பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் செமிகான் இந்தியா 2025-ஐ தொடங்கிவைத்தார்
எதிர்கால குறைக்கடத்தியை இந்தியாவுடன் இணைந்து வடிவமைக்க உலக நாடுகள் தயாராக உள்ளன : பிரதமர்
Posted On:
02 SEP 2025 11:58AM by PIB Chennai
இந்தியாவின் குறைக்கடத்தி துறையை வளர்ச்சியடைய செய்யும் நோக்கில் செமிகான் இந்தியா – 2025-ஐ புதுதில்லி யஷோபூமியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த குறைக்கடத்தி தொழில்துறையின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதை குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்துள்ள இளம் மாணவர்கள், புத்தொழில் நிறுவனங்களுடன் தொடர்புடைய தொழில்முனைவோர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் ஆகியோரை தாம் வரவேற்பதாக கூறினார்.
ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் தாம் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு தாயகம் திரும்பியதாகவும், இன்று யஷோ பூமியில் இலட்சியங்களுடனும், நம்பிக்கையுடனும் அரங்கத்தை நிரப்பியுள்ள பார்வையாளர்கள் இடையே தாம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்திற்கான தமது ஆர்வம் எப்போதும் இயற்கையானது மற்றும் நன்கு அறியப்பட்டது என்று குறிப்பிட்ட பிரதமர், தமது ஜப்பான் பயணத்தின் போது, அந்நாட்டு பிரதமர் திரு ஷிகெரு இஷிபாவுடன் டோக்கியோ எலக்டரான் தொழிற்சாலையைப் பார்வையிடும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாக தெரிவித்தார். தற்போது அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பார்வையாளர்களிடையே இன்று இடம் பெற்றுள்ளது குறித்து அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வம் இதுபோன்ற கூட்டங்களில் தம்மை தொடர்ந்து கலந்துகொள்ள செய்வதாக பிரதமர் கூறினார். பார்வையாளர்கள் இடையே இன்று இருப்பது தமக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார்.
40 முதல் 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் உலகம் முழுவதும் உள்ள குறைக்கடத்தி துறையைச் சேர்ந்த நிபுணர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளது குறித்து குறிப்பிட்ட திரு மோடி, இந்தியாவின் புதுமைக்கண்டுபிடிப்பு மற்றும் இளையோர் சக்தி ஆகியவையும் இந்நிகழ்வில் காணப்படுவதாக தெரிவித்தார். உலக நாடுகள் இந்தியாவை நம்புகிறது, உலக நாடுகள் இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது, எதிர்கால குறைக்கடத்தியை இந்தியாவுடன் இணைந்து வடிவமைக்க உலக நாடுகள் தயாராக உள்ளது என்ற தெளிவான செய்தியை இந்த தனித்துவமிக்க ஒருங்கிணைப்பு விளக்குவதாக அவர் குறிப்பிட்டார். செமிகான் இந்தியா கூட்டத்தில் பங்கேற்றுள்ள விருந்தினர்களை வரவேற்ற பிரதமர், வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்புடைய நாடு என்ற இந்தியாவின் பயணத்தில் அவர்கள் முக்கிய கூட்டாளிகள் என்று உறுதிப்படுத்தினார்.
