பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லி யஷோபூமியில் செப்டம்பர் 2 அன்று செமிகான் இந்தியா – 2025 மாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

செப்டம்பர் 3 அன்று செமிகான் இந்தியாவில் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்கிறார்

இந்தியாவில் நீடித்த மற்றும் வலுவான குறைக்கடத்தி சூழலுக்காக செமிகான் இந்தியா-2025

குறைகடத்தி ஆலைகள், மேம்பட்ட தொகுப்பு, செயற்கை நுண்ணறிவு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நவீன உற்பத்தி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள்

48-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேலான பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்

Posted On: 01 SEP 2025 3:30PM by PIB Chennai

இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை வளர்ச்சியடையச் செய்யும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லி யஷோபூமியில்  செப்டம்பர் 2 அன்று காலை 10 மணிக்கு  செமிகான் - இந்தியா 2025 மாநாட்டை தொடங்கி வைக்கவுள்ளார். செப்டம்பர் 3 அன்று  காலை 9.30 மணிக்கு நடைபெறும் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்கும்  மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்க உள்ளார்.

செப்டம்பர் 2 முதல் 4-ம் தேதி வரை நடைபெறும் 3 நாள் மாநாட்டில், இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட, விரைவான மற்றும் நீடித்த குறைக்கடத்தி சூழல் குறித்து கவனம் செலுத்தப்படும். செமிகான் இந்தியா திட்டம், குறைக்கடத்தி ஆலை மற்றும் மேம்பட்ட தொகுப்புத் திட்டங்கள், உள்கட்டமைப்பு தயார் நிலை, நவீன உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவில்  புதுமை கண்டுபிடிப்புகள், முதலீட்டு வாய்ப்புகள், மாநிலங்கள் அளவிலான கொள்கை அமலாக்கம் உள்ளிட்டவை குறித்த அமர்வுகள் நடைபெற உள்ளது.  அத்துடன், இந்தியாவின் குறைக்கடத்தி துறைக்கான எதிர்கால திட்டம், சர்வதேச ஒத்துழைப்பு,  புத்தொழில் சூழல் வளர்ச்சி ஆகியவற்றுக்காக வடிவமைப்புடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.

48-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேலான பிரதிநிதிகள் 150-க்கும் மேலான பேச்சாளர்கள், 50-க்கும் அதிகமான  உலகளாவிய தலைவர்கள், 350-க்கும் மேலான கண்காட்சியாளர்கள் உள்ளிட்ட 20,740-க்கும் அதிகமானோர் இதில் பங்கேற்க உள்ளனர். 6 நாடுகள் பங்கேற்கும் வட்டமேசை விவாதங்கள், செயல் திறன் மேம்பாடு மற்றும் புத்தொழில்களுக்கான நாடுகளின் அரங்குகள் உள்ளிட்டவை  இடம் பெறவுள்ளன.

பல்வேறு நாடுகளில் ஏற்பாடு செய்யப்படும் குறைக்கடத்தி மாநாடுகள், குறைக்கடத்தித் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அதிகளவில் சென்றடைவதையும், பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நாடுகளின் குறைகடத்தி சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான கொள்கைகளையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. குறைக்கடத்தி வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான மையமாக இந்தியாவை திகழச் செய்ய வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கின் அடிப்படையில் இம்மாநாடுகள் 2022-ல் பெங்களூருவிலும், 2023-ல் காந்தி நகரிலும், 2024-ல் கிரேட்டர் நொய்டாவிலும் நடத்தப்பட்டன.

----

(Release ID: 2162653)

AD/IR/KPG/KR


(Release ID: 2162746) Visitor Counter : 2