பிரதமர் அலுவலகம்
இந்தியா – பிரேசில் – உயரிய நோக்கங்களைக் கொண்ட இரண்டு பெரிய நாடுகளின் கூட்டறிக்கை
Posted On:
09 JUL 2025 5:55AM by PIB Chennai
பிரேசில் குடியரசின் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜூலை 8 அன்று, பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். இதையடுத்து வரவிருக்கும் தசாப்தங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்ட உத்திசார்ந்த திட்டத்தை வகுக்க இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.
1. பாதுகாப்பு: கூட்டு ராணுவப் பயிற்சி, உயர்நிலை பாதுகாப்பு தூதுக் குழுக்களின் பரிமாற்றம் உட்பட இந்தியா – பிரேசில் இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் வரவேற்றுள்ளனர். ராணுவம் சார்ந்த பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த, வகைப்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர பாதுகாப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து வரும் புவிசார் அரசியல் சூழலில் பலதரப்பு ஈடுபாட்டை வலுப்படுத்துவதன் அவசியத்தை இருதலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் இடையேயான தொடர்பை எடுத்துரைத்த இவர்கள் அமைதி நீடிப்பதை உறுதி செய்ய அமைதி கட்டமைப்புக்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது முக்கியம் என்றும் கூறியுள்ளனர்.
2025-ல் ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது ஆண்டு கொண்டாடப்படும் நிலையில், இத்தகைய அமைப்புகளில் விரிவான சீர்திருத்தம் அவசியம் என்றும், முடிவு எடுக்கும் அமைப்புகளில் வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல், ரஷ்யா – உக்ரைன் மோதல் போன்ற சூழ்நிலைகளால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து கவலை தெரிவித்த தலைவர்கள், இந்த மோதலுக்கு அமைதியான, நீடித்த தீர்வுக்கு இருதரப்பினரும் முயற்சிகளை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
2. உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு: நீடிக்கவல்ல வேளாண்மை மூலம் உற்பத்தி திறனை அதிகரித்தல், விவசாயிகளுக்கு கட்டுப்படியான வருவாய் ஆதரவு, எளிதான சுகாதார அணுகல், தரமான கல்வி ஆகியவற்றின் மூலம் கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்து உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு உறுதியான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 2030-க்குள் உலகம் முழுவதும் ஏழ்மையை ஒழிப்பது என்ற இலக்கை நினைவு கூர்ந்துள்ள அவர்கள், வறுமை மற்றும் ஏழ்மைக்கு எதிரான உலகளாவிய கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
3. எரிசக்தி மாற்றம் மற்றும் பருவநிலை மாற்றம்: உயிரி எரிசக்தி, உயிரி எரிபொருள், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியில் தங்களின் புதுப்பிக்கப்பட்ட ஈடுபாடு ஆகியவற்றில் இந்தியா – பிரேசில் இடையே நிலவும் முதன்மையான ஒத்துழைப்புக்கு இரு தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர். தூய்மையான, நீடிக்கத்தக்க, செலவு குறைந்த எரிசக்தி உற்பத்தியை ஊக்கப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய தலைவர்கள் குறைந்த அளவில் கார்பன் உமிழ்வைக் கொண்ட எரிசக்தி வளங்களை பயன்படுத்துவது பற்றி எடுத்துரைத்தனர். நவம்பர் 2025-ல் பிலமில் நடைபெறவுள்ள 30-வது சிஓபி 30 மாநாட்டிற்கு பிரேசில் தலைமை வகிப்பதற்கு இந்தியா தனது ஆதரவை உறுதி செய்துள்ளது. சமச்சீரான, ஒருங்கிணைந்த முறையில் நீடிக்கத்தக்க வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலை முழுமையாக அமல்படுத்த இரு தலைவர்களும் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தினர். சுற்றுச்சூழல், சமூகம், பொருளாதாரம் என்ற முப்பரிமாணங்களில் இத்தகைய வளர்ச்சியை மேம்படுத்த உயிரி பொருளாதாரம், சுழற்சி பொருளாதாரம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
4. டிஜிட்டல் மாற்றம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் : டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உட்பட டிஜிட்டல் திட்டத்தை அங்கீகரித்துள்ள இந்த தலைவர்கள் இது தங்கள் சமூகங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், டிஜிட்டல் மாற்றத்திற்கும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உருவாகி வரும் கூட்டு பங்களிப்புகளுக்கு பாடுபட இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த ஒத்துழைப்பை விரிவுபடுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதை வரவேற்றுள்ளனர். 2026-ல் அடுத்த செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டிற்கு தலைமை வகிக்கும் இந்தியாவுக்கு பிரேசில் அதிபர் லூலா வாழ்த்து தெரிவித்துள்ளார். வலுவான, பயனளிக்கும் இருதரப்பு கூட்டாண்மையை உறுதி செய்ய ஆராய்ச்சியாளர்கள், புதிய கண்டுபிடிப்பு மையங்கள், புத்தொழில்கள் ஆகியவற்றுக்கு இடையே நேரடி தொடர்புகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் சுட்டிக்காட்டினர்.
5. முக்கியமான துறைகளில் தொழில் கூட்டாண்மைகள்: அதிகரித்து வரும் தற்காப்பு தன்மையால் உலளாவிய சவால்களும் அதிகரித்து வரும் சூழலில் இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்த இருதலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இருநாடுகளுக்கு இடையே வர்த்தக மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புகளை அதிகரிப்பதற்கான வழிகளைக் காண இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனடிப்படையில் மருந்து உற்பத்தி, பாதுகாப்பு சாதனங்கள், சுரங்கம் மற்றும் கனிமங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய முக்கியமான தொழில் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருதரப்பு ஒத்துழைப்புக்கான இதர துறைகள் – கலாச்சாரம், சுகாதாரம், விளையாட்டு, பாரம்பரிய அறிவு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்துள்ளனர். பாதுகாப்புத்துறை பயிற்சி உட்பட திறன் கட்டமைப்பில் ஒத்துழைப்பதை இரு தரப்பினரும் ஊக்கப்படுத்தியுள்ளனர். புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச கல்விக்கான ஆசியா –பசிபிக் சங்கத்தின் வருடாந்தர மாநாடு 2025-ல் பிரேசிலில் பங்கேற்புக்காக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2143277
*****
(Release ID: 2143277)
VL/TS/SMB/RJ/DL
(Release ID: 2143483)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam