தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு 99,446 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
Posted On:
21 AUG 2025 3:16PM by PIB Chennai
பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வேலைவாய்ப்புத் திட்டம் என்ற பெயரில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு மத்திய அரசு ஜூலை 1-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இத்திட்டம் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஆதரவளிப்பதுடன் அனைத்து பிரிவினருக்கும் சமூக பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்புக் கிடைப்பதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுடன் குறிப்பாக உற்பத்தித் துறையில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது.
தொழிலாளர் அமைச்சகங்கள், வர்த்தகம் மற்றும் தொழிற்சங்கங்கள், துறை சார்ந்த நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் தரப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென தொழிலாளர் அமைச்சகம் மற்றும் துறை சார்ந்த பிரதிநிதிகள் அடங்கிய வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இத்திட்டத்தை திறம்பட அமல்படுத்துவது கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வது மற்றும் இத்திட்டத்தின் நடைமுறைகள் குறித்து தொடர் ஆய்வுகளை மேற்கொள்வது போன்ற பணிகளை உறுதி செய்யும் வகையில் செயற்குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 2027 ஜூலை 31-ம் தேதி வரை இரண்டு ஆண்டு காலத்திற்கு பதிவு செய்து கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக 7 ஆண்டுகளுக்கு மொத்தம் 99,446 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கும் தொழில் வழங்குநருக்கு ஊக்கத்தொகை வழங்கும் வகையிலும் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
இத்தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்த்லஜே தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2159009
***
SS/SV/KPG/KR/DL
(Release ID: 2159412)