பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகளைப் பிரதமர் தெரிவித்துக் கொண்டார்
2025 செப்டம்பர் 22 முதல், அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வருகிறது: பிரதமர்
நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் மீதும் ஜிஎஸ்டி சலுகைகளின் புதிய அலை வீசுகிறது: பிரதமர்
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்: பிரதமர்
புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வருகின்றன - இப்போது 5% மற்றும் 18% வரி அடுக்குகள் மட்டுமே இருக்கும்: பிரதமர்
குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி மூலம், மக்கள் தங்கள் கனவுகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும்: பிரதமர்
மக்களுக்கு சேவை செய்வதன் சாராம்சம் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது: பிரதமர்
தேசத்திற்கு என்ன தேவை என்பதையும் இந்தியாவில் என்ன தயாரிக்க முடியும் என்பதையும் உணர்ந்து, அவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட வேண்டும்: பிரதமர்
இந்தியாவின் செழிப்பு, தன்னம்பிக்கையிலிருந்து வலிமையடையும்: பிரதமர்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே அனைவரும் வாங்குவோம்: பிரதமர்
Posted On:
21 SEP 2025 5:50PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சக்தியை வழிபடும் பண்டிகையான நவராத்திரியின் தொடக்கத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், நவராத்திரியின் முதல் நாளிலிருந்தே, நாடு தற்சார்பு இயக்கத்தில் குறிப்பிடத்தக்க படியை எடுத்து வைப்பதாகக் குறிப்பிட்டார். 2025 செப்டம்பர் 22 அன்று சூரிய உதயத்தின்போது, நாடு அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துகிறது என்று அவர் கூறினார். இது இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்த விழா சேமிப்பை அதிகரிக்கும் என்றும், மக்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்குவதை எளிதாக்கும் என்றும் அவர் கூறினார். இந்த சேமிப்புத் திருவிழாவின் நன்மைகள் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், புதிய நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், கடைக்காரர்கள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர் என அனைவரையும் சென்றடையும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்த பண்டிகைக் காலத்தில், ஒவ்வொரு வீட்டிலும் அதிக மகிழ்ச்சி ஏற்பட்டு இனிமையான சூழல் உருவாகும் என்று அவர் கூறினார். அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்களுக்காகவும் ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா தொடக்கத்திற்காகவும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்குப் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தி, வணிக நடவடிக்கைகளை எளிதாக்கி, முதலீடுகளை மேலும் ஈர்க்கும் என்று அவர் கூறினார். மேலும் ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சிக்கான போட்டியில் சமமான பங்களிப்பை வழங்குவதை அது உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
2017-ம் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) நோக்கி இந்தியா தனது தொடக்க நடவடிக்கைகளை எடுத்தது என்று அவர் கூறினார். நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒரு பழைய அத்தியாயத்தின் முடிவையும் புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தையும் அது குறித்தது என்பதை திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். பல ஆண்டுகளாக, மக்களும் வர்த்தகர்களும், நுழைவு வரி, விற்பனை வரி, கலால் வரி, மதிப்புக் கூடுதல் வரி (வாட்) சேவை வரி போன்ற சிக்கலான வரிகளில் சிக்கிக் கொண்டு இருந்தனர் என்று அவர் கூறினார். முன்பெல்லாம், ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு பல சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல வேண்டும் எனவும் ஏராளமான படிவங்களை நிரப்ப வேண்டும் எனவும், ஒவ்வொரு இடத்திலும் மாறுபட்ட வரிகள் இருந்தன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 2014-ம் ஆண்டு தாம் பிரதமராகப் பதவியேற்றபோது ஒரு வெளிநாட்டு செய்தித்தாளில் வெளியிடப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க செய்திக் கட்டுரையை உதாரணமாகக் கூறி, அவர் தமது நினைவைப் பகிர்ந்து கொண்டார். பெங்களூருவிலிருந்து ஹைதராபாத்திற்கு பொருட்களை அனுப்புவது மிகவும் கடினமாக இருந்தது என்று ஒரு நிறுவனம் கூறி இருந்ததையும் அந்த நிறுவனம் எதிர்கொண்ட சவால்களையும் அந்த செய்திக் கட்டுரை விளக்கியதாக பிரதமர் கூறினார். வெறும் 570 கிலோமீட்டர் தூரத்திற்கு பொருட்களை அனுப்ப இந்த சிக்கல்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
வரிகளின் சிக்கலால் ஏற்பட்ட நிலைமைகள் இவை என்று பிரதமர் கூறினார். முந்தைய உதாரணம் எண்ணற்ற நிகழ்வுகளில் ஒன்றுதான் என்று அவர் தெரிவித்தார். பல வரிகளின் சிக்கலான வலைப்பின்னல் காரணமாக லட்சக்கணக்கான நிறுவனங்களும் கோடிக்கணக்கான மக்களும் தினமும் இன்னல்களை எதிர்கொண்டனர் என்பதை அவர் எடுத்துரைத்தார். ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குப் பொருட்களை கொண்டு செல்வதற்கு அதிகமாக செலவானதாகவும், இறுதியில் அந்த செலவு ஏழை நுகர்வோரின் மீது சுமத்தப்பட்டது எனவும் அவர் கூறினார்.
வரி சிக்கல்களிலிருந்து நாட்டை விடுவிப்பது அவசியம் என்பதை வலியுறுத்திய திரு நரேந்திர மோடி, 2014-ம் ஆண்டில் தாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், மக்களின் நலனுக்காகவும் தேசத்தின் நலனுக்காகவும் அரசு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிக்கு முன்னுரிமை அளித்ததை அவர் நினைவு கூர்ந்தார். சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன என்றும் மாநிலங்கள் எழுப்பிய ஒவ்வொரு கவலையும் தீர்க்கப்பட்டன என்றும் அவர் கூறினார். மேலும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கப்பட்டு, சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டன என்பதை அவர் எடுத்துரைத்தார். அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம், சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற ஒரு மகத்தான வரி சீர்திருத்தம் சாத்தியமானது என்று அவர் குறிப்பிட்டார். மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியின் விளைவாகவே நாடு பல வரிகளின் சிக்கலிலிருந்து விடுபட்டதாகவும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஒரு வரி அமைப்பு நிறுவப்பட்டதாகவும் பிரதமர் கூறினார். ஒரே நாடு-ஒரே வரி என்ற கனவு நனவாகியுள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
சீர்திருத்தம் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்றும், காலங்கள் மாறி, தேசத்திற்கான தேவைகள் உருவாகும்போது, அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் அவசியமானவை என்றும் பிரதமர் கூறினார். நாட்டின் தற்போதைய தேவைகளையும் எதிர்கால விருப்பங்களையும் கருத்தில் கொண்டு, இந்த புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை அவர் விளக்கினார். புதிய வரிக் கட்டமைப்பின் கீழ், 5% மற்றும் 18% ஆகிய வரி விகிதங்கள் மட்டுமே முதன்மையாக இருக்கும் என்று திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இதன் மூலம், பெரும்பாலான அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார். உணவுப் பொருட்கள், மருந்துகள், சோப்பு, பற்பசைகள், ஆயுள் காப்பீடு ஆகியவை வரி இல்லாத அல்லது 5% வரி மட்டுமே கொண்ட பொருட்கள் மற்றும் சேவைகளில் வந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். முன்னர் 12% வரி விதிக்கப்பட்ட பொருட்களில் 99 சதவீத பொருட்கள், அதாவது கிட்டத்தட்ட அந்தப் பொருட்கள் அனைத்தும் இப்போது 5% வரி வரம்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த 11 ஆண்டுகளில் 25 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டு நாட்டின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் வகையில் புதிய நடுத்தர வர்க்கத்தில் இணைந்திருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தப் புதிய நடுத்தர வகுப்பு, தனக்கான விருப்பங்களையும் கனவுகளையும் கொண்டிருப்பதாகக் கூறினார். நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்களின் வசதிக்காகவும் அவர்களது சுமையைக் குறைக்கும் நோக்கத்திலும், 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு என்ற உன்னத பரிசை இந்த ஆண்டு அரசு வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். இப்போது ஏழைகள் மற்றும் புதிய நடுத்தர வகுப்பினர் பயனடைவதற்கான நேரம், இது என்று திரு மோடி குறிப்பிட்டார். அவர்கள் இரட்டை அன்பளிப்புகளைப் பெறுவதாக அவர் கூறினார். முதலாவது, வருமான வரி விலக்கின் மூலமான பயன் மற்றும் இரண்டாவது, தற்போது குறைக்கப்பட்ட ஜிஎஸ்டியினால் ஏற்படக்கூடிய பயன். குறைந்த ஜிஎஸ்டி விகிதங்களால், குடிமக்களின் தனிப்பட்ட கனவுகளை நிறைவேற்றுவது எளிதாகிவிடும் - அது வீடு கட்டுவது, தொலைக்காட்சிப் பெட்டி அல்லது குளிர்சாதனப் பெட்டி வாங்குவது, அல்லது ஸ்கூட்டர், பைக் அல்லது கார் வாங்குவது என அனைத்திற்கும் இனி குறைந்த செலவே ஆகும் என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஹோட்டல் அறைகளுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருப்பதால், பயணமும் இனி அணுகக் கூடியதாக மாறும் என்று அவர் மேலும் கூறினார். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடர்பாக விற்பனையாளர்களிடையே ஏற்பட்டுள்ள உற்சாகத்தைக் குறிப்பிட்டு திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். குறைக்கப்பட்ட ஜிஎஸ்டியின் பயன்களை நுகர்வோருக்கு வழங்குவதற்காக அவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள், என்றார். சீர்திருத்தத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய விலைகளைக் குறிப்பிட்டு பல்வேறு இடங்களில் பொருட்களின் விலைகள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
‘குடிமக்கள் கடவுளுக்கு சமமானவர்கள்’ என்ற தாரக மந்திரத்தை அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தெளிவாக பிரதிபலிப்பதாகக் கூறிய பிரதமர், வருமான வரி விலக்கு மற்றும் ஜிஎஸ்டி குறைப்புகள் இரண்டும் இணையும் போது, கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் காரணமாக இந்திய மக்களுக்கு சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்படும் என்று தெரிவித்தார். அதனால்தான் இதை அவர் ‘சிக்கன பெருவிழா’ என்று கூறுவதாக விளக்கம் அளித்தார்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு தன்னிறைவை நோக்கிய பயணத்தில் நிலையான உறுதிப்பாடு மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்திய திரு மோடி, இந்தியா தற்சார்பு அடைவதில் நாட்டின் குறு, சிறு மற்றும் குடிசைத் தொழில்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு அளப்பரியது என்று குறிப்பிட்டார். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படக்கூடிய அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளால் இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் குடிசை தொழில்கள் கணிசமாக பயனடையும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், இந்த சீர்திருத்தங்கள் அவர்களின் விற்பனையை அதிகரித்து, வரி சுமையைக் குறைத்து இரட்டைப் பயன்களை வழங்கும் என்றார். இந்தியப் பொருளாதாரம் செழிப்பின் உச்சத்தில் இருந்த போது அதன் முதுகெலும்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை சுட்டிக்காட்டிய அவர், இது போன்ற நிறுவனங்களில் இருந்து எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டார். இந்தியாவின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு தரம் ஒரு காலத்தில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு உயர்ந்ததாக இருந்தது என்று அவர் தெரிவித்தார். அத்தகைய பெருமையை மீட்டெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், சிறுதொழில் நிறுவனங்களின் தயாரிப்புகள் மிக உயரிய சர்வதேச தரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தியாவின் உற்பத்தி, அனைத்து அளவுகோல்களையும் கண்ணியத்துடனும் சிறப்பான செயல்பாட்டுடனும் விஞ்ச வேண்டும் என்றும், இந்திய தயாரிப்புகளின் தரம் நாட்டின் உலகளாவிய அடையாளம் மற்றும் கௌரவத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த இலக்குடன் அனைத்து பங்குதாரர்களும் தீவிரமாக பணியாற்றுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இந்திய சுதந்திர போராட்டத்திற்கு சுதேசி மந்திரம் அதிகாரம் அளித்ததைப் போலவே, செழிப்பை நோக்கிய நாட்டின் பயணத்திற்கும் அதேபோன்ற ஊக்கத்தை இந்த மந்திரம் அளிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். நம்மையும் அறியாமலேயே ஏராளமான வெளிநாட்டுப் பொருட்கள் நமது அன்றாட வாழ்வின் அங்கமாகத் திகழ்வதை சுட்டிக்காட்டிய அவர், தங்கள் பையில் இருக்கும் சீப்பு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதா அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதா என்பது குடிமக்களுக்குத் தெரிவது கூட இல்லை என்று கூறினார். இத்தகைய சார்பு நிலையில் இருந்து விடுபடுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு மோடி, நம் நாட்டு இளைஞர்களின் கடின உழைப்பு மற்றும் வியர்வையினால் உருவாகிய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு வீடும் சுதேசியின் சின்னமாக மிளிர வேண்டும் என்றும், ஒவ்வொரு கடையையும் உள்நாட்டுத் தயாரிப்புகள் அலங்கரிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். “நான் சுதேசி பொருட்களை வாங்குகிறேன்”, “நான் சுதேசி தயாரிப்புகளை விற்பனை செய்கிறேன்.” என்று குடிமக்கள் அனைவரும் பெருமிதத்துடன் அறிவித்து, சுதேசிக்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று ஊக்குவித்த பிரதமர், இத்தகைய மனநிலை ஒவ்வொரு இந்தியரின் மனங்களிலும் வேரூன்ற வேண்டும் என்றார். இத்தகைய மாற்றம் இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். முதலீட்டிற்கு உகந்த சூழலை உருவாக்கி, தங்கள் பகுதிகளில் முழு ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் உற்பத்தியை ஊக்குவித்து, இதன் மூலம் தற்சார்பு இந்தியா மற்றும் சுதேசி இயக்கங்களுக்கு முழு ஆதரவு அளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் அவர் கேட்டுக்கொண்டார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து பயணிக்கும் போது, தற்சார்பு இந்தியா என்ற கனவு நனவாகும் என்றும், ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி பெறும் என்றும், இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்ச்சியடைந்த தேசமாக மாறும் என்றும் அவர் உறுதியளித்தார். ஜிஎஸ்டி சிக்கன பெருவிழா மற்றும் புனித நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தமது மனமார்ந்த வாழ்த்துகளை நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக்கொண்டு பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
***
(Release ID: 2169265)
AD/PLM/ RB/RJ
(Release ID: 2169311)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam