பிரதமர் அலுவலகம்
சிங்கப்பூர் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்
Posted On:
04 SEP 2025 1:43PM by PIB Chennai
மதிப்பிற்குரிய சிங்கப்பூர் பிரதமர் வோங் அவர்களே,
இரு நாடுகளின் பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,
வணக்கம்!
சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு தமது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அந்நாட்டு பிரதமர் வோங்கை வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு நமது தூதரக உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
நண்பர்களே,
கடந்த ஆண்டு நான் சிங்கப்பூர் சென்றபோது, நமது உறவுகளை விரிவான உத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்தினோம். இந்த ஆண்டு, நமது உரையாடலும், ஒத்துழைப்பும் அதன் வேகத்தையும், ஆழத்தையும் அதிகரித்துள்ளது.
இப்போது தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், சிங்கப்பூர் நமது மிகப்பெரிய வர்த்தக ஒத்துழைப்பு நாடாக உள்ளது. சிங்கப்பூர் இந்தியாவில் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளது. நமது பாதுகாப்பு உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றன. மேலும் நமது மக்களுக்கு இடையிலான உறவுகள் வலுவாகவும், துடிப்பாகவும் உள்ளன.
நமது ஒத்துழைப்பை எதிர்காலத்தில் வலுப்படுத்துவதற்கு இன்று விரிவான செயல்திட்டத்தை நாங்கள் வகுத்துள்ளோம். நமது ஒத்துழைப்பு பாரம்பரிய துறைகளில் மட்டும் அல்லாமல் மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, பல்வேறு துறைகளில் வலுப்படுத்தப்படும். உற்பத்தி, பசுமை கப்பல் போக்குவரத்து, திறன் மேம்பாடு, அணுசக்தி, நகர்ப்புற நீர் மேலாண்மை ஆகியவை இருதரப்பு ஒத்துழைப்பின் மையப் புள்ளிகளாக அமையும்.
நமது இருதரப்பு வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பதற்காக, நமது விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம், ஆசியான் உடனான நமது தடையற்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றை குறித்த காலக்கெடுவிற்குள் ஆய்வு செய்து உரிய முடிவை எட்ட நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
இந்தியாவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்துவதில் நமது மாநிலங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஜனவரி மாதத்தில், சிங்கப்பூர் அதிபர் திரு தர்மனின் இந்திய வருகையின் போது, அவர் ஒடிசாவிற்குப் பயணம் செய்தார். கடந்த ஆண்டு, ஒடிசா, தெலுங்கானா, அசாம், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள் சிங்கப்பூருக்கு பயணம் செய்துள்ளனர். குஜராத்தின் நிதி தொழில்நுட்ப நகரம் இப்போது நமது பங்குச் சந்தைகளை இணைக்கும் மற்றொரு இணைப்பாக உருவெடுத்துள்ளது.
நண்பர்களே,
கடந்த ஆண்டு கையெழுத்திடப்பட்ட செமிகண்டக்டர் சூழல் அமைப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம், ஆராய்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. 'செமிகான் இந்தியா' மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்களின் உற்சாகமான பங்கேற்பு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாகும்.
சென்னையில், திறன் மேம்பாட்டுக்கான தேசிய சிறப்பு மையத்தை நிறுவுவதில் சிங்கப்பூர் ஒத்துழைத்து செயல்படும். மேம்பட்ட உற்பத்தித் துறையில் திறன்வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதில் இந்த மையம் கவனம் செலுத்தும்.
நண்பர்களே,
தொழில்நுட்பமும், புதுமையும் நமது ஒத்துழைப்பின் வலுவான தூண்களாகும். செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், பிற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். விண்வெளித் துறையில் இன்று கையெழுத்தான ஒப்பந்தம், விண்வெளி அறிவியலில் நமது ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும். நமது இளைஞர்களின் திறமையை ஒருங்கிணைத்துப் பயன்படுத்துவதற்காக, இந்த ஆண்டு இறுதியில் இந்தியா-சிங்கப்பூர் ஹேக்கத்தானின் அடுத்த சுற்றை நடத்தவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
யூபிஐ, பேநவ் ஆகிய நமது வெற்றிகரமான டிஜிட்டல் ஒத்துழைப்பிற்கு பிரகாசமான எடுத்துக்காட்டுகள். 13 புதிய இந்திய வங்கிகள் இப்போது இந்த முயற்சியில் இணைந்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
பசுமை மற்றும் டிஜிட்டல் கப்பல் வழித்தடங்கள் குறித்த இன்றைய ஒப்பந்தம், கடல்சார் துறையில் பசுமை எரிபொருள் விநியோகச் சங்கிலியில் குறிப்பிடத்தக்க உத்வேகத்தை அளிக்கும். இந்தியா தனது துறைமுக உள்கட்டமைப்பை வலுப்படுத்த மிக வேகமாக செயல்பட்டு வருகிறது, மேலும் இந்தத் துறையில் சிங்கப்பூரின் நிபுணத்துவம் மகத்தானது. இன்று முன்னதாக, சிங்கப்பூரின் எஸ்பிஏ இன்டர்நேஷனல் உருவாக்கிய பாரத் மும்பை கொள்கலன் முனையத்தின் 2-ம் கட்டத்தை நாங்கள் தொடங்கி வைத்தோம். இந்த மைல்கல் நடவடிக்கை நமது கொள்கலன் கையாளும் திறனை மேலும் மேம்படுத்தும்.
நண்பர்களே,
சிங்கப்பூர் நமது கிழக்கு நோக்கிய கொள்கையின் ஒரு முக்கிய தூணாகும். நாங்கள் இணைந்து, ஆசியான் அமைப்புடனான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உள்ளோம், மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கான எங்களது கூட்டு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வோம்.
பயங்கரவாதம் குறித்த பொதுவான கவலைகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபடுவது மனிதகுலத்தை மதிக்கும் அனைத்து நாடுகளின் கடமை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய மக்களுக்கு இரங்கல் தெரிவித்ததற்கும், பயங்கரவாதத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் உறுதியான ஆதரவை அளித்ததற்கும் சிங்கப்பூர் பிரதமர் வோங்கிற்கும், சிங்கப்பூர் அரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிப்பிற்குரிய சிங்கப்பூர் பிரதமர் அவர்களே,
நமது உறவுகள் தூதரக உறவுகளை தாண்டி நெருக்கமானவை
இது நல்லநோக்கங்களுடன் கூடிய ஒத்துழைப்பாகும்,
இந்த உறவு பகிரப்பட்ட மதிப்புகளில் வேரூன்றியுள்ளது,
இது பரஸ்பர நலன்களை அடிப்படையாக கொண்டது.
அமைதி, முன்னேற்றம், செழிப்பு ஆகியவற்றுக்கான பொதுவான தொலைநோக்குப் பார்வையால் இது தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.
இந்த ஒத்துழைப்புக்கான உங்கள் தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***
(Release ID: 2163645)
VJ/PLM/AG/KR
(Release ID: 2163779)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam