது, அதன் முக்கிய பயனாளிகளும் அதன் தலைவர்களாக மாறுகிறார்கள். இந்தியப் பெண்கள் இதற்கு மிகப்பெரிய உதாரணம். உலகில் இந்தியாவின் விண்வெளிப் பயணங்கள் பற்றிப் பேசப்படும்போதெல்லாம், இந்திய பெண் விஞ்ஞானிகள் பற்றி நிறைய விவாதங்கள் உள்ளன. காப்புரிமை தாக்கல் செய்வதில் கூட, ஒரு தசாப்தத்திற்கு முன்பு இந்தியாவில் பெண்கள் ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் காப்புரிமைகளின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாகவே இருந்தது. இப்போது அது ஆண்டுதோறும் 5 ஆயிரத்துக்கும் அதிகமாக எட்டியுள்ளது. ஸ்டெம் (STEM) கல்வியில் கூட, பெண்களின் பங்கு சுமார் 43 சதவீதம் ஆகும், இது உலக சராசரியை விட அதிகம். உலகின் வளர்ந்த நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சருடன் நான் லிஃப்டில் ஏறிக்கொண்டிருந்தேன். எனவே, நாங்கள் இருவரும் லிஃப்டில் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் என்னிடம் கேட்டார், "இந்தியாவில் பெண்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைத் தொடர்கிறார்களா?" அதாவது, அது அவரது மனதில் ஒரு பெரிய அதிசயமாக இருந்தது. என் நாட்டில் இவ்வளவு எண்கள் இருப்பதாக நான் அவரிடம் சொன்னபோது, அவர் அதிர்ச்சியடைந்தார். "இந்தியாவின் மகள்கள் இதை நிரூபித்துள்ளனர். இன்றும் கூட, நம் மகள்கள் மற்றும் சகோதரிகள் எத்தனை பேர் இங்கே அமர்ந்திருக்கிறார்கள் என்பதை நான் காண்கிறேன். இந்தப் புள்ளிவிவரங்கள் இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெண்கள் எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறார்கள் என்பதை நமக்குச் சொல்கின்றன.

நண்பர்களே,

வரலாற்றில் பல தலைமுறைகளுக்கு உந்துதலை வழங்கும் சில தருணங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு, நம் குழந்தைகள் சந்திரயானின் பயணத்தைக் கண்டனர், அதன் வெற்றியையும் கண்டனர், மேலும் வெற்றி அவர்களை அறிவியலை நோக்கி பெரிய அளவில் ஈர்க்க ஒரு காரணமாகவும் வாய்ப்பாகவும் மாறியது. அவர்கள் தோல்வி மற்றும் வெற்றி இரண்டையும் கண்டனர். குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவின் சமீபத்திய விண்வெளி நிலைய வருகை குழந்தைகளிடையே ஒரு புதிய ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. புதிய தலைமுறையில் எழுந்துள்ள இந்த ஆர்வத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை நோக்கி நாம் எவ்வளவு பிரகாசமான இளைஞர்களை வழிநடத்த முடியுமோ, அவ்வளவு சிறப்பாக இருக்கும். இந்தத் தொலைநோக்குப் பார்வையுடன், நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களில், 1 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வம் மற்றும் படைப்பாற்றலைப் பரிசோதித்து வருகின்றனர். மேலும் நீங்கள் இதைப் பார்ப்பதை அறிந்து மகிழ்ச்சியடைவீர்கள் இந்த ஆய்வகங்களின் வெற்றிக்குப் பிறகு, 25 ஆயிரம் புதிய அடல் டிங்கரிங் ஆய்வகங்களையும் உருவாக்க உள்ளோம். கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் நூற்றுக்கணக்கான புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டுள்ளன, மேலும் ஏழு புதிய ஐஐடிகள் மற்றும் 16 டிரிபிள் ஐடிகளும் நிறுவப்பட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கையில், இளைஞர்கள் இப்போது தங்கள் உள்ளூர் மொழிகளில் அறிவியல் மற்றும் பொறியியல் போன்ற ஸ்டெம் படிப்புகளைத் தொடர முடியும் என்பதை உறுதி செய்துள்ளோம்.

நண்பர்களே,

எங்கள் அரசின் பிரதமரின் ஆராய்ச்சி பெல்லோஷிப் இளம் ஆராய்ச்சியாளர்களிடையே மிகவும் வெற்றிகரமாக உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் இளைஞர்களுக்கு பெரிதும் உதவியுள்ளன. இப்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10,000 பெல்லோஷிப்களை வழங்குவதன் மூலம் நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

நண்பர்களே,

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மாற்றும் சக்தியைப் புரிந்துகொள்வது, அவற்றை நெறிமுறை மற்றும் உள்ளடக்கியதாக மாற்றுவது மிகவும் முக்கியம். உதாரணமாக, செயற்கை நுண்ணறிவைப் பாருங்கள், இன்று சில்லறை விற்பனை முதல் தளவாடங்கள் வரை, வாடிக்கையாளர் சேவை முதல் குழந்தைகளின் வீட்டுப்பாடம் வரை எல்லா இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்தியாவில், செயற்கை நுண்ணறிவின் சக்தியை சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும் பயனுள்ளதாக மாற்றுகிறோம். செயற்கை நுண்ணறிவு இயக்கத்தில் ரூ 10,000 கோடி முதலீடு செய்யப்படுகிறது.

நண்பர்களே,

இன்று, நெறிமுறை மற்றும் மனித மையப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கட்டமைப்பை இந்தியா வடிவமைத்து வருகிறது. எங்கள் வரவிருக்கும் செயற்கை நுண்ணறிவு ஆளுகை கட்டமைப்பு இந்தத் திசையில் ஒரு முக்கிய படியாக இருக்கும். புதுமை மற்றும் பாதுகாப்பை ஒன்றாக வளர்ப்பதே இதன் நோக்கம். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியா உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்தும்போது, உள்ளடக்கிய, நெறிமுறை மற்றும் மனித மையப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவை நோக்கிய முயற்சிகள் புதிய உத்வேகத்தைப் பெறும்.

நண்பர்களே,

வளர்ந்து வரும் பகுதிகளில் இரட்டை ஆற்றலுடன் நாம் பணியாற்ற வேண்டிய நேரம் இது. வளர்ந்த இந்தியா என்ற நமது இலக்கை அடைவதற்கும் இது மிகவும் முக்கியமானது. உங்களுடன் சில யோசனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்; உணவுப் பாதுகாப்பைத் தாண்டி நாம் ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கி நகர வேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் உலகிற்கு உதவும் அடுத்த தலைமுறை உயிரி-வளர்ச்சியடைந்த பயிர்களை நாம் உருவாக்க முடியுமா? குறைந்த விலை மண் ஆரோக்கிய மேம்பாட்டாளர்கள் மற்றும் உயிரி உரங்களில் இதுபோன்ற கண்டுபிடிப்புகளைக் கொண்டு வர முடியுமா, அவை ரசாயன உள்ளீடுகளுக்கு மாற்றாக மாறி மண் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியுமா? தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவம் மற்றும் நோய் கணிப்புக்கான புதிய திசைகளை வழங்க இந்தியாவின் மரபணு பன்முகத்தன்மையை சிறப்பாக செயல்படுத்த  முடியுமா? சுத்தமான ஆற்றலில் புதிய மற்றும் மலிவு விலையில் கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியுமா?  ஒவ்வொரு துறையிலும், உலகளவில் நாம் எந்த முக்கியமான உள்ளீடுகளைச் சார்ந்துள்ளோம் என்பதையும், அவற்றில் எவ்வாறு தன்னம்பிக்கை அடைய முடியும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

நண்பர்களே,

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகத்துடன் தொடர்புடைய நீங்கள் அனைவரும், இந்தக் கேள்விகளைத் தாண்டிச் சென்று புதிய சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். உங்களிடம் யோசனைகள் இருந்தால், நான் உங்களுடன் இருக்கிறேன். ஆராய்ச்சிக்கு நிதியளிப்பதற்கும் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கும் எங்கள் அரஉ முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இந்த மாநாட்டில் ஒரு கூட்டுத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். இந்த மாநாடு இந்தியாவின் புதுமைப் பயணத்தை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

ஜெய் விஞ்ஞான், ஜெய் அனுசந்தன்.

மிக்க நன்றி.

****

(Release ID:2185739)

AD/PKV/SH


(Release ID: 2186035) Visitor Counter : 5