ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நவீன ரயில் பெட்டிகளின் உலகளாவிய ஏற்றுமதியாளராக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்

Posted On: 27 JUL 2025 7:30PM by PIB Chennai

குஜராத்தின் வதோதராவின் சவ்லி பகுதியில் உள்ள அல்ஸ்டோம் நிறுவன ஆலையை மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். இது இந்தியாவில் ரயில்வே துறையில் முக்கிய உபகரணங்கள், ரயில் பெட்டி உற்பத்தி மையமாகும். சவ்லி பகுதியில் உள்ள ஆலையில் அல்ஸ்டோம் நிறுவன செயல்பாடுகளை அவர் ஆய்வு செய்தார்.  ஒவ்வொரு தயாரிப்புக்கும் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளுடன் வடிவமைப்புகளை உருவாக்கும் ஆல்ஸ்டோம் நிறுவனத்தின் நடைமுறையை அவர் பாராட்டினார்.

மத்திய அரசின் 'இந்தியாவில் தயாரிப்போம் உலகிற்காக தயாரிப்போம்' என்ற முன்முயற்சிக்கு ஏற்ப வலுவான அர்ப்பணிப்புடன், சவ்லியில் உள்ள இந்த ஆலை அதிநவீன முறையில் உற்பத்தியை மேற்கொள்வதாக அவர் கூறினார்.  2016 முதல், இந்தியா பல்வேறு சர்வதேச திட்டங்களுக்காக 1,002 ரயில் பெட்டிகளை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது என அவர் குறிப்பிட்டார். இது நவீன ரயில் அமைப்பு விநியோகத்தின் நம்பகமான நாடு இந்தியா என்ற நிலையை வலுப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார். குயின்ஸ்லாந்து மெட்ரோ திட்டத்திற்காக 450 ரயில் பெட்டிகள் சவ்லியில் தயாரிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

பல நாடுகளுக்கு ரயில்வே பாகங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கி வருவதாக அவர் எடுத்துரைத்தார். இந்திய பொறியாளர்களும் தொழிலாளர்களும் இப்போது சர்வதேச தரங்களில் நிபுணத்துவம் பெற்று வருவதாகவும், இது இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி என்றும் அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணங் கூறினார்.

*****

(Release ID: 2149114)

AD/PLM/RJ


(Release ID: 2149133)