ஆயுஷ்
azadi ka amrit mahotsav

சர்வதேச யோகா தினம் ஒரு சாதனை மட்டுமல்ல - இது ஒரு உலகளாவிய நல்வாழ்வு இயக்கம்: மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்

Posted On: 12 JUN 2025 5:09PM by PIB Chennai

11-வது சர்வதேச யோகா தின விழாவிற்கான அறிமுக நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் இன்று நடைபெற்றது. சர்வதேச யோகா தினத்தையொட்டி முக்கிய நிகழ்ச்சி ஜூன் 21-ம் தேதி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. இந்த பிரமாண்டமான கொண்டாட்டம் குறித்து ஆயுஷ்  இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கோடேச்சா ஆகியோர் செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச யோகா தினத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தைப் பற்றி நினைவு கூர்ந்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட அழைப்பைத் தொடர்ந்து, 2014-ம் ஆண்டு ஐநா பொதுச் சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஏற்றுக்கொண்டதை அவர் குறிப்பிட்டார். 

2015-ம் ஆண்டு முதல், உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருவதை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

யோகா தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமைச்சர், சர்வதேச யோகா தின விழா வெறும் சாதனை மட்டுமல்ல எனவும்  இது உலகளாவிய நலவாழ்வு இயக்கம் எனவும் கூறினார். 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருள் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் போது முன்வைக்கப்பட்ட உலகளாவிய சுகாதார தொலை நோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது  என்று அவர் கூறினார்.

2025 ஜூன் 21 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் தேசிய நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அதே நேரத்தில், நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் யோகா  அமர்வுகள் நடத்தப்படும் எனவும் திரு பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கோடேச்சா, 2025-ம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தினத்திற்கு முன்னதாக 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்கனவே யோகா குறித்த நிகழ்வுகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

***

(Release ID: 2135961)
AD/TS/PLM/RR/DL


(Release ID: 2136004) Visitor Counter : 2