குடியரசுத் தலைவர் செயலகம்
இந்திய வெளியுறவுப் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
Posted On:
19 AUG 2025 1:56PM by PIB Chennai
இந்திய வெளியுறவுப் பணி(ஐ.எஃப்.எஸ்) பயிற்சி அதிகாரிகள் (2024 தொகுப்பு) இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்முவைச் சந்தித்தனர்.
பயிற்சி அதிகாரிகளிடையே பேசிய குடியரசுத் தலைவர், இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்துள்ளதற்காக அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்ததோடு தங்களது பயணத்தைத் தொடங்க உள்ள அவர்கள் அமைதி, பன்முகத்தன்மை, அகிம்சை மற்றும் பேச்சுவார்த்தை ஆகிய நமது கலாச்சாரத்தின் ஞானத்தை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதே சமயம் அவர்கள் பணியாற்றும் ஒவ்வொரு கலாச்சாரத்திலிருந்தும் கருத்துகள், மக்கள் மற்றும் கண்ணோட்டங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார். அவர்களைச் சுற்றியுள்ள உலகமானது புவிஅரசியல், டிஜிட்டல் புரட்சி, பருவநிலை மாறுதல் மற்றும் பலதரப்புவாதம் ஆகியவற்றில் விரைவான மாற்றங்கள் நிகழ்கிறது என குறிப்பிட்ட அவர் இளம் அதிகாரிகளாக இருக்கும் அவர்களின் விரைந்து செயலாற்றும் தன்மையும், தகவமைப்புத் திறனும் அவர்களின் வெற்றிக்கு இன்றியமையாதவை என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
உலகளாவிய வடக்கு மற்றும் தெற்கு நாடுகளுக்கிடையிலான ஏற்றத்தாழ்வால் விளையும் பிரச்சினைகள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் அல்லது பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் என உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதற்கான தீர்வுக்கு இந்தியா இன்றியமையாத அங்கமாக இன்று விளங்குகின்றது. இந்தியா உலகின் மிகப்பெரும் குடியரசு நாடாக மட்டுமல்ல தொடர்ச்சியாக பொருளாதார சக்தியில் நிலையான வளர்ச்சி அடைந்துவரும் நாடாகவும் விளங்குகின்றது. நமது குரலுக்கு மதிப்பு இருக்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். தூதரக அதிகாரிகளாக, ஐ.எஃப்.எஸ். அதிகாரிகளின் சொற்கள், செயல்கள் மற்றும் மதிப்புகளைத்தான் உலகம் இந்தியாவின் முகமாக முதலில் பார்க்கின்றது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
இன்றைய காலகட்டத்தில் கலாச்சார அயலக உறவுகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதைக் குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார். மனம் மற்றும் ஆன்மாவால் ஏற்படும் பிணைப்புதான் எப்போதும் வலுவானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பாரதத்தின் யோகா, ஆயுர்வேதம், சிறுதானியங்கள், அல்லது இசை, மொழியியல், ஆன்மீகப் பாரம்பரியம் என எதுவானாலும் கூடுதலான படைப்பாக்கமும் லட்சியப்பூர்வமான முயற்சிகளும் இந்த பரந்துபட்ட கலாச்சாரத்தை வெளிநாடுகளில் எடுத்துக்காட்டவும் மேம்படுத்தவும் செய்யும் என்று குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு தெரிவித்தார்.
நமது உள்நாட்டுத் தேவைகளுக்கும் 2047-க்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான குறிக்கோள்களுடனும் ஒத்திசைந்ததாக அயலக உறவு மேம்பாட்டு முயற்சிகள் இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பவர்கள் என்று மட்டுமல்லாமல் அதன் ஆன்மாவின் தூதுவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ள வேண்டும் என்று இளம் அதிகாரிகளிடம் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
***
(Release ID: 2157834)
AD/TS/DL
(Release ID: 2158106)