பிரதமர் அலுவலகம்
வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் காணொலி மூலம் ஆற்றிய உரை
Posted On:
29 MAY 2025 7:41PM by PIB Chennai
ஜெய் ஜெகன்னாத்!
இன்று, ஜெகநாதரின் ஆசியுடன், நாட்டின் விவசாயிகளுக்காக ஒரு பெரிய இயக்கம் தொடங்கப்படுகிறது. வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் என்பது ஒரு தனித்துவமான முயற்சியாகும். பருவமழை நெருங்கி வருகிறது, காரீஃப் பருவத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அடுத்த 12 முதல் 15 நாட்களில், விஞ்ஞானிகள், நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் முற்போக்கான விவசாயிகள் அடங்கிய 2,000க்கும் மேற்பட்ட குழுக்கள் நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்குச் செல்ல உள்ளன. இந்தக் குழுக்கள் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளைச் சந்திக்க உள்ளனர். இந்தப் பிரமாண்டமான இயக்கம், இந்த லட்சியத் திட்டம் மற்றும் இந்திய விவசாயத்தின் அடித்தளமாக பிரகாசமான எதிர்காலம் ஆகியவற்றுக்காக நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும், இந்தக் குழுக்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
வேளாண்மை பாரம்பரியமாக நமது நாட்டில் ஒரு மாநிலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த வேளாண் கொள்கைகளை வகுத்து, அதன் விவசாயிகளின் நலனுக்காக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. ஆனால் இன்றைய விரைவான மாறிவரும் காலகட்டத்தில், நாட்டின் வேளாண்மை துறையில் விரிவான சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது. நமது விவசாயிகள் சாதனை அளவில் விளைச்சலை உற்பத்தி செய்து உணவு இருப்பை நிரப்பியுள்ளனர். விவசாயிகள் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வேளாண்மை முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான ஒரு முயற்சி இதுவாகும். நாட்டின் வேளாண்மை துறையை நவீனமயமாக்குவதே இதன் குறிக்கோளாகும்.
நண்பர்களே,
கடந்த பல ஆண்டுகளாக, நமது வேளாண் விஞ்ஞானிகள் மதிப்புமிக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சிறந்த முடிவுகளை வழங்கியுள்ளனர். மறுபுறம், நமது முற்போக்கான விவசாயிகள் தங்கள் சொந்த முயற்சிகள் மூலம் வேளாண்மையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
நண்பர்களே,
'வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு' இந்திய வேளாண்மையும் வளர்ச்சியடைய வேண்டும். மத்திய அரசு பல முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகிறது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலையை எவ்வாறு பெறுவது? வேளாண் பொருளாதாரத்தை எவ்வாறு வலுப்படுத்துவது? நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப பயிர்களை எவ்வாறு உற்பத்தி செய்வது? நாடு எவ்வாறு அதன் சொந்த உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வது? மட்டுமல்லாமல், உலகளாவிய உணவு விநியோகஸ்தகராக எவ்வாறு மாற முடியும்? இந்தியா எவ்வாறு உணவுக் கூடையாக மாற முடியும்? பருவநிலை மாற்றத்தின் சவால்களை எவ்வாறு சமாளிக்க முடியும்? குறைந்த தண்ணீரில் அதிக தானியங்களை எவ்வாறு உற்பத்தி செய்வது? தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களிலிருந்து தாய் பூமியை எவ்வாறு பாதுகாப்பது? வேளாண்மையை எவ்வாறு நவீனமயமாக்குவது? அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எவ்வாறு வயல்களை அடைய முடியும்? என்பனவற்றில் கடந்த 10–11 ஆண்டுகளாக எங்கள் அரசு இந்தப் பிரச்சனைகளில் விரிவாகப் பணியாற்றியுள்ளது. இப்போது, இந்த இயக்கத்தின் மூலம் விவசாயிகளிடையே முடிந்தவரை விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உங்கள் பணியாகும்.
நண்பர்களே,
ஒரு முக்கியமான தலைப்பு, பண்ணை எல்லைகளில் சூரிய சக்தி தகடுகளை அமைப்பது போன்ற கூடுதல் வருமான ஆதாரங்களை விவசாயிகளுக்கு வழங்குவது; நாட்டில் நடைபெற்று வரும் இனிப்புப் புரட்சியில் (தேனீ வளர்ப்பு) அதிகமான விவசாயிகளை ஈடுபடுத்துவது; பெரும்பாலும் கழிவுகளாக நிராகரிக்கப்படும் பயிர் எச்சங்களைப் பயன்படுத்தி ஆற்றலை உருவாக்குவது - கழிவுகளிலிருந்து செல்வத்தை உருவாக்குவது; எந்த தானியம் எந்த நிலத்திற்கு மிகவும் பொருத்தமானது என்பதைக் கண்டறிவது ஆகியவை இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
நண்பர்களே,
வேளாண்மையை வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளமாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய தீர்மானம் இது. உங்கள் கிராமங்களுக்கு வருகை தரும் விஞ்ஞானிகளிடம் முடிந்தவரை பல கேள்விகளைக் கேட்குமாறு நமது அனைத்து விவசாயிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன்: இது ஒரு அரசுப் பணி மட்டுமல்ல, இது ஒரு நாட்டின் நோக்கமாகும். நாட்டிற்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் இதை அணுகவும். விவசாயிகளின் ஒவ்வொரு வினாவிற்கும் பதிலளித்து அவர்களின் மதிப்புமிக்க பரிந்துரைகளையும் ஆவணப்படுத்தவும். வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் நமது உணவு வழங்குநர்களின் முன்னேற்றத்திற்கான புதிய கதவுகளைத் திறக்கும். இந்த நம்பிக்கையுடன், முழு குழுவிற்கும் அனைத்து விவசாயிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
***
(Release ID: 2132479)
AD/TS/IR/RR/KR
(Release ID: 2133248)