கலாசாரத்துறை அமைச்சகம்
நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசியலமைப்பு படுகொலை தினம் கடைப்பிடிக்கப்பட்டது
प्रविष्टि तिथि:
27 JUN 2025 3:19PM by PIB Chennai
நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சம்பந்தப்பட்ட முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் தலைமையில் 2025 ஜூன் 25 அன்று அரசியலமைப்பு படுகொலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் பல வகையான நோக்கங்களைக் கொண்டிருந்தன:
• அவசர நிலையை எதிர்த்து ஜனநாயகத்தைப் பாதுகாத்த தனிநபர்களை கவுரவித்தல்.
• கண்காட்சிகள், பொதுமக்களை விவாதங்களில் ஈடுபடுத்துதல், திரைப்படங்கள் திரையிடல்.
• ஜனநாயக நிறுவனங்களின் பலவீனம் மற்றும் அவற்றை வலுப்படுத்துவது குறித்து தலைமுறைகளுக்கு இடையே உரையாடலுக்கு வகை செய்வது.
இந்தியாவில் ஜனநாயகம் என்பது அரசியல் நடைமுறையை விடவும் மேலானது; இது இந்தியாவில் வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ஆழப்பதிந்துள்ள நாகரீக நெறிமுறையாகும். அரசியலமைப்பு படுகொலை தினம் என்பது கடந்த கால அநீதியை நினைவுபடுத்தி கடைப்பிடிப்பது மட்டுமல்ல, ஜனநாயக கோட்பாடுகள், அமைப்பு ரீதியான ஒருங்கிணைப்பு, அரசியல் சட்ட மாண்புகள் ஆகியவற்றின் மீது நமக்கான உறுதிப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதாகும். நமது ஜனநாயகத்தின் அடித்தளங்களை பாதுகாப்பதற்கான நமது தீர்மானத்தை ஒரு தேசம் என்ற முறையில் பிரதிபலிக்கவும், நினைவுபடுத்தவும், புதுப்பிக்கவும் நாம் ஒன்றிணைவோம்.
“ஜனநாயகம் நீடூழி வாழ்க” என்ற தலைப்பிலான கண்காட்சியை மத்தியக் கலாச்சார அமைச்சகம் ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலுமாக 50 இடங்களில் அமைத்துள்ளது. வரும் வாரங்களில் இதனை பொதுமக்கள் பார்வையிடலாம்.
தலைநகர் தில்லியின் கன்னாட் பிலேஸ், மத்தியப் பூங்காவில் “அரசியல் சட்ட படுகொலை தினம்” குறித்த கண்காட்சியை தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தாவும், மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் கட்டாரும் தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் 1975-ம் ஆண்டின் அவசர நிலை பிரகடனத்தை நினைவுகூரும் “அரசியல் சட்ட படுகொலை தினம்” கடைப்பிடிக்கப்படுகிறது. “ஜனநாயகம் நீடூழி வாழ்க” என்ற குறும்படம் திரையிடப்பட்டது. இதை தொடர்ந்து கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு பேராசிரியை டாக்டர் உஷா நடேசன் தலைமை தாங்கினார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில், இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயமான அவசரநிலை பிரகடனத்தின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், “அரசியல் சட்ட படுகொலை தினம்” கடைப்பிடிக்கப்பட்ட நாளில் புகைப்படக் கண்காட்சியை மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ, மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர், குஜராத் மாநிலம் காந்தி நகர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், ஒடிசா மாநிலம் புவனேஸ்வர், அசாம் மாநிலம் குவஹாத்தி, சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர், ஹரியானா மாநிலம் கர்னால், உத்தராகண்ட் மாநிலம் டேராடூன், கோவா மாநிலம் மட்கான், அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங், பீகார் மாநிலம் பாட்னா ஆகிய இடங்களில் கண்காட்சிகள் தொடங்கப்பட்டன. பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், மிசோரம், திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலங்களிலும், ஜம்மு-காஷ்மீர், சண்டிகர் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் கண்காட்சிகள் நடைபெற்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2140154
***
AD/TS/SMB/RR/KR/DL
(रिलीज़ आईडी: 2140233)
आगंतुक पटल : 35