பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பீகார் முதலமைச்சரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்

Posted On: 26 SEP 2025 2:49PM by PIB Chennai

பீகார் முதலமைச்சரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம்  கலந்துரையாடினார்.

தங்கள் பகுதிக்கு மாற்றங்களைக் கொண்டு வந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும், பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமாருக்கும் மேற்கு சம்பரான் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் பயனாளி திருமதி ரஞ்சீதா காசி மனமார்ந்த நன்றி தெரிவித்தார். மிதிவண்டி மற்றும் சீருடை திட்டங்களுக்காக பாராட்டுத் தெரிவித்த அவர் பள்ளிச் சீருடையில் மாணவிகள் மிதிவண்டியில் பயணம் செய்வது பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவும், ஓய்வூதியத் தொகையை 400 ரூபாயிலிருந்து 1100 ரூபாயாக உயர்த்தவும் முதலமைச்சர் அண்மையில் மேற்கொண்ட முடிவுக்கு பாராட்டுத் தெரிவித்த அவர் இது பெண்களின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது என்றார். சோளம், கம்பு பயிரிட முதலமைச்சரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 10,000 ரூபாயில் பம்ப் செட் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் பின்னர் 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் மாவு வியாபாரம் செய்யவிருப்பதாகவும் திருமதி ரஞ்சீதா தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற ரீட்டா தேவி ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை திட்டத்திற்கு பாராட்டுத் தெரிவித்தார். அரசு திட்டங்களால் பெண்கள் பயனடையும்போது அவர்களின் குழந்தைகளும் பயனடைகின்றனர் என்று அவர் கூறினார். திட்டங்களை வேக வேகமாக பட்டியலிடுவதற்காகவும், அவற்றின் தாக்கம் குறித்து விவரிப்பதற்காகவும் ரீட்டா தேவிக்கு பாராட்டுத் தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது கல்வி பின்னணி குறித்து விசாரித்தார். இதற்கு பதிலளித்த ரீட்டா தேவி வாழ்வாதார குழுவில் சேர்ந்த பிறகே தாம் படிக்கத் தொடங்கியதாகவும் பள்ளிப் படிப்பையும், பட்டப்படிப்பையும் முடித்து தற்போது ஊரக வளர்ச்சித் துறையில் முதுநிலை படிப்பில் சேர்ந்திருப்பதாகவும் கூறினார்.

கயா மாவட்டத்தின் ஜிகாதியா கிராமத்தைச் சேர்ந்த நூர்ஜஹான் கத்தூன், முதலமைச்சரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் பெறுகின்ற 10,000 ரூபாயில் தனது தையல் கடையை விரிவுபடுத்த இருப்பதாகவும் ஏற்கனவே 10 பேருக்கு வேலை வழங்கியிருப்பதாகவும் கூறினார். ஏழ்மையிலிருந்து விடுபட்டதுடன் ஓலைக் குடிசையிலிருந்து நன்கு கட்டப்பட்ட கல் வீட்டுக்கு சென்றிருப்பதாகவும் நூர்ஜஹான் கூறினார்.

அவரது தெளிவான, மன நிறைவான விளக்கத்திற்காக பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் வேறு வேறு கிராமத்திற்கு சென்று 50 முதல் 100 வரையிலான பெண்களை அணி திரட்டி அவரது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுமாறு  கேட்டுக்கொண்டார்.     

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171682

***

SS/SMB/SG/SH

 


(Release ID: 2172011) Visitor Counter : 12