பிரதமர் அலுவலகம்
மங்கோலிய அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட செய்தி அறிக்கையின் தமிழாக்கம்
Posted On:
14 OCT 2025 3:23PM by PIB Chennai
மேன்மைதங்கிய அதிபர் குரேல்சுக்,
இருநாடுகளின் பிரதிநிதிகள்,
ஊடக நண்பர்கள் ஆகியோருக்கு
வணக்கம்!
அதிபர் குரேல்சுக் மற்றும் அவரின் தூதுக்குழுவினரை இந்தியாவுக்கு வரவேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஆறு ஆண்டுகளுக்குப் பின் மங்கோலிய அதிபர் இந்தியாவுக்கு வருகை தருவது மிகச் சிறப்பான தருணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-மங்கோலியா தூதரக உறவுகளின் எழுபது ஆண்டுகளையும், பாதுகாப்பு கூட்டாண்மையின் பத்து ஆண்டுகளையும் கொண்டாடும் தருணத்தில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இதனைக் குறிக்கும் வகையில் எங்களின் பகிரப்பட்ட பாரம்பரிய, பன்முகத்தன்மை கொண்ட, வலுவான நாகரீக உறவுகளை எடுத்துரைக்கும் வகையில் கூட்டாக அஞ்சல் தலையை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
நண்பர்களே,
“தாயின் பெயரால் ஒரு மரக்கன்று” இயக்கத்தின் கீழ் மரக்கன்று நடும் நிகழ்ச்சியுடன் எங்களின் சந்திப்பு இன்று தொடங்கியது. அதிபர் குரேல்சுக் அவரது மறைந்த தாயாரை கௌரவிக்கும் விதமாக ஒரு ஆலமரக்கன்றினை நட்டார். இது எங்களின் ஆழமான நட்புணர்வு மற்றும் வரவிருக்கும் தலைமுறைகளுக்கான எங்களின் பகிரப்பட்ட சுற்றுச்சூழல் உறுதிப்பாட்டின் அடையாளமாக இருக்கும்.
நண்பர்களே,
பத்தாண்டுகளுக்கு முன் எனது மங்கோலியா பயணத்தின் போது எங்களின் கூட்டாண்மையை பாதுகாப்பு கூட்டாண்மையாக நாங்கள் உயர்த்தினோம். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தக் கூட்டாண்மை அனைத்து நிலைகளிலும் வலுவாகவும், ஆழமாகவும் வளர்ந்துள்ளது.
எங்களின் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து ஒத்துழைப்பும் சீராக வலுவடைந்து வருகிறது. பயிற்சித் திட்டங்கள் முதல், தூதரகத்தில் பாதுகாப்பு இணைப்புக்கான நியமனம் வரை பல புதிய முன் முயற்சிகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். மங்கோலியாவின் எல்லைப்பாதுகாப்பு படைகளுக்கு புதிய திறன் கட்டமைப்பு திட்டத்தையும் இந்தியா தொடங்கவுள்ளது.
நண்பர்களே,
உலகளாவிய பிரச்சனைகளுக்கான எங்களின் அணுகுமுறை பகிரப்பட்ட மாண்புகள் அடிப்படையிலானவை. சர்வதேச அரங்குகளில் நாங்கள் நெருக்கமான கூட்டாளிகளாக இருக்கிறோம். சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, சட்டங்களின் அடிப்படையிலான இந்திய பசிபிக் பிராந்தியத்திற்கு எங்களின் ஆதரவு உள்ளது. நாங்கள் ஒன்றிணைந்து உலகளாவிய தெற்கின் குரலை உயர்த்தவும் பாடுபடுகிறோம்.
நண்பர்களே,
இந்தியா-மங்கோலியா இடையேயான உறவு ராஜீய உறவை விடவும் மேலானது. அது ஆழமான, ஆத்மார்த்தமான, ஆன்மீக ரீதியிலான உறவாகும். எங்கள் கூட்டாண்மையின் ஆழமும், பரப்பும் மக்களிடையேயான உறவுகளில் பிரதிபலிக்கிறது.
எங்களின் நாடுகள் தொன்மையான புத்தமத பிணைப்பை பகிர்ந்துகொள்கின்றன. இதனால்தான் நாங்கள் ஆன்மீக உடன்பிறப்புகள் என்றும் அழைக்கப்படுகிறோம். இந்த பாரம்பரியத்தையும், எங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளையும் மேலும் வலுப்படுத்த பல முக்கிய முடிவுகளை நாங்கள் இன்று மேற்கொண்டுள்ளோம். பகவான் புத்தரின் இரண்டு மகா சீடர்களான சாரிபுத்ரா, முட்கல்யாயனா ஆகியோரின் புனித நினைவு சின்னங்கள் அடுத்த ஆண்டு இந்தியாவில் இருந்து மங்கோலியாவுக்கு அனுப்பப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
புத்தமத நூல்களை ஆழமாக ஆய்வதற்கு உதவியாகவும், தொன்மையான, பாரம்பரிய ஞானத்தைத் தொடரவும் கண்டன் மடாலயத்திற்கு சமஸ்கிருத ஆசிரியர் ஒருவரையும் நாங்கள் அனுப்பவிருக்கிறோம். பத்து லட்சம் தொன்மையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை விரைவில் தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். மங்கோலியாவில் புத்தமதத்தின் பங்களிப்புக்கு நாளந்தா பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பை வலுப்படுத்த நாளந்தாவுடன் கண்டன் மடாலயத்தை இணைக்க இன்று நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.
மத்திய அரசுகளுக்கு அப்பால் எங்களின் உறவு செல்கிறது. லடாக் தன்னாட்சி மலைப் பிரதேச மேம்பாட்டு கவுன்சில், மங்கோலியாவின் அர்க்கங்கை மாகாணம் இடையே இன்று கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் எங்களின் கலாச்சார பிணைப்புகளுக்கு புதிய ஊக்கம் அளிக்கும்.
நண்பர்களே,
நாங்கள் எல்லை ஒன்றை பகிர்ந்துகொள்ளவில்லை என்றபோதும், மங்கோலியாவை இந்தியா எப்போதும் நெருக்கமான அண்டை நாடாகவே கருதுகிறது. மக்களுக்கு இடையேயான உறவுகளை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம். மங்கோலிய குடிமக்களுக்கு கட்டணமின்றி இ-விசாக்கள் வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். மங்கோலியாவிலிருந்து இந்தியாவுக்கு இளம் கலாச்சார தூதர்கள் ஆண்டுதோறும் பயணம் செய்ய நாங்கள் நிதியுதவி செய்வோம்.
நண்பர்களே,
மங்கோலியாவின் வளர்ச்சிக்கு வலுவான, நம்பகமான கூட்டாளியாக இந்தியா உள்ளது.
இந்தியாவின் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியுடனான எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் மங்கோலியாவின் எரிசக்தி துறையை வலுப்படுத்தும். இது இந்தியாவின் உலகளாவிய மிகப்பெரிய கூட்டாண்மை திட்டமாகும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மங்கோலிய தொழிலாளர்களுடன் சேர்ந்து 2500-க்கும் இந்திய தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.
திறன் மேம்பாட்டிலும் எங்கள் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தொழில்நுட்பத்திற்கான அடல் பிகாரி வாஜ்பாய் சிறப்பு மையத்தின் மூலமும், இந்தியா- மங்கோலியா நட்புறவு பள்ளி மூலமும், மங்கோலியாவின் முன்னேற விரும்பும் இளைஞர்கள் புதிய உச்சங்களை எட்டியுள்ளனர். எங்கள் நட்புறவின் ஆழத்திற்கு இந்தத் திட்டங்கள் சான்றுகளாகும்.
சாமான்ய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட பல திட்டங்களையும் இன்று நாங்கள் அறிவித்துள்ளோம். மங்கோலிய மக்களின் தேவைகளை மனதில் கொண்டு இந்த முயற்சிகளை நாங்கள் தொடர்வோம்.
எரிசக்தி, முக்கிய கனிமங்கள், அரியவகை கனிமங்கள், டிஜிட்டல், சுரங்கம், வேளாண்மை, பால்வளம், கூட்டுறவு போன்ற துறைகளில் ஒத்துழைக்க புதிய வாய்ப்புகளை எங்களின் தனியார் துறையும் கண்டறியும் என்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மேன்மை தங்கிய அதிபர் அவர்களே,
இரண்டு தொன்மையான நாகரீகங்களுக்கிடையே நம்பிக்கை மற்றும் நட்புறவின் வலுவான அடித்தளத்தின் மீது நமது உறவுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவை பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியம், ஜனநாயக மாண்புகள், வளர்ச்சிக்கான பகிரப்பட்ட உறுதிப்பாடு ஆகியவற்றால் வளர்க்கப்படுகின்றன. உத்திசார்ந்த இந்தக் கூட்டாண்மையை புதிய உச்சங்களுக்கு ஒன்றிணைந்து நாம் கொண்டுசெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்.
தங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பயணத்திற்காகவும் இந்தியா மீது உங்களின் உறுதியான நட்புறவு மற்றும் உறுதிப்பாட்டுக்கும் மீண்டும் ஒருமுறை நான் நன்றி தெரிவிக்கிறேன்.
உங்களுக்கு மிக்க நன்றி.
*
(Release ID: 2178879 )
AD/SMB/AG/SH
(Release ID: 2179118)
Visitor Counter : 5
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam