பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அக்டோபர் 16-ம் தேதி பிரதமர் ஆந்திரப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்

கர்னூலில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

தொழில்கள், மின்சாரம், சாலைகள், ரயில்வே, பாதுகாப்பு உற்பத்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திட்டங்கள் அமைந்துள்ளன

ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரமராம்பிகை மல்லிகார்ஜுன சுவாமி வர்லா தேவஸ்தானத்தில் பிரதமர் பூஜை மற்றும் ஸ்வாமி தரிசனம் செய்வார்

பேரரசர் சத்ரபதி சிவாஜியின் புகழை நினைவு கூரும் வகையில் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி மையத்தை பிரதமர் நேரில் பார்வையிடுவார்

प्रविष्टि तिथि: 14 OCT 2025 5:48PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, அக்டோபர் 16-ம் தேதி ஆந்திரப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்வார். நந்தையால் மாவட்டத்தின் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரமராம்பிகை மல்லிகார்ஜுன சுவாமி வர்லா தேவஸ்தானத்தில் முற்பகல் 11.15 மணிக்கு பிரதமர் பூஜை மற்றும் ஸ்வாமி தரிசனம் செய்வார். அதன் பிறகு பகல் 12.15 மணி அளவில் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி மையத்தை பிரதமர் நேரில் பார்வையிடுவார்.

அதைத்தொடர்ந்து கர்னூலுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர், அங்கு பிற்பகல் 2:30 மணியளவில் ரூ. 13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இதை முன்னிட்டு பொதுக்கூட்டம் ஒன்றிலும் பிரதமர் உரையாற்றுவார்.

ஸ்ரீசைலத்தில் பிரதமர்

12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகவும், 52 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்கும் ஸ்ரீ பிரமராம்பிகை மல்லிகார்ஜுன சுவாமி வர்லா தேவஸ்தானத்தில் பிரதமர் பூஜை செய்து மற்றும் சுவாமி தரிசனம் செய்வார். தியான மண்டபம் மற்றும் புகழ்பெற்ற கோட்டைகளின் மாதிரிகளை உள்ளடக்கிய ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி மையம் என்ற நினைவுச் சின்னத்தையும் பிரதமர் நேரில் சென்று பார்வையிடுவார். இந்த வளாகத்தின் மையத்தில் ஆழ்ந்த தியான நிலையில் இருக்கும் பேரரசர் சத்ரபதி சிவாஜியின் உருவச்சிலை இடம்பெற்றுள்ளது.

கர்னூலில் பிரதமர்

ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். தொழில்கள், மின்சாரம், சாலைகள், ரயில்வே,  பாதுகாப்பு உற்பத்தி,  பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திட்டங்கள் அமைந்துள்ளன. மாநிலத்தில் பிராந்திய உள்கட்டமைப்பை மேம்படுத்தி, தொழில்மயமாக்கலை ஊக்குவித்து, உள்ளடக்கிய சமூகப் பொருளாதார வளர்ச்சியை இயக்கும் அரசின் உறுதிப்பாட்டை இந்தத் திட்டங்களின் அறிமுகம் பிரதிபலிக்கிறது.

பிரதமர் துவக்கி வைக்கும் பல்வேறு திட்டங்களில், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூரில் சுமார் ரூ.200 கோடி முதலீட்டில் நிறுவப்பட்ட இந்தியன் ஆயிலின் 60 TMTPA (ஆண்டுக்கு ஆயிரம் மெட்ரிக் டன்) சமையல் எரிவாயு உருளைகள் நிரப்பும் ஆலையும் ஒன்று. இந்த ஆலை ஆந்திரப் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களுடன்  தமிழ்நாட்டின் இரண்டு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவின் ஒரு மாவட்டத்தில் 80 விநியோகஸ்தர்கள் மூலம் 7.2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும். இந்த பிராந்தியத்தில் உள்ள வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு நம்பகமான சமையல் எரிவாயு விநியோகத்தை உறுதி செய்வதில் இந்த ஆலை முக்கிய பங்கு வகிக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178999

(Release ID: 2178999)

 

AD/BR/SH


(रिलीज़ आईडी: 2179161) आगंतुक पटल : 55
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam