தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்ய ஏழு புதிய நிதியுதவி மற்றும் வழிகாட்டு மையங்கள் தொடங்கப்படவுள்ளன
Posted On:
24 SEP 2025 9:39AM by PIB Chennai
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வேவ்ஸ் முன் முயற்சியின் கீழ், புத்தொழில் நிறுவனங்களை அதிகப்படுத்துவதற்கான தளமான வேவ்எக்ஸ், நாடு முழுவதும் ஏழு புதிய நிதி மற்றும் வழிகாட்டு மையங்களை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இவை தற்போது மும்பையில் உள்ள இந்திய படைப்பாக்க தொழில்நுட்ப நிறுவனத்திற்கு கூடுதலாக அமையவுள்ளன. அனிமேஷன், காட்சிப்படிமங்கள், விளையாட்டு, படக்கதைகள், விரிவாக்கப்பட்ட காட்சி மற்றும் எதார்த்த தளங்களின் புத்தொழில் நிறுவனங்களுக்கென்றே முதல் முறையாக தனித்து இத்தகைய மையங்கள் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
புதிதாக அறிவிக்கப்பட்ட மையங்கள் கீழ்காணும் நிறுவனங்களில் இடம்பெறும்.
- இந்திய மக்கள் தொடர்பு நிறுவனம் (ஐஐஎம்சி), தில்லி
- ஐஐஎம்சி, ஜம்மு
- ஐஐஎம்சி, தென்கனால், ஒடிசா
- ஐஐஎம்சி, கோட்டயம், கேரளா
- ஐஐஎம்சி, அமராவதி, மகாராஷ்டிரா
- இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், புனே, மகாராஷ்டிரா
- சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், கொல்கத்தா, மேற்கு வங்கம்
இந்தப் புதிய மையங்கள் தொடங்கப்படுவதையடுத்து திரைப்படத் தயாரிப்பு, கேம் உருவாக்கம், படத் தொகுப்பு போன்றவற்றுக்கு புத்தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும். இந்த வசதிகள், திரைப்படம், கேம் உருவாக்கம், மெய்நிகர் ஊடகம் ஆகியவற்றை புத்தொழில் நிறுவனங்கள் உலகத் தரத்திற்கு வடிவமைக்க, உருவாக்க மற்றும் மதிப்பீடு செய்ய உதவும். மேலும், விவா டெக் (பாரீஸ்) மற்றும் கேம் உருவாக்குவோர் மாநாடு (அமெரிக்கா) போன்ற உலகளாவிய மதிப்புமிகு புத்தொழில் நிகழ்வுகளில் பங்கேற்று சர்வதேச வெளிப்பாட்டுக்கான வாய்ப்புகளை புத்தொழில் நிறுவனங்கள் பெறமுடியும்.
வேவ்எக்ஸ் முன் முயற்சியின் கீழ் புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதியுதவி மற்றும் ஆலோசனை பெறும் மையங்கள் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், பத்திரிகை தகவல் அலுவலகம், வெளியீட்டு பிரிவு, புதிய ஊடகப்பிரிவு, மின்னணு ஊடக கண்காணிப்பு மையம் ஆகியவற்றுடன் நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்புகளையும் பெறும். தெரிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஊடகப்பிரிவுகளால் மேற்கொள்ளப்படும் வெளிப்பணித் திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.
விருப்பமுள்ள புத்தொழில் நிறுவனங்கள் wavex.wavesbazaar.com என்ற இணையதளத்திற்குள் சென்று விண்ணப்பிக்கும் தெரிவைப் பெறலாம்.
ஒவ்வொரு மையத்திற்கும் முதல் தொகுப்புக்கு 15 புத்தொழில் நிறுவனங்கள் தெரிவு செய்யப்படும்.
மாதாந்தர கட்டணம் : ஒவ்வொரு புத்தொழில் நிறுவனத்திற்கும் ரூ.8,500 + ஜிஎஸ்டி
தகுதி : ஊடகப் பொழுதுபோக்கு மற்றும் அனிமேஷன், காட்சிப்படிமங்கள், கேமிங், படக்கதைகள், விரிவாக்கப்பட்ட காட்சி எதார்த்த தளங்களில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
***
SS/SMB/AG/KR
(Release ID: 2170565)
Visitor Counter : 10