பிரதமர் அலுவலகம்
பிரதமர், டேராடூனுக்குச் சென்று, உத்தராகண்டில் வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்
உத்தராகண்டில் வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 1200 கோடி ரூபாய் நிதி உதவியை பிரதமர் அறிவித்தார்
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு உதவுவதற்காக, குழந்தைகளுக்கான பி.எம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் விரிவான ஆதரவை பிரதமர் அறிவித்தார்
பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்து தமது இரங்கல்களை பிரதமர் தெரிவித்துக் கொண்டார்
தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் பேரிடர் மீட்பு தன்னார்வலர்களை சந்தித்து அவர்களது முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பை மீட்டெடுத்து, மீண்டும் கட்டி எழுப்புவதற்கு தேவையான முழு ஆதரவையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தார்
Posted On:
11 SEP 2025 5:51PM by PIB Chennai
2025 செப்டம்பர் 11 அன்று டேராடூனுக்குச் சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தராகண்டில் வெள்ள நிலவரம் பற்றியும், மேகவெடிப்பு, மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
உத்தராகண்டில் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்யவும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்யவும் டேராடூனில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை பிரதமர் நடத்தினார். உத்தராகண்ட் மாநிலத்திற்கு 1200 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
ஒட்டுமொத்த பகுதிக்கு உதவவும், அதன் மக்களை மீட்கவும் பன்முக அணுகுமுறையின் தேவையை பிரதமர் வலியுறுத்தினார். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகளை மீண்டும் கட்டித்தருவது, தேசிய நெடுஞ்சாலைகளை புனரமைப்பது, பள்ளிகளை மீண்டும் கட்டுவது, பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் மூலம் நிவாரண உதவிகளை வழங்குவது, கால்நடைகளுக்கான உதவித் தொகுப்புகளை விநியோகிப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
வெள்ளத்தால் தங்கள் வீடுகளை இழந்த தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், உத்தராகண்ட் அரசால் சமர்ப்பிக்கப்பட்ட “சிறப்பு திட்டத்தின் கீழ்” நிதி உதவி விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீடுகள் மீண்டும் கட்டித்தரப்படும்.
பாதிப்பை மதிப்பிடுவதற்காக அமைச்சகங்கள் அளவிலான மத்திய குழுவை உத்தராகண்டிற்கு மத்திய அரசு ஏற்கனவே அனுப்பி உள்ளது. இந்தக் குழு சமர்ப்பிக்கும் விரிவான அறிக்கையின் அடிப்படையில், கூடுதல் உதவி வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும்.
இயற்கை பேரிடரில் உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து, பிரதமர் தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். இத்தகைய துயரமான தருணத்தில் மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றும் என்றும், தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் அண்மையில் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநில மக்களை பிரதமர் சந்தித்தார். பாதிக்கப்பட்டோருக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியதுடன், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு மனமார்ந்த இரங்கல்களையும் பிரதமர் தெரிவித்துக் கொண்டார்.
வெள்ளம் மற்றும் இதர பேரிடர்களால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஆதரவிழந்த குழந்தைகளின் நீண்ட கால பராமரிப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக குழந்தைகளுக்கான பி.எம் கேர்ஸ் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்தக் கட்டத்தில், மாநிலங்களுக்கான மேம்பட்ட விடுவிப்பு உட்பட பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் அறிவிக்கப்படும் உதவிகள், இடைக்காலத்திற்கானது மட்டுமே என்றும் பிரதமர் கூறினார். மாநிலத்தின் குறிப்பாணை மற்றும் மத்திய குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில் மதிப்பீட்டை மத்திய அரசு மேலும் ஆய்வு செய்யும். உடனடி நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம், மாநில நிர்வாகம் மற்றும் இதர சேவை வழங்கும் அமைப்புகளின் பணியாளர்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
சூழ்நிலையின் தீவிரத்தை பிரதமர் குறிப்பிட்டதுடன், நிலைமையை மேலும் சீராக்க, மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.
***
BAK/AD/SH
(Release ID: 2165866)
Visitor Counter : 2