பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        அசாம் மாநிலம் தாரங்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                14 SEP 2025 4:01PM by PIB Chennai
                
                
                
                
                
                
                பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே! அசாமின் பிரபல முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களே, எனது அமைச்சரவை சகாவான திரு சர்பானந்த சோனாவால் அவர்களே, அசாம் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களே, இதர அரசு பிரதிநிதிகளே, தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு இடையே எங்களை ஆசிர்வதிக்க பெருமளவில் குழுமியுள்ள எனது சகோதரர்களே, சகோதரிகளே, வணக்கம், 
மாநில வளர்ச்சிப் பயணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளில் அசாம் மாநில மக்கள் மற்றும் தாரங் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 
நண்பர்களே,
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல் முறையாக நான் அசாமிற்கு நேற்று வந்தேன். மா காமக்யா ஆசிர்வாதத்துடன் ஆபரேஷன் சிந்தூர் பெரும் வெற்றியை அடைந்தது. அதனால் தான் இந்தப் புனிதமான மா காமக்யாவின் மண்ணுக்கு வருகை தருவது  மிகவும் தெய்வீகமான உணர்வை அளிக்கிறது. இந்த மகிழ்ச்சியுடன் ஜென்மாஷ்டமி பண்டிகை இந்தப் பிராந்தியத்தில் கொண்டாடப்படுகிறது. இந்தப் புனிதமிக்க ஜென்மாஷ்டமி பண்டிகையில் உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். செங்கோட்டையில் நான் உரையாற்றியது போல், மங்கல்தோய் என்பது கலாச்சாரத்தின் சங்கமம், வரலாற்றின் பெருமை மற்றும் எதிர்காலத்திற்கான நம்பிக்கை ஆகிய அனைத்தையும் ஒன்றிணைக்கும் இடமாகும். இந்தப் பகுதி அசாமின் அடையாளத்தின் மையப் புள்ளியாகவும் உள்ளது. நாங்கள் உத்வேகங்களை நினைவில் வைத்து, கிருஷ்ணரை நினைவு கூர்ந்தோம் மற்றும் எதிர்கால பாதுகாப்புக் கொள்கையில் சுதர்ஷன் சக்கரத்தின் பார்வையை மக்கள் முன் வைத்தேன்.
நண்பர்களே,
துணிச்சல்மிக்க இந்த மண்ணில் அனைத்து மக்களையும் சந்திக்கக் கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்து, நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.
சகோதர, சகோதரிகளே,
சில நாட்களுக்கு முன்பு பாரத ரத்னா சுதாகாந்தா பூபேன் ஹசாரிகா அவர்களின் பிறந்த தினத்தை நாம் கொண்டாடினோம்.  நேற்று இந்த கௌரவமிக்க பெரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அசாம் மாநில சிறப்புமிக்க புதல்வர்கள் மற்றும் நமது மூதாதையர்கள் ஆகியோர் தொலைநோக்குப் பார்வையுடன் கண்ட கனவை பிஜேபியின் இரட்டை என்ஜின் அரசு தற்போது செயலாற்றி அந்த கனவை நனவாக்குகிறது. 
சகோதர, சகோதரிகளே,
நேற்று பூபேன் தா அவர்களின் நூற்றாண்டு பிறந்த தின நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போது அன்றிரவு முதலமைச்சர் சிலவற்றை என்னிடம் கூறினார். இன்று காலை வீடியோ காட்சி ஒன்றையும் அவர் என்னிடம் காண்பித்தார். வீடியோ காட்சியை கண்ட எனக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவரின் அறிக்கையை அவர் என்னிடம் காண்பித்தார். அசாமின் பெருமைமிக்க மற்றும் இந்த நாட்டின் சிறந்த புதல்வரான பூபேன் தா ஹசாரிகாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை வழங்கிய போது காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த நேரத்தில் நான் அதை கவனிக்கவில்லை. ஆனால் இன்று நான் அதை பார்த்தேன். அவர் கூறுகிறார்: “நடனமாடுபவர்களுக்கும், பாடகர்களுக்கும் மோடி பாரத ரத்னா விருது வழங்குகிறார்.”
நண்பர்களே,
1962-ம் ஆண்டு சீனாவுடனான போருக்குப் பிறகு வடகிழக்கு மக்களுக்கு ஏற்பட்ட காயங்களும், அப்போது பண்டிட் நேரு பேசிய வார்த்தைகளும் இன்னும் ஆறவில்லை. தற்போது, காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைமுறை அந்தக் காயங்களில் உப்பைத் தூவி வருகிறது. வழக்கமாக, நான் எத்தனை அவமானங்களை அடைந்தாலும், நான் சிவபக்தன், எனவே, நான் எல்லா விஷத்தையும் மறக்கிறேன். ஆனால் வேறு யாராவது இது குறித்து அவமதிக்கப்படும்போது, என்னால் அமைதியாக இருக்க முடியாது. பூபேன் தாவுக்கு பாரத ரத்னா வழங்கிய எனது முடிவு சரியா இல்லையா என்று சொல்லுங்கள்? சப்தமாகச் சொல்லுங்கள், அது சரியா இல்லையா? பூபேன் தாவுக்கு பாரத ரத்னா வழங்கும் முடிவை காங்கிரஸ் கேலி செய்வது, அது சரியா தவறா? அசாமின் புதல்வரான பாரதத்தின் பெரிய ஆன்மாவை காங்கிரஸ் இந்த முறையில் அவமதிக்கும் போது அது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது.
நண்பர்களே,
மோடி மீண்டும் அழுவதற்கு தொடங்கிவிட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் தற்போது மீண்டும் என் மீது பாயும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு, மக்களே என் கடவுள், என் ஆன்மாவின் குரல் என் கடவுளுக்கு முன்பாக வெளிப்படவில்லையெனில், வேறு எங்கு அது வெளிப்படும்? அவர்கள் என் ஆசான்கள், அவர்கள் என் மதிப்பிற்குரியவர்கள், அவர்கள் என் ரிமோட் கண்ட்ரோல். எனக்கு வேறு ரிமோட் கண்ட்ரோல் இல்லை. இந்த நாட்டின் 140 கோடி மக்களும் என் ரிமோட் கண்ட்ரோல். ஆனால் அவர்களின் ஆணவம் என்னவென்றால், நாம்தார் (வம்சம்) என்று அழைக்கப்படுபவர் காம்தாரை (தொழிலாளி) வசைபாடும்போது, மேலும், காம்தார் வலியால் அழுகும்போது உச்சரித்தால், இன்னும் அதிகமான கொடுமை அவர் மீது சுமத்தப்படுகிறது: உனக்கு அழுவதற்கு உரிமை  கிடையாது. ஒரு காம்தார் நாம்தார் முன் எப்படி அழ முடியும்? என்று கூறுவர்.  அத்தகைய ஆணவம் பொது வாழ்க்கைக்கு பொருந்தாது. அசாம் மக்கள், நாட்டு மக்கள், இசை ஆர்வலர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பாரதத்தின் ஆன்மாவிற்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்கள் காங்கிரஸிடமிருந்து ஒரு பதிலைக் கோர வேண்டும்: பூபேன் தாவை நீங்கள் ஏன் அவமதித்தீர்கள்?
சகோதர, சகோதரிகளே,
அசாமின் கலாச்சார பாரம்பரியத்தை மதித்து பாதுகாப்பதும், அசாமின் விரைவான வளர்ச்சியை உறுதி செய்வதும் இந்த இரட்டை எஞ்சின் அரசின் முன்னுரிமையாக இருந்து வருகிறது. ஒரு சகோதரர் ஒரு ஓவியத்தைக் கொண்டு வந்திருப்பதை நான் காண்கிறேன், ஒருவேளை அவர் அதை எனக்குக் கொடுக்க விரும்பலாம். எஸ்பிஜி பணியாளர்களை அதை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவருக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து உங்கள் பெயரையும் முகவரியையும் பின்புறத்தில் எழுதுங்கள், நான் நிச்சயமாக உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவேன். நீங்கள் எனது அன்னையின் அழகான படத்தையும் வரைந்திருக்கிறீர்கள். அசாமின் இந்த அன்பை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. 'கமோச்சா' (பாரம்பரிய அசாமிய துணி) உடன் நிற்கும் ஒரு இளைஞனை நான் காண்கிறேன். தயவுசெய்து அதை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு, இது ஜன்மாஷ்டமி அன்று ஒரு புனிதமான பிரசாதம் போன்றது. அசாமில் இருந்து வந்த ஏழை அன்னை ஒருவர் இந்த 'கமோச்சா'வை நெய்திருக்க வேண்டும். சகோதரரே, இந்தப் பரிசுக்கு மிக்க நன்றி. நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தயவுசெய்து அதை அவர்களிடம் கொடுங்கள். நான் அதைப் பெறுவேன். நான் நிச்சயமாக அதை பரிசாக கருதுவேன். இன்னொன்று இருக்கிறது. ஒருவேளை, அவர் அதை ஹிமந்தாவுக்கு (முதலமைச்சருக்கு) கொடுக்க விரும்பலாம். தயவுசெய்து அதையும் அவரிடம் வழங்குங்கள். அது சரியான இடத்தை அடையும். இந்த அன்பிற்கு நன்றி. பாருங்கள், சிறு குழந்தைகள் கூட ஓவியங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள், தயவுசெய்து அவற்றைச் சேகரிக்கவும். மக்கள் இவ்வளவு அன்பைக் காட்டுகிறார்கள். இந்த சிறிய குழந்தைகள்! இதைவிட பெரிய அதிர்ஷ்டம் என்ன? நன்றி, என் நண்பரே, நன்றி, சகோதரரே. நீங்கள் இருவரும் சகோதரர்களா? இல்லையா? ஓ, நீங்கள் இருவரும் வெறும் கருப்பு டி-சர்ட் அணிந்து வந்தீர்கள். இருப்பினும், மிக்க நன்றி. 
நண்பர்களே,
தற்போது அசாம் அரசு மற்றும் அசாம் மக்களின் கூட்டு முயற்சியால் நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் அலைகளை அசாம் உருவாக்கி வருகிறது. இந்த மகள் எதையோ கொண்டு வந்திருக்கிறாள், தயவுசெய்து அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு மகளை ஒருபோதும் ஏமாற்றக்கூடாது. நன்றி. நீங்கள் உங்கள் பெயரை பின்புறத்தில் எழுதியிருக்கிறீர்களா? உங்கள் பெயரை பின்புறத்தில் எழுதியிருந்தால், நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன். அன்பே, உங்கள் பெயரையும் முகவரியையும் எழுதுங்கள்.
நண்பர்களே,
தற்போது, இந்தியா உலகிலேயே விரைவாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. மேலும் அசாம், நாட்டில் விரைவாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் அசாம் வளர்ச்சியில் பின்தங்கியிருந்தது, நாட்டின் பிற பகுதிகளின் வளர்ச்சியுடன் ஈடுகொடுக்க முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது, அசாம் சுமார் 13 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் முன்னேறி வருகிறது. மிக்க நன்றி, குழந்தையே!
நண்பர்களே,
13 சதவீத வளர்ச்சி விகிதம்! இது மிகப்பெரிய சாதனை. இது உங்கள் சாதனை. இன்று உங்கள் பெயரில் கைதட்டுவோம். வழக்கமாக, நீங்கள் எனக்காக நிறைய கைதட்டுவீர்கள், ஆனால் இன்று உங்கள் கடின உழைப்பு மற்றும் வியர்வைக்காக நான் கைதட்ட விரும்புகிறேன். இந்த வெற்றி அசாம் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் பிஜேபியின் இரட்டை எந்திர அரசின் கூட்டு முயற்சியின் விளைவாகும். அசாம் மக்கள் இந்த கூட்டணியை தொடர்ந்து வலுப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதனால்தான், ஹிமந்தா அவர்களும், அவரது குழுவும் அனைத்து தேர்தலிலும் மீண்டும் மீண்டும் பெரும் ஆதரவைப் பெறுகிறார்கள். சமீபத்திய பஞ்சாயத்து தேர்தல்களில் கூட, அசாம் எங்களுக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதி செய்துள்ளது. நீங்கள் எங்களை ஆசீர்வதித்துள்ளீர்கள்.
நண்பர்களே,
நாட்டின் மேம்பாட்டிற்கான வளர்ச்சி எந்திரமாக அசாமை மாற்றும் குறிக்கோளுடன் பிஜேபி அரசு செயல்பட்டு வருகிறது. இன்றைய திட்டமும் அந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். சிறிது நேரத்திற்கு முன்பு, சுமார் 6,500 கோடி ரூபாய் மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்கள் இதையொட்டியே தொடங்கி வைக்கப்பட்டன. எங்கள் இரட்டை எந்திர அரசு அசாமை சிறந்த இணைக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகவும், சிறந்த சுகாதார மையமாகவும் வளர்ச்சியடைய செய்கிறது. இந்தத் திட்டங்கள் அந்த நோக்கத்தை மேலும் வலுப்படுத்தும். தாரங் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, நெடுஞ்சாலைகள் மற்றும் வட்டச்சாலை ஆகியவற்றிற்காக உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நண்பர்களே,
வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க தற்போது நாடு ஒற்றுமையுடன் முன்னேறி செல்கிறது. குறிப்பாக நமது இளம் நண்பர்களுக்கு, வளர்ச்சியடைந்த இந்தியா என்பது ஒரு கனவு மற்றும் ஒரு தீர்மானம் ஆகும். இந்த உறுதியை நிறைவேற்றுவதில் வடகிழக்குப் பகுதி மிக முக்கியமான பங்களிப்பைக் கொண்டுள்ளது. உங்கள் மீதும், வடகிழக்குப் பகுதி மீதும் எனக்கு பாசம், அன்பு மற்றும் மரியாதை இருப்பதால் மட்டும் இதைச் சொல்லவில்லை. இதற்குப் பின் உறுதியான காரணங்கள் இருப்பதால் இதைச் சொல்கிறேன். சுதந்திரத்திற்குப் பிறகு, பெரிய நகரங்கள், பெரிய பொருளாதாரங்கள் மற்றும் பெரிய தொழில்கள் அனைத்தும் மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் வளர்ச்சியடைந்தன. இந்த நேரத்தில், அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் கிழக்குப்பகுதியின் ஒரு பெருமளவு பகுதி வளர்ச்சிப் பாதையில் பின்தங்கியது. இப்போது பிஜேபி அரசு இந்த நிலைமையை மாற்றி வருகிறது. ஏற்கனவே, 21 -ம் நூற்றாண்டின் 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. காங்கிரஸ் சகாப்தத்திலிருந்து நாம் கேள்விப்பட்டது “21-ம் நூற்றாண்டு வருகிறது, 21-ம் நூற்றாண்டு வருகிறது” என்பதாகும். சரி, இந்த நூற்றாண்டில் நான்கில் ஒரு பகுதி ஏற்கனவே கடந்துவிட்டது. இப்போது, 21-ம் நூற்றாண்டின் அடுத்த கட்டம் கிழக்கிற்கும், வடகிழக்கிற்கும் சொந்தமானதாகும். இப்போது, உங்கள் தருணம் வந்துவிட்டது. இது அசாமின் நேரம், வடகிழக்கின் நேரம். உங்கள் நேரம் வந்துவிட்டது. என் இளம் நண்பர்களே, இப்போது நேரம் உங்கள் கைகளில் உள்ளது. ஓ, இதோ இன்னொரு குழந்தை எதையோ கொண்டு வருகிறது. தயவுசெய்து அதை எடுத்துக் கொள்ளுங்கள், சகோதரரே. இப்போது மக்கள் என் பலவீனத்தைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். அவர்கள் என் அன்னையின் படங்களைக் கொண்டு வரும்போது, என் இதயம் அவற்றை உடனடியாக பெற விரும்புகிறது. அதை அவர்களிடம் வழங்குகள், மகனே. அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். பின்னால் உங்கள் பெயரையும் முகவரியையும் எழுதுங்கள், நான் அதை சேகரித்து உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன். தயவுசெய்து அதை அவரிடமிருந்து எடுத்து எஸ்பிஜி வீரரிடம் அனுப்புங்கள்.
நண்பர்களே,
எந்தவொரு பிராந்தியத்தின் விரைவான வளர்ச்சிக்கும் விரைவான இணைப்பு அவசியம் ஆகும். அதனால்தான் எங்களுடைய அரசு வடகிழக்கில் இணைப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. (சாலைகள், ரயில்வே மற்றும் விமான வழித்தங்களோ வழியாகவோ அல்லது 5ஜி இணையம் மற்றும் அகன்ற அலைவரிசை வழியாகவோ மின்னணு இணைப்பாக இருந்தாலும், அது உங்கள் வாழ்க்கையில் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அன்றாட வாழ்க்கையை எளிதாக்கியுள்ளதுடன் வர்த்தகம் செய்வதையும் எளிதாக்கியுள்ளது. இந்த இணைப்பு பயணத்தை மிகவும் வசதியாகவும், சுற்றுலாவை விரிவுபடுத்தியும், இங்குள்ள நமது இளைஞர்களுக்கு புதிய பணிகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
நண்பர்களே,
இந்த மிகப்பெரிய இணைப்பு பிரசாரத்தால் அசாம் பெரிதும் பயனடைந்துள்ளது. ஒரு உதாரணம் கூறுகிறேன். சுதந்திரத்திற்குப் பிறகு அறுபது ஆண்டுகளாக, காங்கிரஸ் தில்லியை ஆட்சி செய்தது. பல ஆண்டுகளாக காங்கிரஸ் அசாமிலும் ஆட்சி செய்தது. ஆனால் காங்கிரஸ் 60-65 ஆண்டுகளில் பிரம்மபுத்திராவின் மீது மூன்று பாலங்களை மட்டுமே கட்டியது. அறுபது ஆண்டுகளில் வெறும் மூன்று பாலங்கள்! பிறகு நீங்கள் எங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள். வெறும் பத்தாண்டுகளில், எங்களுடைய அரசு ஆறு பெரிய பாலங்களை கட்டியுள்ளது. ஆறு பெரிய பாலங்கள்! இப்போது சொல்லுங்கள், இவ்வளவு பணிகள் நிறைவடைந்ததும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்களா? உங்கள் ஆசீர்வாதங்களை எங்களுக்குத் தரமாட்டீர்களா? உங்கள் அன்பை செலுத்த மாட்டீர்களா? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள், இல்லையா? இன்னும் அதிக பணிகளைச் செய்ய விரும்புகிறேன். உங்கள் ஆசீர்வாதங்களைத் தொடர்ந்து அளியுங்கள். இன்று, குருவா–நரேங்கி பாலத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் மூலம் குவஹாத்திக்கும் தாராங்கிற்கும் இடையிலான தூரம் சில நிமிடங்களாகக் குறையும். இது சாதாரண மக்களுக்கு நேரத்தையும் பணத்தையும் சேமிக்க உதவும், போக்குவரத்தை எளிதாக்கும், பயண நேரத்தைக் குறைக்கும், போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்கும், இதன் விளைவாக, பொருட்களின் விலையும் குறையும்.
நண்பர்களே,
புதிய வட்டச்சாலை உங்களுக்கு பெரிதும் பயனளிக்கும். இது கட்டப்பட்டவுடன்,   அசாமின் மேல் பகுதி நோக்கிச் செல்லும் வாகனங்கள் இனி நகரத்திற்குள் நுழைய வேண்டியதில்லை. இந்த வட்டச்சாலை 5 தேசிய நெடுஞ்சாலைகள், 2 மாநில நெடுஞ்சாலைகள், 1 விமான நிலையம், 3 ரயில் நிலையங்கள் மற்றும் 1 உள்நாட்டு நீர் முனையத்தை இணைக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அசாமில் முதல் முறையாக தடையற்ற பல்முனை இணைப்புகளின் முழுமையான கட்டமைப்பு நிறுவப்படும். இதுவே பிஜேபியின் இரட்டை எஞ்சின் அரசின் வளர்ச்சி மாதிரி ஆகும்.
நண்பர்களே,
இன்றைய தேவைகளுக்காக மட்டுமல்ல, அடுத்த 25-50 ஆண்டுகளுக்கான தேவைகளுக்காகவும் நாம் நாட்டை தயார்படுத்துகிறோம். ஏனென்றால், 2047-ம் ஆண்டில் இந்தியா 100 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும்போது, அதை வளர்ச்சியடைந்த இந்தியாவாக மேம்படச்செய்ய வேண்டும். உங்களுக்காக, உங்கள் குழந்தைகளுக்காக, நமது இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக இதை நாம் செய்ய வேண்டும். இந்த திசையில், அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவைவரி சீர்திருத்தம் இருக்கும் என்று நான் செங்கோட்டையிலிருந்து அறிவித்தேன். இன்று, இந்த நற்செய்தியுடன் நான் உங்களிடையே வந்துள்ளேன். சரியாக 9 நாட்களுக்குப் பிறகு, நவராத்திரியின் முதல் நாளில், சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் கணிசமாகக் குறைக்கப்படும். மேலும், இது அசாம் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயனளிக்கும். பல அன்றாடப் பொருட்களின் விலை குறையும். சிமென்ட் மீதான வரியைக் குறைத்துள்ளோம், எனவே வீடு கட்டுபவர்களுக்கு குறைந்த செலவுகள் இருக்கும். புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கான பல விலையுயர்ந்த மருந்துகளின் விலை குறைவாக இருக்கும். காப்பீட்டுத் தொகை மிகவும் குறைவானதாக இருக்கும். மேலும் இருசக்கர வாகனங்கள் அல்லது புதிய கார்களை வாங்க விரும்பும் இளைஞர்களும் குறைந்த விலையில் அவற்றைப் பெறுவார்கள். தற்போது, ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விளம்பரங்களில் 60,000 ரூபாய், 80,000 ரூபாய், 1 லட்சம் ரூபாய் என தள்ளுபடி விலை குறித்து பார்த்திருப்பீர்கள். அவர்கள் பெரும்பாலும் நாள்தோறும் விளம்பரம் செய்து வருகிறார்கள். இதன் பொருள், தாய்மார்கள், சகோதரிகள், இளைஞர்கள், விவசாயிகள் அல்லது கடைக்காரர்கள் என அனைவரும் பயனடைவார்கள் என்பதாகும். இந்த முடிவு உங்கள் பண்டிகைகளுக்கு இன்னும் பிரகாசத்தை  கூட்டும்.
நண்பர்களே,
ஆனால் இந்த பண்டிகைகளின் போது,  ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அதைச் கூறலாமா? நீங்கள் கேட்பீர்களா? உங்கள் கைகளை உயர்த்தி என்னிடம் சொல்லுங்கள்: நான் அதைச் கூறலாமா? நீங்கள் அதைப் பின்பற்றுவீர்களா? தயவுசெய்து, என் குழந்தையே, உட்காருங்கள், நன்றி. அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள். அவர் உடல் ரீதியாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக நான் நினைக்கிறேன். தயவுசெய்து அவரைத் தள்ளாதீர்கள். நாங்கள் அவரிடமிருந்து அதை எடுத்துக்கொள்வோம். ஒளிப்பதிவாளரே, தயவுசெய்து அவரது கடிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இளைஞனே, கவலைப்பட வேண்டாம், உட்காருங்கள். அவரை சிரமப்படுத்தாதீர்கள். சகோதரனே, நான் உங்களை வணங்குகிறேன். தயவுசெய்து அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள். அது எனக்கு சரியாகத் தெரியவில்லை. இவ்வளவு வேதனையிலும் நீங்கள் இங்கு வந்ததற்கு நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
நண்பர்களே,
இப்போது உங்கள் கைகளை உயர்த்தி என்னிடம் கூறுங்கள்: நான் கூறுவதை நீங்கள் பின்பற்றுவீர்களா? இப்படி இல்லை, அனைவரின் கைகளும் மேலே இருக்க வேண்டும்! நீங்கள் கடைபிடிப்பீர்களா? எனக்கு சத்தியம் செய்யுங்கள். அதைச் செய்யுங்கள், நாடு முன்னேறும், என் நண்பர்களே. நான் இதை எனக்காகக் கேட்கவில்லை, நாட்டிற்காக கேட்கிறேன். உங்கள் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்காக நான் இதைக் கேட்கிறேன். எனவே, நான் இதைச் கூறுகிறேன், இனிமேல், நீங்கள் எதை வாங்கினாலும் அது உள்நாட்டு பொருளாக இருக்கும் என்று எனக்கு உறுதியளியுங்கள். நீங்கள் உள்நாட்டு பொருட்களை வாங்குவீர்களா? நீங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவீர்களா? சுதேசிக்கான எனது வரையறை மிகவும் எளிமையானது: நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும், அது எந்த வெளிநாட்டுப் பெயரைக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை. அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டால், அது சுதேசி. பணம் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் வரலாம், ஆனால் வியர்வை என் நாட்டின் இளைஞர்களுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும். மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு பொருட்களும் இந்திய மண்ணின் நறுமணத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அத்தகைய பொருட்களை வாங்குவீர்களா? உங்கள் கைகளை உயர்த்தி, அந்த பொருட்களை வாங்குவதாக கூறுங்கள். நீங்கள் யாருக்காவது பரிசளிக்க வேண்டியிருந்தால், அது சுதேசியாக மட்டுமே இருக்க வேண்டும்? மேலும் அனைத்து கடைக்காரர்களிடமும், தயவுசெய்து உங்கள் கடையில் ஒரு பலகையை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அதை செய்வீர்களா? உங்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு கடையிலும் ஒரு பலகையை வைக்கவும்: "இது சுதேசி என்று பெருமையுடன் கூறுங்கள்."
சுதேசியின் சக்தியை நான் உங்களுக்குச் சொல்கிறேன். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, நான் கன்னியாகுமரியில் சிறிது காலம் வசித்து வந்தேன். நான் எப்போதும் ஒரு கமோச்சா ரக சால்வை வைத்திருப்பேன். என் பையில் எப்போதும் மூன்று அல்லது நான்கு கமோச்சா இருக்கும். கன்னியாகுமரியில் என் தோளில் ஒரு கமோச்சாவை வைத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தேன். சிலர் தூரத்திலிருந்து ஓடி வந்து என்னை வரவேற்று, என்னைப் பிடித்தனர். அவர்கள், நீங்கள் அசாமிலிருந்து வந்தவரா? என்று கேட்டார்கள், நான், இல்லை, நான் குஜராத்தைச் சேர்ந்தவன் என்றேன். அவர்கள், ஆனால் நாங்கள் கமோச்சாவைப் பார்த்தோம், அதனால்தான் நீங்கள் அசாமிலிருந்து வந்தவர் என்று நினைத்தோம் என்றார்கள். அதுதான் மண்ணின் சக்தி, சுதேசியின் சக்தி. எனக்கு அங்கு எந்த அடையாளமும் இல்லை, ஆனால் அன்று, அசாம் மக்கள் என் மீது தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள். நான் 'கமோச்சா' அணிந்திருந்ததால் மட்டுமே. நண்பர்களே, இது நமது பாரம்பரியங்களின் சக்தி. அதனால்தான் எனக்கு உறுதியளிக்கவும் என்று கூறுகிறேன், நாம் சுதேசியை வாங்குவோம். உள்ளூர் பொருட்களை வாங்குவோம். உள்ளூர் தயாரிப்புகளுக்கான நமது கூட்டு முயற்சிகள் நமது நாட்டை பலப்படுத்தும்.
