பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25-வது உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்.

Posted On: 01 SEP 2025 11:53AM by PIB Chennai

சீனாவின்  தியான்ஜின்  நகரில் 2025, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்  25-வது உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சிக்கான திட்டமிடல், உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல், அமைதி மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதிசார் ஒத்துழைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக் குறித்து இக்கூட்டத்தில் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டது.

இந்த உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கட்டமைப்பின் கீழ், ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த இந்தியாவின் அணுகுமுறையை எடுத்துரைத்தார். இது தொடர்பாக பாதுகாப்பு, தொடர்புகள், வாய்ப்புகள் ஆகிய 3 அம்சங்களின் கீழ், சிறந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். வளர்ச்சி மற்றும் வளமைக்கான முக்கிய அம்சங்களாக அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றின் அவசியம் குறித்து வலியுறுத்திய அவர், தீவிரவாதத்திற்கு எதிராக உறுப்பு நாடுகள்  உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைககளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தீவிரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்தல் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து அவர் சுட்டிக்காட்டினார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, தீவிரவாதத்திற்கு எதிரான தங்களது வலிமையான ஆதரவை வெளிப்படுத்திய உறுப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய பிரதமர், தீவிரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளில் இரட்டை நிலைப்பாட்டைக் கடைபிடிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை இதற்கு பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் நம்பிக்கையை கட்டமைத்தல் ஆகியவற்றில் போக்குவரத்து இணைப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், சபஹர் துறைமுகம், சர்வதேச வடக்கு – தெற்கு போக்குவரத்து வழித்தடம் போன்ற திட்டங்களுக்கு இந்தியா உறுதியுடன் ஆதரவளிப்பதாக தெரிவித்தார். புத்தொழில்கள், புதுமை கண்டுபிடிப்புகள், இளையோருக்கு அதிகாரமளித்தல், பகிரப்படும் பாரம்பரியம் ஆகிய துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் உரையாற்றிய அவர், இவை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்  திட்டத்தின் கீழ், பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மக்களுக்கு இடையேயான தொடர்புகள், கலாச்சார புரிந்துணர்வு ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக இந்த அமைப்பில் நாகரீக உரையாடல் அமைப்பை தொடங்க வேண்டும் என்று பிரதமர் பரிந்துரைத்தார்.

இந்த அமைப்பின் சீர்திருத்தம் சார்ந்த திட்டங்களுக்கு பிரதமர் ஆதரவு தெரிவித்தார். இது தொடர்பாக திட்டமிட்டு நடைபெறும் குற்றம், போதைப் பொருள் கடத்தல், இணையப் பாதுகாப்பு ஆகியவற்றை எதிர்கொள்வதற்காக மையங்களை ஏற்படுத்துவது என்ற முடிவுக்கு அவர் வரவேற்பு தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை  உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதே போன்ற அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த உச்சிமாநாட்டிற்கு தம்மை அன்புடன் அழைத்து விருந்தோம்பல் அளித்ததற்காக, சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்கிற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர், இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அடுத்த தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ள கிர்கிஸ்தானுக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார். இந்த உச்சி மாநாட்டின் நிறைவில் தியான்ஜின் பிரகடனத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்புநாடுகள் ஏற்றுக் கொண்டன.

***

(Release ID: 2162574)

AD/IR/KPG/KR


(Release ID: 2162627) Visitor Counter : 2