அண்மையில் வெளியிடப்பட்ட இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த தகவல்களை எடுத்துரைத்த பிரதமர், ஒவ்வொரு எதிர்பார்ப்பு, ஒவ்வொரு மதிப்பீடுதலும் ஒவ்வொரு கணிப்பிலும் மீண்டும் ஒருமுறை இந்தியா சிறந்து விளங்கியுள்ளதாக தெரிவித்தார். உலக நாடுகள் பொருளதாரம் சாரந்த விவகாரங்களையும் மற்றும் சவால்களையும் எதிர்கொண்ட நிலையில், இந்தியா 7.8 சதவீத வளர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளது. உற்பத்தி, சேவைகள், வேளாண்மை, கட்டுமானம் போன்ற அனைத்து துறைகளிலும் இந்த வளர்ச்சியும், உற்சாகமும் காணப்படுவதாக திரு மோடி கூறினார். இந்தியாவின் விரைவான வளர்ச்சி, தொழில்துறைகள் மற்றும் அனைத்து குடிமக்களிடையே புதிய சக்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த வளர்ச்சிப்பாதை இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக திகழச் செய்வதற்கு துரிதப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
குறைக்கடத்திகளின் உலகில், எண்ணெயை கருப்பு தங்கம் என்றும், சிப்களை டிஜிட்டல் வைரங்கள் என்றும், அவ்வப்போது கூறப்படுவது குறித்து குறிப்பிட்ட பிரதமர், கடந்த நூற்றாண்டை எண்ணெய் வடிவமைத்ததாகவும், எண்ணெய் கிணறுகள் மூலம் உலகின் விதி தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இக்கிணறுகளில் இருந்து எவ்வளவு பெட்ரோல் எடுக்கப்பட்டது என்பதைப் பொறுத்து உலகளாவியப் பொருளாதாரம் ஏற்ற, இறக்கத்துடன் இருந்ததாகவும், எனினும், 21-ம் நூற்றாண்டின் சக்தி தற்போது சிறிய அளவிலான சிப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அளவில் சிறியதாக இருப்பினும், இந்த சிப்புகள் உலகளாவிய முன்னேற்றத்தை சிறப்பாக துரிதப்படுத்தும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். உலகளவில் குறைக்கடத்தி சந்தை மதிப்பு ஏற்கனவே 600 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்றும், எதிர்வரும் ஆண்டுகளில் இது 1 டிரில்லியன் டாலர்களை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் திரு மோடி சுட்டிக்காட்டினார். குறைக்கடத்தி துறையில் இந்தியா முன்னேறிச் செல்லும் தருணத்தைக் கருத்தில் கொண்டு, இந்த 1 டிரில்லியன் டாலர் சந்தையில் இந்தியா சிறப்பான பங்களிப்பைக் கொண்டிருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
குறைக்கடத்தி துறையில் இந்தியா முன்னேறிச் செல்லும் விரைவை சுட்டிக்காட்ட விரும்புவதாகக் கூறிய திரு மோடி, 2021-ம் ஆண்டில் செமிகான் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். 2023-ம் ஆண்டில், இந்தியாவின் முதலாவது குறைக்கடத்தி உற்பத்தி ஆலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், 2024-ம் ஆண்டு, மேலும் சில ஆலைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், 2025-ம் ஆண்டில், மேலும் ஐந்து திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது மொத்தம், பத்து குறைக்கடத்தி திட்டங்கள் உள்ளதாகவும், இது ரூ.1.5 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புடைய முதலீட்டை கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். இது இந்தியாவின் மீது உலக நாடுகளின் வளர்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
குறைக்கடத்தித் துறையில் விரைவான நடவடிக்கை முக்கியம் என்பதை வலியுறுத்திய திரு மோடி, தொழிற்சாலைகளுக்கு கோப்புகளை கொண்டு செல்லும் நேரத்தை குறைத்தல், காகிதப் பணியைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் மின்னணு ஒருங்கிணைந்த சர்க்யூட்களை உருவாக்க பயன்படுத்தப்படும் வேஃபர்ஸ் உபகரண உற்பத்தி பணியை விரைவாக தொடர முடியும் என்று கூறினார். இந்த அணுகுமுறையில் அரசு பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார். தேசிய ஒற்றை சாளர முறை செயல்படுத்தப்பட்டுள்ளதால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து ஒப்புதல்களையும் ஒரே தளத்தில் அணுக முடியும். இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் விரிவான