பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமரின் காணொலி செய்தி

Posted On: 23 AUG 2025 12:13PM by PIB Chennai

அமைச்சரவை சகாக்களே, இஸ்ரோ மற்றும் விண்வெளித் துறையின் அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களே, என் அன்புக்குரிய நாட்டு மக்களே!

தேசிய விண்வெளி தினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். இந்த ஆண்டு, விண்வெளி தினத்தின் கருப்பொருள் ' ஆர்யபட்டாவிலிருந்து ககன்யான் வரை; பண்டைய ஞானத்திலிருந்து  எல்லையற்ற சாத்தியக்கூறுகள்' என்பதாகும். இது கடந்த காலத்தின் நம்பிக்கையையும் எதிர்காலத்தின் உறுதியையும் உள்ளடக்கியது. இன்று, இவ்வளவு குறுகிய காலத்தில், தேசிய விண்வெளி தினம் நமது இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் ஒரு சந்தர்ப்பமாக மாறியுள்ளது என்பதை நாம் காண்கிறோம். இது உண்மையில் தேசத்திற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விஷயமாகும். தேசிய விண்வெளி தினத்தில் விண்வெளித் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும், நமது விஞ்ஞானிகளுக்கும், அனைத்து இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில், பாரதம் 'வானியல் மற்றும் வானியற்பியல் குறித்த சர்வதேச ஒலிம்பியாட்'- நடத்தியது. இந்தப் போட்டியில், உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 இளைஞர்கள் பங்கேற்றனர். நமது இந்திய இளைஞர்களும் பதக்கங்களை வென்றனர். இந்த ஒலிம்பியாட், விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமையின் அடையாளமாகும்.

நண்பர்களே,

நமது இளைஞர்களிடையே விண்வெளியில் அதிக ஆர்வத்தைத் தூண்டுவதற்காக, இஸ்ரோ, இந்திய விண்வெளி ஹேக்கத்தான் மற்றும் ரோபாட்டிக்ஸ் சவால் போன்ற முயற்சிகளையும் தொடங்கியுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் வெற்றியாளர்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன்.

நண்பர்களே,

விண்வெளித் துறையில், ஒன்றன்பின் ஒன்றாக சாதனைகளைப் படைப்பது  இப்போது பாரதத்திற்கும் நமது விஞ்ஞானிகளுக்கும் இயல்பாக மாறிவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சந்திரனின் தென் துருவத்தை அடைந்த வரலாற்றில் முதல் நாடாக இந்தியா மாறியது. விண்வெளியில் டாக்கிங் மற்றும் அன்-டாக்கிங் திறன் கொண்ட உலகின் நான்காவது நாடாகவும் நாம் மாறிவிட்டோம். மூன்று நாட்களுக்கு முன்புதான், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியதன் மூலம், அவர் ஒவ்வொரு இந்தியரையும் பெருமையில் ஆழ்த்தினார். அந்த மூவண்ணக் கொடியை அவர் எனக்குக் காட்டியபோது, அந்தத் தருணம், அந்த அனுபவம், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. குரூப் கேப்டன் சுபன்ஷுவுடனான எனது உரையாடலில், புதிய பாரதத்தின் இளைஞர்களின் எல்லையற்ற தைரியத்தையும் எல்லையற்ற கனவுகளையும் நான் கண்டேன். இந்தக் கனவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல, பாரதத்திற்காக ஒரு விண்வெளி வீரர் குழுவையும் நாங்கள் தயார் செய்கிறோம். இந்த விண்வெளி தினத்தில், எனது இளம் நண்பர்களை இந்த விண்வெளி வீரர் குழுவில் சேர்ந்து, பாரதத்தின் கனவுகளுக்கு சிறகுகளை வழங்க அழைக்கிறேன்.

நண்பர்களே,

இன்று பாரதம் செமி-கிரையோஜெனிக் இயந்திரம் மற்றும் மின்சார உந்துவிசை போன்ற திருப்புமுனை தொழில்நுட்பங்களில் வேகமாக முன்னேறி வருகிறது. மிக விரைவில், நமது அனைத்து விஞ்ஞானிகளின் கடின உழைப்பின் மூலம், பாரதம் ககன்யானை ஏவும், வரும் ஆண்டுகளில், பாரதம் அதன் சொந்த விண்வெளி மையத்தையும் உருவாக்கும். நாம் ஏற்கனவே சந்திரனையும் செவ்வாய்க் கிரகத்தையும் அடைந்துவிட்டோம். இப்போது மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான பல முக்கிய மர்மங்கள் மறைந்திருக்கும் விண்வெளிப் பகுதிகளை நாம் ஆழமாக ஆராய வேண்டும். விண்மீன் திரள்களுக்கு அப்பால் நமது அடிவானம் உள்ளது!

நண்பர்களே,

விண்வெளியின் எல்லையற்ற விரிவு, எந்த மைல்கல்லையும் இறுதி இலக்கு அல்ல என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. விண்வெளித் துறையில் கூட, கொள்கை மட்டத்தில், ஒருபோதும் இறுதி நிறுத்தம்/முடிவுப் புள்ளி இருக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன். அதனால்தான் செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நமது பாதை 'சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம்' என்று சொன்னேன். கடந்த பதினொரு ஆண்டுகளில், பாரதம் விண்வெளித் துறையில் ஒன்றன்பின் ஒன்றாக பெரிய சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. நமது நாட்டில் விண்வெளி போன்ற எதிர்காலத் துறைகள் எண்ணற்ற கட்டுப்பாடுகளால் பிணைக்கப்பட்டிருந்த ஒரு காலம் இருந்தது. அந்த தடைகளை நாங்கள் உடைத்தோம். தனியார் துறை விண்வெளி தொழில்நுட்பத்தில் பங்கேற்க அனுமதித்தோம். இன்று, 350-க்கும் மேற்பட்ட புத்தொழில்  நிறுவனங்கள் விண்வெளி தொழில்நுட்பத்தில் புதுமை மற்றும் வளர்ச்சியின் இயந்திரங்களாக உருவெடுத்துள்ளன. இந்த நிகழ்விலும் அவற்றின் வலுவான இருப்பைக் காணலாம். விரைவில், எங்கள் தனியார் துறையால் உருவாக்கப்பட்ட முதல் பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும். இந்தியாவின் முதல் தனியார் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் உருவாக்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பொது-தனியார் கூட்டாண்மை மூலம், புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விண்வெளித் துறையில் பாரதத்தின் இளைஞர்களுக்கு எத்தனை பெரிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம்.

நண்பர்களே,

ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து, பாரதம் தன்னிறைவு பெறுவதற்கு அவசியமான பல பகுதிகளைப் பற்றி நான் பேசினேன். ஒவ்வொரு துறையும் அதன் சொந்த இலக்குகளை நிர்ணயிக்கச் சொன்னேன். இன்று, விண்வெளி தினத்தன்று, நமது விண்வெளி புத்தொழில்  நிறுவனங்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்: அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளித் துறையில் ஐந்து யூனிகார்ன்களை உருவாக்க நாம் இலக்கு வைக்க வேண்டும். தற்போது, இந்திய மண்ணிலிருந்து ஆண்டுதோறும் ஐந்து முதல் ஆறு பெரிய ஏவுதல்களை நாம் காண்கிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் வாரத்திற்கு ஒன்று என்ற வகையில், ஐம்பது ராக்கெட்டுகளை ஏவும் நிலையை அடைய தனியார் துறை முன்னிலை வகிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்இதற்காக, தேசத்திற்குத் தேவையான அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான நோக்கமும் மன உறுதியும் அரசிடம் உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் அரசு உங்களுடன் நிற்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

நண்பர்களே,

விண்வெளி தொழில்நுட்பத்தை அறிவியல் ஆய்வுக்கான ஒரு ஊடகமாக மட்டுமல்லாமல், வாழ்க்கையை எளிதாக்குவதற்கான ஒரு கருவியாகவும் பாரதம் கருதுகிறது. இன்று, விண்வெளி தொழில்நுட்பம் பாரதத்தில் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி வருகிறது. அது பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் செயற்கைக்கோள் அடிப்படையிலான மதிப்பீடாக இருந்தாலும் சரிசெயற்கைக்கோள்கள் மூலம் மீனவர்களுக்கு வழங்கப்படும் தகவல் மற்றும் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை அல்லது பிரதமரின் விரைவு  சக்தி தேசியப் பெருந்திட்டத்தில்  புவிசார் தரவுகளைப் பயன்படுத்துதல் போன்றவையாக இருந்தாலும் சரி, விண்வெளியில் இந்தியாவின் முன்னேற்றங்கள் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகின்றன. இந்தத் திசையில், மத்திய மற்றும் மாநில அளவில் விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக நேற்று 'தேசிய சந்திப்பு 2.0' ஏற்பாடு செய்யப்பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நமது மக்களின் சேவைக்காக புதிய தீர்வுகள் மற்றும் புதுமைகளை உருவாக்க நமது விண்வெளி புத்தொழில்  நிறுவனங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். வரும் காலங்களில், இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன், தேசிய விண்வெளி தினத்தில் உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!.

****

(Release ID: 2160046)

AD/PKV/SG

 


(Release ID: 2160211)