தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியாவின் படைப்பாற்றல்மிக்க தலைமைத்துவத்தை வேவ்ஸ் 2025 வெளிப்படுத்துகிறது; 100+ நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு; ரூ.8,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
प्रविष्टि तिथि:
25 JUL 2025 6:11PM by PIB Chennai
இந்தியாவை உலகளாவிய உள்ளடக்க உருவாக்க மையமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப உலக ஒலி ஒளி & பொழுதுபோக்கு உச்சிமாநாட்டிற்கு (வேவ்ஸ்) 2025 ஏற்பாடு செய்யப்பட்டது. இது படைப்பாளிகள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், ஊடக தளங்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னோடிகளை ஒரே தளத்தில் ஒன்றிணைத்தது.
புதிய தொழில்நுட்பங்கள், முதலீட்டாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் வாங்குபவர்களுடன் இணைவதற்கு இந்திய படைப்பாளிகளுக்கு வேவ்ஸ், ஒரு தளத்தை வழங்கியது. இதில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் 50 அமர்வுகள், 35 மாஸ்டர் வகுப்புகள் மற்றும் உலகளாவிய தொழில்துறை தலைவர்கள் பங்கேற்ற 55 பிரேக்அவுட் அமர்வுகள் உட்பட 140க்கும் மேற்பட்ட அமர்வுகள் இடம்பெற்றன.
வேவ்ஸ் 2025 இன் முக்கிய அம்சங்கள்:
● உலகளாவிய ஊடக உரையாடல்: அரசு மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்கள், ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கின் வளர்ந்து வரும் பங்கைப் பற்றி விவாதித்தனர். அமைதி மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான ஊடகங்களை ஊக்குவிப்பதற்காக வேவ்ஸ் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
● வேவ் எக்ஸ்: இது, ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் புத்தொழில் நிறுவனங்கள் தலைமையிலான புதுமைக்கான தளமாகும். இதில் இரண்டு நாள் நேரடி விளம்பர நிகழ்வும் அடங்கும்.
● வேவ்ஸ் பஜார்: வரிவடிவுகள், இசை, காமிக்ஸ் மற்றும் ஒலி, ஒளி உரிமைகளுக்கான சந்தையாகச் செயல்படுவதன் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தகம் சார்ந்த கூட்டங்களை நடத்தியது, புதிய வருவாய் வழிகளை உருவாக்கியது.
● பொருளாதார மற்றும் உத்திசார் முடிவுகள்: திரைப்பட நகரங்களில் முதலீடுகள், படைப்பு தொழில்நுட்பக் கல்வி மற்றும் நேரடி பொழுதுபோக்கு உள்கட்டமைப்புக்காக ரூ.8 ஆயிரம் கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
● இந்தியாவில் உருவாக்குக சவால் (CIC): அனிமேஷன், கேமிங், ஏஆர்/விஆர் மற்றும் இசை போன்ற 34 படைப்புப் பிரிவுகளில் நாடு தழுவிய அடுத்த தலைமுறை படைப்பாற்றல் திறமைகளைத் தேர்ந்தெடுத்தல். இது உலகம் முழுவதிலுமிருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட படைப்பாளர்களிடமிருந்து பதிவுகளை ஈர்த்தது.
● கிரியேட்டோஸ்பியர்: இந்தியாவின் அடுத்த தலைமுறை படைப்பாற்றல் திறமையை முன்னிலைப்படுத்த மாஸ்டர் வகுப்புகள், போட்டிகள் மற்றும் நேரடி காட்சிப்படுத்தல்கள் நடத்தப்பட்டன.
● பாரத் பெவிலியன்: உலகளவில் இந்தியாவின் மென்மையான சக்தி மற்றும் கலாச்சாரத் தலைமையை முன்னிறுத்துவதன் மூலம் இந்தியாவின் கதை சொல்லும் மரபில் ஒரு ஆழமான அனுபவத்தை இது வழங்கியது.
● 8வது தேசிய சமூக வானொலி மாநாடு: சமூக ஒலிபரப்பில் புதுமை மற்றும் உள்ளடக்கிய தன்மைக்காக 12 நிலையங்கள் தேசிய சமூக வானொலி விருதுகளைப் பெற்றன.
இந்தத் தகவலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இன்று மக்களவையில் பகிர்ந்து கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2148496
***
(Release ID: 2148496)
AD/RB/ DL
(रिलीज़ आईडी: 2148627)
आगंतुक पटल : 19