காகிதப் பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நிலம், மின்சார விநியோகம், துறைமுகம், விமான நிலைய இணைப்பு, திறமையான பணியாளர் தொகுப்பை அணுகுதல் போன்ற உள்கட்டமைப்பு மாதிரிகளுக்கு வழிவகுக்கும் வகையில், குறைக்கடத்தி பூங்காக்கள் நாட்டில் அமைக்கப்படும் என்று பிரதமர் கூறினார். இதுபோன்ற உள்கட்டமைப்பு ஊக்கத்தொகைகளுடன் வழங்கப்படும் போது, தொழில்துறை வளர்ச்சி தவிர்க்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார். உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் மூலமாகவோ அல்லது வடிவமைப்புடன் கூடிய மானியங்கள் மூலமாகவோ இந்தியா அனைத்து திறன்களையும் வழங்குகிறது. அதனால்தான் முதலீடு தொடர்ந்து சீராக வருகிறது என்று அவர் தெரிவித்தார். இந்தியா பின்புல செயல்பாடுகளுக்கு அப்பால் முழு அளவிலான குறைக்கடத்தி உற்பத்தி நாடாக மாறுவதை நோக்கி முன்னேறிச் செல்வதாக திரு மோடி தெரிவித்தார். இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று திரு மோடி உறுதிப்படுத்தினார். நமது பயணம் நம்மை தாமதமாகத் தொடங்கியது, ஆனால் தற்போது எங்களை எதுவும் தடுக்க இயலாது என்று அவர் கூறினார். சிஜி மின்சார ஆலை நான்கு, ஐந்து நாட்களுக்கு முன்னதாக ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியதாக பிரதமர் தெரிவித்தார். கெய்ன்ஸின் ஆலையும் தொடங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மைக்ரான் மற்றும் டாட்டாவிலிருந்து சோதனை சிப்புகள் ஏற்கனவே உற்பத்தியில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். வர்த்தக சிப்புகள் உற்பத்தி இந்த ஆண்டு தொடங்கும் என்று குறிப்பிட்ட அவர், குறைக்கடத்தித் துறையில் இந்தியா அடைந்து வரும் விரைவான முன்னேற்றத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் செமிகண்டக்டர் வெற்றியின் கதை தொழில்நுட்பத்தோடு நின்றுவிடவில்லை என்று கூறிய திரு மோடி, விரிவான சூழல் அமைப்பை இந்தியா கட்டமைத்துள்ளது. அதாவது, வடிவமைத்தல், உற்பத்தி, கட்டுதல் (பேக்கேஜிங்), உயர் தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று குறிப்பிட்டார். இவையும், உள்நாட்டிலேயே உருவாக்கப்படுவது என்றார். செமிகண்டக்டர் இயக்கம் என்பது சிப் தயாரிப்புக்கானது மட்டுமல்ல, நாட்டை தற்சார்புடையதாகவும், உலக அளவில் போட்டியிடுவதற்குமான வலுவான செமிகண்டக்டர் சூழல் அமைப்பை உருவாக்குவதற்காகவும் என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்திய செமிகண்டக்டர் இயக்கத்தின் மற்றொரு அம்சம் பற்றி குறிப்பிட்ட திரு மோடி, உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களோடு இந்தத் துறையில் நாடு முன்னேறி வருகிறது என்றார். உள்நாட்டிலேயே சிப்கள் தயாரிப்பதன் மூலம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை வலுவூட்ட இந்தியா கவனம் செலுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார். உலகின் அதிநவீனமான சிப்கள் தயாரிப்பதற்காக நொய்டாவிலும், பெங்களூருவிலும், வடிவமைப்பு மையங்கள் அமைக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த சிப்கள் 21-ம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்களுக்கு வலுவூட்டும் என்பதை அவர் எடுத்துரைத்தார். உலக அளவில் சிப் செமிகண்டக்டர் துறை எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இவற்றுக்குத் தீர்வு காண இந்தியா தீவிரமாக செயல்படுகிறது என்று உறுதிபடத் தெரிவித்தார். நகரங்களில் உயர்ந்தெழும் கட்டடங்களும் மற்ற கட்டுமானங்களும் கண்ணுக்குத் தெரிகின்றன. ஆனால் இவற்றின் அடித்தளமாக எஃகு உள்ளது. அதே போல் இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அடித்தளமாக முக்கிய கனிமங்கள் விளங்குகின்றன. இந்தியா தற்போது தேசிய முக்கிய கனிம இயக்கத்தை செயல்படுத்துகிறது. இவற்றின் தேவையை உள்நாட்டிலேயே பெறுவதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் முக்கிய கனிமங்கள் திட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
செமிகண்டக்டர் துறையின் வளர்ச்சியில் புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அரசு எதிர்பார்க்கிறது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். உலகின் செமிகண்டக்டர் வடிவமைப்புத் திறனில் இந்தியா 20 சதவீத பங்களிப்பு செய்கிறது என்று மேலும் தெரிவித்தார். நாட்டின் இளைஞர்கள் செமிகண்டக்டர் தொழில்துறைக்கான மனிதவள மூலதனமாக விளங்குவதாக அவர் தெரிவித்தார். இளம் தொழில் முனைவோருடனும், புத்தொழில் நிறுவனங்களுடனும் அரசு தோளோடு தோள் நின்று உதவும் என்று உறுதியளித்த பிரதமர், செமிகண்டக்டர் தொழில்துறை முன்னேற்றத்திற்கு இவர்கள் முன்வந்து பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வடிமைப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம், புத்தொழில் நிறுவனங்களுக்கான சிப்கள் திட்டம் ஆகியவை இவர்களுக்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்தத் துறையில் இந்திய அறிவுசார் சொத்தினை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். உத்திசார் கூட்டாண்மைகள் மூலம் இந்த முயற்சிக்கு, அண்மையில் தொடங்கப்பட்ட தேசிய ஆராய்ச்சி நிதியம் உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார். செமிகண்டக்டர் சூழலை கட்டமைக்க மாநிலங்கள் ஆரோக்கியமான போட்டியில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், தங்களின் பிராந்தியத்திற்குள் முதலீட்டுச் சூழலை விரிவாக்க வேண்டும் என்று கூறினார்.
சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற மந்திரத்தைப் பின்பற்றி இந்தியா இப்பொழுது உள்ள நிலையை எட்டியுள்ளது என்றும் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களின் புதிய கட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறிய பிரதமர், இந்திய செமிகண்டக்டர் இயக்கத்தின் அடுத்தக் கட்டத்திற்கான பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்தியாவின் கொள்கைகள் குறுகிய கால சமிக்ஞைகள் அல்ல, நீண்டகால உறுதிபாடுகள் என்பதை வலியுறுத்திய அவர், ஒவ்வொரு முதலீட்டாளரின் தேவைகளும், நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது, இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, உலகத்தால் நம்பப்பட்டது என்று உலகம் கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் ஒவ்வொரு சிறிய முயற்சியும் வெற்றியாக இருக்க வேண்டும், ஒவ்வொரு பைட்டும் கண்டுபிடிப்பால் நிறைய வேண்டும். இந்தப் பயணம் குறையற்றதாக, உயர் செயல்திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறி பிரதமர், தமது உரையை நிறைவு செய்தார்.
மத்திய அமைச்சர்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ், திரு ஜிதின் பிரசாதா, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜ் மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பின்னணி
செப்டம்பர் 2 முதல் 4 வரை நடைபெறும் செமிகான் இந்தியா 2025 என்ற 3 நாள் மாநாடு இந்தியாவில் வலுவான நீடித்த செமிகண்டக்டர் சூழல் அமைப்பில் கவனம் செலுத்தும். மேலும், வடிவமைப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை எடுத்துரைப்பதோடு புத்தொழில் சூழல் அமைப்பின் வளர்ச்சி, சர்வதேச ஒத்துழைப்பு, இந்தியாவின் செமிகண்டக்டர் துறைக்கான எதிர்காலத் திட்டம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும்.
இந்த மாநாட்டில் 48 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான பிரதிநிதிகள், 50 உலகளாவிய தலைவர்கள் உட்பட 150-க்கும் அதிகமான உரையாளர்கள் 350-க்கும் அதிகமான காட்சிப்படுத்துநர் உட்பட 20,750 பேர் பங்கேற்பார்கள். இதில், 6 நாடுகளின் வட்டமேசை விவாதங்களும் நடைபெறும். பணியாளர் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கான அரங்குகளும் இடம் பெறும்.
****
(Release ID: 2162980)
SS/IR/RJ/DL
(Release ID: 2163149)
Visitor Counter : 8
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam