பிரதமர் அலுவலகம்
மேற்கு வங்கத்தின் துர்காபூரில் சுமார் ₹5,400 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றைத் தொடங்கி வைத்தார்.
இன்று முழு உலகமும் வளர்ந்த பாரதத்திற்கான நமது உறுதியைப் பற்றி விவாதித்து வருகிறது, குறிப்பாக உள்கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கிறது, இதன் மீது வளர்ந்த இந்தியா கட்டமைக்கப்படுகிறது: பிரதமர்
ஒரு நாடு, ஒரு எரிவாயு தொகுப்பு என்ற தொலைநோக்குப் பார்வையைக் கருத்தில் கொண்டு நாங்கள் பணியாற்றியுள்ளோம், பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தை உருவாக்கினோம்: பிரதமர்
2047க்குள் இந்தியாவை நாம் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும், வளர்ச்சி மூலம் அதிகாரமளித்தல், வேலைவாய்ப்பு மூலம் சுயசார்பு மற்றும் பதிலளிப்பதன் மூலம் நல்லாட்சி என்பது தான் நமது பாதை: பிரதமர்
Posted On:
18 JUL 2025 5:10PM by PIB Chennai
மேற்கு வங்கத்தின் துர்காபூரில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி சுமார் 5,400 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், எஃகு நகரம் என்று அழைக்கப்படும் துர்காபூர், இந்தியாவின் தொழிலாளர் சக்தியின் முக்கிய மையமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் பாராட்டினார், மேலும் இன்று அந்தப் பங்கை மேலும் வலுப்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று கூறினார். இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தும், எரிவாயு அடிப்படையிலான போக்குவரத்து மற்றும் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை அதிகரிக்கும் மற்றும் எஃகு நகரமாக துர்காபூரின் அடையாளத்தை வலுப்படுத்தும் என்று திரு. மோடி குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் "இந்தியாவில் தயாரித்தல், உலகத்திற்காக தயாரித்தல்" என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகின்றன என்றும், மேற்கு வங்கத்தை முன்னேற்ற உதவும் என்றும் பிரதமர் கூறினார். பிராந்திய இளைஞர்களுக்கு ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அவர் உறுதிப்படுத்தினார். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக அனைவருக்கும் அவர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
உலக நாடுகளின் இன்றைய பேச்சு, இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற உறுதியைச் சுற்றியே உள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியாவில் நடைபெற்று வரும் மாற்றங்களுக்கு இதுவே காரணம் என்றும், இவை வளர்ந்த பாரதத்திற்கு அடித்தளம் அமைக்கின்றன என்றும் அவர் கூறினார். இந்த மாற்றங்களின் முக்கிய அம்சம் சமூக, இயல் மற்றும் டிஜிட்டல் சார்ந்த உள்கட்டமைப்பு என்பதை வலியுறுத்திய திரு மோடி, முக்கிய சாதனைகளை எடுத்துரைத்தார். ஏழைகளுக்கு 4 கோடிக்கும் மேற்பட்ட உறுதியான வீடுகள், கோடிக்கணக்கான கழிப்பறைகள், 12 கோடிக்கும் மேற்பட்ட குழாய் நீர் இணைப்புகள், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் புதிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், புதிய ரயில் பாதைகள், சிறு நகரங்களில் விமான நிலையங்கள் மற்றும் ஒவ்வொரு கிராமத்தையும் வீட்டையும் சென்றடையும் பரவலான இணைய அணுகல் உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த நவீன உள்கட்டமைப்பு, மேற்கு வங்கம் உட்பட ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயனளிக்கிறது என்பதை அவர் உறுதிப்படுத்தினார். மேற்கு வங்கத்தில் ரயில் இணைப்பில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தையும் பிரதமர் அடிகோடிட்டுக் காட்டினார், வந்தே பாரத் ரயில்களை அதிக அளவில் இயக்கும் முன்னணி மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்றாகும் என்று கூறினார். கொல்கத்தா மெட்ரோவின் விரைவான விரிவாக்கம் மற்றும் புதிய ரயில் பாதைகள் மற்றும் மின்மயமாக்கல் ஆகியவற்றில் நடந்து வரும் பணிகளை அவர் எடுத்துரைத்தார். ஏராளமான ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும், ஏராளமான ரயில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் திரு மோடி மேலும் குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தில் இன்று மேலும் இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார். இந்த முயற்சிகள் அனைத்தும் மாநில மக்களின் வாழ்க்கையை கணிசமாக எளிதாக்கும் என்றும் கூறினார்.
இந்தப் பிராந்தியத்தின் விமான நிலையம் உடான் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்த திரு மோடி, கடந்த ஆண்டில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த வசதியின் மூலம் பயணம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். இத்தகைய உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்குகிறது என்று அவர் வலியுறுத்தினார். இந்தத் திட்டங்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் உற்பத்தி கூட கணிசமான வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 10–11 ஆண்டுகளில், இந்தியா எரிவாயு இணைப்பில் முன் எப்போதும் இல்லாத முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், இந்த தசாப்தத்தில் நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு எல்பிஜி சென்றடைந்துள்ளது, இது உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்று கூறினார். "ஒரு நாடு, ஒரு எரிவாயு தொகுப்பு" என்ற தொலைநோக்குப் பார்வையில் அரசின் பணி மற்றும் பிரதமரின் உர்ஜா கங்கா திட்டம் தொடங்கப்பட்டதை அவர் வலியுறுத்தினார். இந்த முயற்சியின் கீழ், மேற்கு வங்கம் உட்பட ஆறு கிழக்கு மாநிலங்களில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்படுகின்றன. இந்த மாநிலங்களில் உள்ள தொழில்கள் மற்றும் சமையலறைகளுக்கு மலிவு விலையில் குழாய் மூலம் எரிவாயுவை வழங்குவதே இலக்கு என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், எரிவாயு கிடைப்பது வாகனங்கள் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கவும், தொழிற்சாலைகள் எரிவாயு அடிப்படையிலான தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளவும் உதவும் என்று குறிப்பிட்டார். துர்காபூரின் தொழில்துறை பகுதி இப்போது தேசிய எரிவாயு தொகுப்பின் ஒரு பகுதியாக மாறிவிட்டதில் அவர் திருப்தி தெரிவித்தார். இந்தத் திட்டம் இந்தப் பகுதியில் உள்ள தொழில்களுக்குப் பயனளிக்கும் என்றும், மேற்கு வங்கத்தில் உள்ள கிட்டத்தட்ட 30 லட்சம் வீடுகளுக்கு மலிவு விலையில் குழாய் எரிவாயுவை வழங்கும் என்றும் திரு மோடி கூறினார். இது மில்லியன் கணக்கான குடும்பங்களின், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்கும் என்றும், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
துர்காபூர் மற்றும் ரகுநாத்பூரில் உள்ள முக்கிய எஃகு மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் புதிய தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்தார், இந்த வசதிகளில் சுமார் ₹1,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த ஆலைகள் இப்போது மிகவும் திறமையானவை மற்றும் உலகளவில் போட்டியிடும் திறன் கொண்டவை என்பதை அவர் வலியுறுத்தினார். இந்த திட்டங்களை வெற்றிகரமாக முடித்ததற்காக மேற்கு வங்க மக்களுக்கு அவர் சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தியாவின் தொழிற்சாலைகளாக இருந்தாலும் சரி, அதன் துறைகளாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு முயற்சியும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது என்ற ஒரே உறுதியால் இயக்கப்படுகிறது என்று பிரதமர் கூறினார். வளர்ச்சி மூலம் அதிகாரமளித்தல், வேலைவாய்ப்பு மூலம் தன்னிறைவு மற்றும் பதிலளிப்பதன் மூலம் நல்லாட்சி என்ற அரசின் முன்னோக்கி செல்லும் பாதையை அவர் ஆடிகோடிட்டுக் காட்டினார். இந்த மதிப்புகளை நிலைநிறுத்துவதன் மூலம், மேற்கு வங்கம், இந்தியாவின் வளர்ச்சி பயணத்தின் வலுவான இயந்திரமாக மாற்றப்படும் என்று உறுதி அளித்து திரு மோடி தனது உரையை நிறைவு செய்தார்.
மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி.வி. ஆனந்த போஸ், மத்திய அமைச்சர்கள் திரு ஹர்திப் சிங் பூரி, திரு சாந்தனு தாக்கூர், டாக்டர் சுகந்தா மஜும்தார் உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பின்னணி:
மேற்கு வங்கத்தில், பிரதமர், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், சாலை மற்றும் ரயில் போன்ற பல்வேறு துறைகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கியும் வைத்தார்.
இந்தப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், மேற்கு வங்க மாநிலம் பன்குரா மற்றும் புருலியா மாவட்ங்களில் ரூ.1,950 கோடி மதிப்பிலான பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் (பிபிசிஎல்) நகரப்புற எரிவாயு விநியோக (சிஜிடி) திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் மூலம் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு இணைப்புகளை வழங்குவதற்கு உதவுவதுடன், சில்லறை விற்பனை நிலையங்களில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகம் மற்றும் அப்பகுதிகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வகை செய்கிறது.
துர்காபூர்-ஹால்டியா இடையே அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய் பாதையின் (132 கி.மீ) ஒரு பகுதியையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இது ஜகதீஷ்பூர் - ஹால்டியா, பொகாரோ-தாம்ரா குழாய் பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ், பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1,190 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான துர்காபூர்-கொல்கத்தா பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா பர்த்மான், ஹூக்ளி, நாடியா மாவட்டங்கள் வழியாக இந்த குழாய் அமைக்கப்படவுள்ளது. இந்த குழாய் பாதை அமைக்கும் பணிகளை செயல்படுத்தும் போது ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புக்களை வழங்கும். மேலும் தற்போது இந்த பிராந்தியத்தில் உள்ள லட்சக்கணக்கான வீடுகளுக்கு சீரான இயற்கை எரிவாயு விநியோகத்தையும் எளிதாக்கும்.
அனைவருக்கும் தூய்மையான காற்று, சுகாதாரப் பாதுகாப்பு என்ற தனது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பிரதமர் ரூ.1,457 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான மாசு கட்டுப்பாட்டு அமைப்பு -ஃப்ளூ எரிவாயுவில் உள்ள கந்தகத்தை அகற்றும் பணிகள் ஆகியவற்றை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இது தூய்மை எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிப்பதுடன், அப்பகுதியில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவிடும்.
அம்மாநிலத்தில் ரயில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், புருலியாவில் ரூ.390 கோடிக்கும் அதிக மதிப்பிலான புருலியா - கோட்ஷிலா ரயில் பாதையை (36 கி.மீ) இரட்டிப்பாக்கும் திட்டத்தையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இது ஜாம்ஷெட்பூர், பொகாரோ, தன்பாத் ஆகிய பகுதிகளிலிருந்து ராஞ்சி, மற்றும் கொல்கத்தா நகரங்களுடன் தொழிற்சாலைகளுக்கு இடையேயான ரயில் இணைப்பை மேம்படுத்துவதுடன், சரக்கு ரயில்களின் செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும், பயண நேரத்தை வெகுவாகக் குறைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சரக்குப் போக்குவரத்து சேவையையும் மேம்படுத்தும்.
சேது பாரதம் திட்டத்தின் கீழ் பஸ்சிம் பர்தாமானில் உள்ள டாப்சி மற்றும் பாண்டபேஷ்வரில் அமைக்கப்பட்டுள்ள ரூ.380 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான இரண்டு சாலை மேம்பாலங்களை (ஆர்ஓபி) பிரதமர் திறந்துவைத்தார். இது போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதுடன், ரயில்வே லெவல் கிராசிங்கில் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவிடும்.
***
(Release ID: 2145811)
AD/RB/DL
(Release ID: 2145952)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Malayalam