நண்பர்களே,
கடந்த ஆண்டுகளில், நாடு முழுவதும் மகத்தான பணிகள் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு துறை சுகாதாரத்துறையாகும். முன்னதாக, மருத்துவமனைகள் முக்கியமாக பெரிய நகரங்களில் இருந்தன, அங்கு சிகிச்சைக்கான கட்டணம் அதிகமாக இருந்தது. எங்களுடைய அரசு எய்ம்ஸ் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பை நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் விரிவுபடுத்தியுள்ளது. தயவுசெய்து உட்காருங்கள் சகோதரரே. நான் என் உரையைத் தொடர வேண்டும். தயவுசெய்து உட்காருங்கள். தயவுசெய்து அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள். ஒளிப்பதிவாளரே, அவரிடமிருந்து கடிதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். என் மாற்றுத்திறனாளி சகோதரர்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? நன்றி நண்பரே. இங்கே அசாமில், புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. அதாவது, சுதந்திரத்திற்குப் பிறகு 60-65 ஆண்டுகளில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை வெறும் 11 ஆண்டுகளில் கட்டியுள்ளோம். யோசித்துப் பாருங்கள் 60-70 ஆண்டுகளில் செய்ததை வெறும் 10-11 ஆண்டுகளில் செய்துள்ளோம். 
நண்பர்களே! 
அசாமிலும், 2014-ம் ஆண்டுக்கு முன்பு 6 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. தற்போது, தாராங்கில் புதிய மருத்துவக் கல்லூரியுடன், இந்த எண்ணிக்கை 24 மருத்துவக் கல்லூரிகளாக உயர்ந்துள்ளது. ஒரு மருத்துவக் கல்லூரி கட்டப்படும்போது, சிறந்த சுகாதார வசதிகள் கிடைப்பது மட்டுமல்லாமல், அதிகமான இளைஞர்களும் மருத்துவர்களாகும் வாய்ப்பைப் பெறுகிறார்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். முன்னதாக, மருத்துவ இடங்கள் பற்றாக்குறையால் நமது இளைஞர்களில் பலர் மருத்துவர்களாக மாற முடியவில்லை. கடந்த 11 ஆண்டுகளில், மருத்துவ இடங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. இது மட்டுமல்ல, நாங்கள் மற்றொரு இலக்கை நிர்ணயித்துள்ளோம்: அடுத்த 4-5 ஆண்டுகளில் 1 லட்சம் புதிய மருத்துவ இடங்களைச் சேர்க்கப் போகிறோம். அதாவது, 1 லட்சம் புதிய மருத்துவர்கள் உருவாக்கப்படுவார்கள்.
நண்பர்களே,
நாங்கள் இப்படித்தான் பணியாற்றுகிறோம். 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க நாங்கள் பணியாற்றுவது போல, 1 லட்சம் புதிய மருத்துவர்களை உருவாக்கவும் நாங்கள் பணியாற்றுகிறோம்.
நண்பர்களே,
அசாம் தேசபக்தர்களின் நிலம். அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதாக இருந்தாலும் சரி, சுதந்திரப் போராட்டத்தில் தியாகங்களைச் செய்ததாக இருந்தாலும் சரி, அசாம் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது. பதருகாட் விவசாயிகளின் சத்தியாக்கிரகத்தை யார் மறக்க முடியும்? அந்த வரலாற்றுத் தலம் இங்கிருந்து வெகு தொலைவில் இல்லை. இன்று, தியாகத்தின் இந்த புனித பூமியில் நான் நிற்கும்போது, காங்கிரஸின் மற்றொரு தவறான செயலை அம்பலப்படுத்துவது அவசியம். அதன் அரசியலுக்காக, காங்கிரஸ் எப்போதும் இந்தியாவிற்கு எதிரான மக்களுடனும், சித்தாந்தங்களுடனும் உடன்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது இதை மீண்டும் பார்த்தோம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பயங்கரவாதத்தால் நாடு ரத்தம் சிந்தியது. ஆனால் காங்கிரஸ் அமைதியாக நின்றது. தற்போது, நமது ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நடத்தி, பாகிஸ்தானின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பயங்கரவாதத்தின் முக்கியஸ்தர்களை வேரோடு அகற்றியது. ஆனால் நமது ராணுவத்துடன் நிற்பதற்குப் பதிலாக, காங்கிரஸ் பாகிஸ்தான் ராணுவத்துடன் துணை நிற்கிறது. நமது வீரர்களை ஆதரிப்பதற்குப் பதிலாக, காங்கிரஸ் தலைவர்கள் பயங்கரவாதிகளை வளர்ப்பவர்களின் திட்டமிடலை ஊக்குவிக்கிறார்கள். பாகிஸ்தானின் பொய்கள் காங்கிரசின் செயல் திட்டமாக மாறுகின்றன. அதனால்தான், நீங்கள் எப்போதும் காங்கிரசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நண்பர்களே,
காங்கிரசுக்கு, தனது வாக்கு வங்கியைப் பாதுகாப்பது தான் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது. காங்கிரஸ் ஒருபோதும் தேசிய நலனைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படுவதில்லை. தற்போது, காங்கிரஸ் தேச விரோத சக்திகள் மற்றும் ஊடுருவல்காரர்களின் பெரிய பாதுகாவலராக மாறியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அது ஊடுருவலை ஊக்குவித்தது, தற்போது காங்கிரஸ், ஊடுருவல்காரர்கள் இந்தியாவில் நிரந்தரமாக குடியேறி நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஒரு காலத்தில், மங்கல்தோய் சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிராக அசாமின் அடையாளத்தைப் பாதுகாக்க ஒரு பெரிய இயக்கத்தைக் கண்டது. ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு அதற்காக உங்களைத் தண்டித்தது. அவர்கள் உங்களைப் பழிவாங்கினர். காங்கிரஸ் இங்கு சட்டவிரோதமாக நில ஆக்கிரமிப்பை அனுமதித்தது. நமது வழிபாட்டுத் தலங்கள், நமது விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. பிஜேபி-தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த சூழ்நிலைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. திரு ஹிமந்தா அவர்களின் தலைமையில், அசாமில் லட்சக்கணக்கான பிக்ஹா நிலங்கள் ஊடுருவல்காரர்களிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. தாரங் மாவட்டத்தில் கூட மிகப் பெரிய நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. கருகூட்டி பகுதியிலும், காங்கிரஸ் காலத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. அந்த நிலம் இப்போது மீட்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்காக ஒரு கருகூட்டி விவசாயத் திட்டம் நடந்து வருகிறது. அங்குள்ள இளைஞர்கள் இப்போது "வேளாண் வீரர்களாக" பணியாற்றி வருகின்றனர். கடுகு, சோளம், உளுந்து, எள், பூசணிக்காய் என அனைத்தும் அங்கு பயிரிடப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு காலத்தில் ஊடுருவல்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலம் இன்று அசாமில் வேளாண் வளர்ச்சியின் புதிய மையமாக மாறியுள்ளது.
நண்பர்களே,
நாட்டின் வளங்களை ஊடுருவல்காரர்கள் கைப்பற்ற பிஜேபி அரசு அனுமதிக்காது. இந்தியாவின் விவசாயிகள், இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் நமது பழங்குடி மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த ஊடுருவல்காரர்கள் நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்கின்றனர். அதை அனுமதிக்க முடியாது. எல்லைப் பகுதிகளின் மக்கள்தொகையை மாற்ற ஊடுருவல்காரர்கள் மூலம் சதித்திட்டங்கள் நடக்கின்றன. இது தேசிய பாதுகாப்புக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல். எனவே, நாட்டில் இப்போது ஒரு மக்கள்தொகை ஆய்வு பணி தொடங்கப்படுகிறது. ஊடுருவல்காரர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதும், ஊடுருவல்காரர்களிடமிருந்து நாட்டை விடுவிப்பதும் பிஜேபியின் குறிக்கோள் ஆகும். அந்த அரசியல்வாதிகளுக்கு நான் சொல்கிறேன். நீங்கள் ஒரு சவாலுடன் களத்தில் இறங்கினால், நான் அந்த சவாலை என் நெஞ்சை நீட்டி ஏற்றுக்கொள்கிறேன். அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க நீங்கள் எவ்வளவு பலத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும், ஊடுருவல்காரர்களை அகற்றுவதில் எங்கள் வாழ்க்கையின் எவ்வளவு பகுதியை நாங்கள் செலவிடுகிறோம் என்பதையும் பார்ப்போம். ஒரு போட்டி இருக்கட்டும். ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க வருபவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். என் வார்த்தைகளைக் குறித்து கொள்ளுங்கள். இந்த நாடு அவர்களை மன்னிக்காது.
நண்பர்களே,
அசாமின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், அசாமின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அசாமையும், வடகிழக்குப் பகுதியையும் வளர்ச்சியடைந்த இந்தியாவின் வளர்ச்சி எந்திரமாக மாற்ற வேண்டும். மீண்டும் ஒருமுறை, இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்: பாரத் மாதா கி ஜே. இரு கைகளையும் உயர்த்தி, முழு பலத்துடன் குரல் எழுப்புங்கள். பாரத் மாதா கி ஜே. பாரத் மாதா கி ஜே. பாரத் மாதா கி ஜே. பாரத் மாதா கி ஜே. மிக்க நன்றி.
***
(Release ID: 2166514 )
SS/IR/AG/KR
                
                
                
                
                
                (Release ID: 2171054)
                Visitor Counter : 18
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam