பிரதமர் அலுவலகம்
ஒடிசாவின் ஜார்சுகுடாவில் ரூ.60,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கிவைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
Posted On:
27 SEP 2025 1:54PM by PIB Chennai
ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் ரூ.60,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து சிறப்புமிக்க பிரமுகர்களுக்கும் தனது மரியாதைக்குரிய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, ஒடிசா மக்கள் ஒரு புதிய உறுதிப்பாட்டுடன், வளர்ந்த ஒடிசாவை நோக்கி முன்னேறத் தீர்மானித்ததை நினைவு கூர்ந்த பிரதமர், இன்று, மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசுகளின் உத்வேகத்துடன் ஒடிசா வேகமாக முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார். பிஎஸ்என்எல்-லின் உள்நாட்டு 4ஜி சேவைகளை அவர் அறிமுகப்படுத்தினார். பல்வேறு மாநிலங்களில் ஐஐடிகளின் விரிவாக்கமும் இன்று தொடங்குகிறது என்று அவர் கூறினார்.
நாடு முழுவதும் ஏழைக் குடும்பங்களுக்கு தங்கள் அரசு ஏற்கனவே நான்கு கோடிக்கும் மேற்பட்ட உறுதியான வீடுகளை வழங்கியுள்ளது என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், ஒடிசாவில் ஆயிரக்கணக்கான வீடுகள் வேகமாகக் கட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இன்று, சுமார் ஐம்பதாயிரம் குடும்பங்களுக்கு புதிய வீடுகளுக்கான ஒப்புதல் கிடைத்துள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஒடிசா மக்களின் திறன்கள் மற்றும் திறமையின் மீது தமது நீடித்த நம்பிக்கையை வெளிப்படுத்திய பிரதமர், இயற்கை, ஒடிசாவைப் பெரிதும் ஆசீர்வதித்துள்ளது என்று குறிப்பிட்டார். ஒடிசா பல தசாப்தங்களாக வறுமையைத் தாங்கி வந்திருப்பதை பிரதமர் குறிப்பிட்டார். அடுத்த பத்தாண்டுகள், மக்களுக்கு செழிப்பை ஏற்படுத்தும் என்று அவர் உறுதியுடன் கூறினார். இதை அடைவதற்காக, மத்திய அரசு மாநிலத்திற்கு பெரிய திட்டங்களைக் கொண்டு வருகிறது என்று அவர் கூறினார்.
பாரதீப் முதல் ஜார்சுகுடா வரை ஒரு பரந்த தொழில்துறை வழித்தடம் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். கப்பல் கட்டுமானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், பொருளாதார வலிமையை விரும்பும் எந்தவொரு நாடும் இந்தத் துறையில் முதலீடு செய்வது அவசியம் என்று வலியுறுந்த்தினார்.
இந்தியாவில் கப்பல் கட்டுமானத்திற்காக ரூ. 70,000 கோடி தொகுப்பை அறிவித்த பிரதமர், இது ரூ. 4.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் என்றும், எஃகு, இயந்திரங்கள், மின்னணுவியல் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளை எட்டும் என்றும், குறிப்பாக சிறு மற்றும் குடிசைத் தொழில்களுக்கு பயனளிக்கும் என்றும் கூறினார். இது கோடிக்கணக்கான புதிய வேலைகளை உருவாக்கும் என்றும், ஒடிசாவின் இளைஞர்களுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
2ஜி, 3ஜி, 4ஜி போன்ற தொலைத்தொடர்பு சேவைகள் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்தியா பின்தங்கியிருந்தது என்றும், இந்தச் சேவைகளுக்கு வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்து இருந்தது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்தியாவிற்குள் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை பிஎஸ்என்எல் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது என்று பிரதமர் பெருமை பொங்கத் தெரிவித்தார். இந்தச் சாதனையை நிகழ்த்துவதில் பிஎஸ்என்எல்-லின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் நிபுணத்துவத்தை அவர் பாராட்டினார்.
இந்தியா ஒரு உலகளாவிய தொலைத்தொடர்பு உற்பத்தி மையமாக முன்னேறி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், சுமார் ஒரு லட்சம் கோபுரங்களைக் கொண்ட ஜார்சுகுடாவிலிருந்து பிஎஸ்என்எல்-லின் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க் தொடங்கப்படுவது ஒடிசாவிற்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்று கூறினார். நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் இணைப்புக்கான புதிய சகாப்தத்தை இந்தக் கோபுரங்கள் உருவாக்க உள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைக் காண ஆயிரக்கணக்கான கிராமங்கள் மெய்நிகர் இணைப்பு மூலம் இணைக்கப்பட்டுள்ளன என்றும், அதிவேக இணையம் மூலம் கேட்டும் பார்த்தும் வருகின்றன என்றும் பிரதமர் கூறினார்.
ஒடிசா மாநில ஆளுநர் டாக்டர் ஹரி பாபு கம்பம்பதி, ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மஜ்ஹி, மத்திய அமைச்சர் திரு ஜுவல் ஓரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172114
***
SS/PKV/RJ
(Release ID: 2172196)
Visitor Counter : 14