விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விவசாயிகளுக்குப் பயிர் காப்பீட்டு நிதி வழங்கும் நிகழ்ச்சி ராஜஸ்தானில் நாளை நடைபெறுகிறது - மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்கிறார்

Posted On: 10 AUG 2025 3:35PM by PIB Chennai

மத்திய அரசு விவசாயிகளுக்கு உகந்த கொள்கைகளையும் தொழில்நுட்ப அடிப்படையிலான வெளிப்படையான சேவை முறைகளையும் வலுப்படுத்தி வருகிறது. இந்த வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் நாளை (ஆகஸ்ட் 11, 2025) பயிர் காப்பீட்டு கோரிக்கைப் பலன்களை விவசாயிகளுக்கு வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தலைமை வகிக்கிறார், ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு பகீரத் சவுத்ரி, ராஜஸ்தான் வேளாண் அமைச்சர் டாக்டர் கிரோடி லால் மீனா, உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், விவசாயத் துறையினர், மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 11-ம் தேதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஜுன்ஜுனு விமான நிலையத்தில் நடைபெறும். இதில் ஜுன்ஜுனு, சிகார், ஜெய்ப்பூர், கோட்புட்லி-பெஹ்ரர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் அதிக அளவில் பங்கேற்கவுள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் காணொலி மூலம் நிகழ்ச்சியில் இணைவார்கள்.

 நாட்டிலேயே முதல் முறையாக, பயிர் காப்பீட்டுக் கோரிக்கை தொகையில் 3,200 கோடிக்கு மேல் ஆகஸ்ட் 11-ம் தேதி 30 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடி பணப் பரிமாற்றம் மூலம் டிஜிட்டல் முறையில் விடுவிக்கப்படுகிறது. இதில், ராஜஸ்தானில் உள்ள 7 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 1,121 கோடி வழங்கப்படும்.

 மத்தியப் பிரதேச விவசாயிகள் 1,156 கோடியையும், சத்தீஸ்கர் விவசாயிகள் 150 கோடியையும், பிற மாநிலங்களின் விவசாயிகள் 773 கோடியையும் பயிர்க் காப்பீட்டுத் தொகையாகப் பெற உள்ளதாக திரு சிவராஜ் சிங் தெரிவித்ததுள்ளார். தொழில்நுட்பமும் வெளிப்படைத்தன்மையும் இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட, இந்தத் திட்டம் 78 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் விண்ணப்பங்களை உள்ளடக்கி, 1.83 லட்சம் கோடி மதிப்புள்ள காப்பீட்டுக் கோரிக்கைப் பலன்களை வழங்கியுள்ளது எனவும் விவசாயிகள் பிரீமியமாக 35,864 கோடியை மட்டுமே செலுத்தியுள்ளனர் என்றும் திரு சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார். பிரீமியத்தை விட 5 மடங்குக்கும் அதிகமாக காப்பீட்டுப் பலன்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், விவசாயிகளின் கடின உழைப்புக்கு அதிகாரம் அளித்து, தற்சார்பு பாரதத்தை உருவாக்குவதற்கான உறுதியை வலுப்படுத்துகிறது என்று திரு சிவராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார்.

*****

(Realease ID: 2154849)

AD/SM/PLM/SG

 

 


(Release ID: 2154909)