பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு. நரேந்திர மோடி டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் உரையாற்றினார்
டிரினிடாட் - டொபாகோ நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் பயணம் துணிச்சலானது: பிரதமர்
500 ஆண்டுகளுக்குப் பிறகு ராம் லல்லா அயோத்திக்கு திரும்பியதை நீங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்: பிரதமர்
இந்திய வம்சாவளியினர் நமது நாட்டின் பெருமை: பிரதமர்
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்தில், உலகெங்கிலும் உள்ள கிர்மிதியா சமூகத்தை கௌரவிப்பதற்கும் அவர்களுடன் இணைவதற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தேன்: பிரதமர்
விண்வெளியில் இந்தியாவின் வெற்றி உலக அளவிலான உணர்வில் உள்ளது: பிரதமர்
Posted On:
04 JUL 2025 6:46AM by PIB Chennai
டிரினிடாட் - டொபாகோ நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், அந்நாட்டுக் குடியரசின் பிரதமர் திருமதி கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசர், அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியை இந்திய வம்சாவளியினர் அன்புடன் வரவேற்றதுடன், இந்தோ-டிரினிடாடியன் பாரம்பரிய முறைப்படி வண்ணமயமான வரவேற்பும் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை வரவேற்ற அந்நாட்டுப் பிரதமர் திருமதி கம்லா பெர்சாத் பிஸ்ஸேசர், டிரினிடாட் & டொபாகோ நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதான "தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் & டொபாகோ" என்ற விருதை அவருக்கு வழங்குவதாக அறிவித்தார். இந்த விருதை வழங்கி கௌரவித்ததற்காக பிரதமர் அந்நாட்டுப் பிரதமருக்கும், மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான எழுச்சிமிக்க மற்றும் சிறப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் திருமதி கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசரின் அன்பிற்கும், பங்களிப்பிற்கும் நன்றி தெரிவித்தார். இந்தியாவிலிருந்து முதன்முதலில் இங்கு வந்து குடியேறிய 180 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் தருணத்தில், டிரினிடாட் & டொபாகோ நாட்டில் தாம் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் அதனை மேலும் சிறப்பாக்கியுள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்திய வம்சாவளியினரின் நெகிழ்வுத்தன்மை, கலாச்சார வளமை மற்றும் டிரினிடாட் & டொபாகோ நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர்கள் அளித்த மகத்தான பங்களிப்பிற்காக பிரதமர் பாராட்டு தெரிவித்தார். டிரினிடாட் - டொபாகோ நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினர் தங்களது நாட்டின் கலாச்சார வேர்கள் மற்றும் மரபுகளைத் தொடர்ந்து பாதுகாத்து வளர்த்து வருவதை பிரதமர் பாராட்டினார். இந்த கலாச்சாரப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த, டிரினிடாட் - டொபாகோ நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 6 - வது தலைமுறை மக்களுக்கு தற்போது வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அட்டைகள் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இந்த சிறப்பு அறிவிப்பை அனைவரும் வரவேற்றனர். கிர்மிடியா பாரம்பரியத்தை வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளை இந்தியா ஆதரிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
உள்கட்டமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், உற்பத்தி, பசுமைச் சாலைகள், விண்வெளி, புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் போன்ற துறைகளில் இந்தியாவின் விரைவான வளர்ச்சி மற்றும் மாற்றத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார். கடந்த பத்தாண்டுகளில், 250 மில்லியனிற்கும் அதிகமான மக்கள் தீவிர வறுமை நிலையிலிருந்து மீட்கப்பட்டதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
இந்தியாவின் முன்னேற்றத்துக்கான வளர்ச்சித் திட்டங்களின் பல்வேறு அம்சங்களை எடுத்துரைத்த அவர், உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக விரைவில் இந்தியா உருவெடுக்கும் என்று குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், செமிகண்டக்டர் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் தொடர்பான தேசிய பணிகள் நாட்டின் முன்னேற்றத்திற்கான புதிய எந்திரங்களாக மாறி வருகின்றன என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இந்தியாவில் யுபிஐ அடிப்படையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வெற்றிகரமான செயல்பாடுகளை சுட்டிக்காட்டிய அவர், டிரினிடாட் - டொபாகோ நாட்டில் இதனை ஏற்றுக்கொள்வது சம அளவிலான உத்வேகத்தை அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கோவிட் தொற்றுநோய் பரவலின்போது தெளிவாக நிரூபிக்கப்பட்ட “உலகம் ஒரே குடும்பம்” என்ற இந்தியாவின் பழமையான தத்துவமான “வசுதைவ குடும்பகம்” குறித்து எடுத்துரைத்த அவர், டிரினிடாட் - டொபாகோ நாட்டின் முன்னேற்றம் மற்றும் நாட்டைக் கட்டமைக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.
4000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற இந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி கலாச்சார ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்த கலைஞர்கள் நிகழ்த்திய கண்கவர் கலாச்சார நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
******
(Release ID: 2141990)
AD/TS/SV/KPG/SG
(Release ID: 2142146)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam