பிரதமர் அலுவலகம்
உத்தரப் பிரதேசம், கான்பூர் நகரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தபோது பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
30 MAY 2025 5:20PM by PIB Chennai
பாரத் மாதா கி - ஜெய்!
பாரத் மாதா கி - ஜெய்!
பாரத் மாதா கி - ஜெய்!
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது மத்திய அமைச்சரவை சகாக்களே, துணை முதலமைச்சர்கள் திரு கேசவ் பிரசாத் மௌரியா, திரு பிரஜேஷ் பதக் அவர்களே, உத்தரப் பிரதேச மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே மற்றும் இங்கு அதிக எண்ணிக்கையில் கூடியிருக்கும் கான்பூரைச் சேர்ந்த எனது அன்பான சகோதர சகோதரிகளே.
பாரத் மாதா கி - ஜெய்!
பாரத் மாதா கி - ஜெய்!
கான்பூரில் நடைபெறும் இந்த வளர்ச்சித் திட்டம் முதலில் ஏப்ரல் 24-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலால் கான்பூருக்கான எனது வருகையை ரத்து செய்ய வேண்டியிருந்தது. பஹல்காமில் நடந்த அந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில், கான்பூரைச் சேர்ந்த நமது புதல்வன் சுபம் திவேதியும் இந்த கொடூரத்திற்கு பலியானான். அவரது மகள் ஐஷான்யாவின் வலி, துன்பம் மற்றும் உள்ளத்தின் கோபத்தை நாம் அனைவரும் உணர முடியும். நமது மகள்கள் மற்றும் சகோதரிகளின் அந்த கோபத்தை உலகம் முழுவதும் ஆபரேஷன் சிந்தூர் வடிவத்தில் பார்த்தோம். நாம் பாகிஸ்தானுக்குள் வலுவாக, நூற்றுக்கணக்கான மைல்கள் உள்ளே நுழைந்து, பயங்கரவாத தளங்களை அழித்தோம். நமது ஆயுதப் படைகள் மிகவும் வீரத்தையும், இணையற்ற துணிச்சலையும் வெளிப்படுத்தியதால், பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்தத்திற்காக மன்றாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுதந்திரப் போராட்டத்தின் இந்த பூமியிலிருந்து, நமது வீரர்களின் துணிச்சலுக்கு நான் மீண்டும் மீண்டும் வணக்கம் செலுத்துகிறேன். நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது போது கெஞ்சிய எதிரி இனி எந்த மாயையிலும் இருக்கக்கூடாது - ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாரதம் மூன்று விஷயங்களை மிகத் தெளிவாகக் கூறியுள்ளது: முதலாவதாக, ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாரதம் வலுவான பதிலடி கொடுக்கும். அந்தப் பதிலடியின் நேரம், முறை மற்றும் விதிமுறைகளை நமது ஆயுதப் படைகள் தீர்மானிக்கும். இரண்டாவதாக, அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு பாரதம் இனி பயப்படாது அல்லது அத்தகைய பொய்களின் அடிப்படையில் எந்த முடிவுகளையும் எடுக்காது. மூன்றாவதாக, பயங்கரவாதத்தின் மூளையாக இருப்பவர்களையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அரசுகளையும் பாரதம் ஒன்றாகப் பார்க்கும்.
நண்பர்களே,
ஆபரேஷன் சிந்தூரின் போது பாரதத்தின் உள்நாட்டு ஆயுதங்களின் வலிமையையும், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் முயற்சியையும் உலகம் கண்டிருக்கிறது. நமது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், குறிப்பாக பிரம்மோஸ் ஏவுகணை, எதிரி பிரதேசத்திற்குள் அழிவை உருவாக்கியது. இலக்குகள் அடையாளம் காணப்பட்ட இடங்களில் எல்லாம் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த வலிமை 'தற்சார்பு இந்தியா' மீதான நமது உறுதிப்பாட்டிலிருந்து நமக்கு கிடைத்துள்ளது. பாரதம் தனது ராணுவ மற்றும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மற்ற நாடுகளைச் சார்ந்திருந்த ஒரு காலம் இருந்தது. அந்தச் சூழ்நிலைகளை நாம் மாற்றத் தொடங்கினோம். பாதுகாப்பில் பாரதத்தை தன்னிறைவு பெறச் செய்வது நமது பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல - நமது தேசிய பெருமைக்கும் சம அளவில் முக்கியமானதாகும். அதனால்தான் நாட்டை இந்தச் சார்பு நிலையிலிருந்து விடுவிப்பதற்காக தற்சார்பு இந்தியா இயக்கத்தைத் தொடங்கினோம்.
நண்பர்களே,
ஒரு காலத்தில் பாரம்பரியத் தொழில்கள் இந்தப் பகுதியை விட்டு வெளியேறி வந்தன. ஆனால் இப்போது பாதுகாப்புத் துறையிலிருந்து பெரிய நிறுவனங்கள் வருகின்றன. அருகிலுள்ள அமேதியில், ஏகே-203 ரைபிள்களின் உற்பத்தி ஏற்கனவே தொடங்கிவிட்டது.
சகோதர சகோதரிகளே
ஒரு மாநிலத்தின் தொழில்துறை முன்னேற்றத்திற்கு இரண்டு மிக முக்கியமான நிபந்தனைகள் உள்ளன: முதலாவதாக, எரிசக்தி துறையில் தன்னிறைவு - அதாவது, தடையற்ற மின்சாரம்; இரண்டாவது, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து. தற்போது, நாம் பல மின் உற்பத்தி நிலையங்களைத் திறந்து வைத்துள்ளோம்: 660 மெகாவாட் பங்க்கி மின் உற்பத்தி நிலையம், 660 மெகாவாட் நெய்வேலி மின் உற்பத்தி நிலையம், 1320 மெகாவாட் ஜவஹர்பூர் மின் உற்பத்தி நிலையம், 660 மெகாவாட் ஓப்ரா சி மின் உற்பத்தி நிலையம் மற்றும் 660 மெகாவாட் குர்ஜா மின் உற்பத்தி நிலையம்.
நண்பர்களே,
தற்போது, நமது உத்தரப் பிரதேசம் நவீன உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் அடிப்படையில் பெரும் முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. ஒரு காலத்தில் சேதமடைந்த சாலைகள் மற்றும் பள்ளங்களுக்கு பெயர் பெற்ற மாநிலம் இப்போது அதன் விரைவுச் சாலைகளின் கட்டமைப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து வந்த அதே உத்தரப்பிரதேசத்தில், தற்போது நெடுஞ்சாலைகள் 24 மணி நேரமும் போக்குவரத்துடன் சுறுசுறுப்பாக உள்ளன.
நண்பர்களே,
கான்பூர் மத்திய ரயில் நிலையமும் மேம்படுத்தப்பட்டு உலகத் தரம் வாய்ந்த தோற்றத்தை அளிக்கிறது. மிக விரைவில், கான்பூர் மத்திய ரயில் நிலையம் ஒரு விமான நிலையம் போல நவீனமாகத் தோன்றும். அமிர்த பாரத ரயில் நிலையத் திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேசத்தில் 150க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை எங்கள் அரசு உருவாக்கி வருகிறது. நாட்டில் அதிக எண்ணிக்கையிலான சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் ஏற்கனவே மாறிவிட்டது. அதாவது நெடுஞ்சாலைகள், ரயில்வே மற்றும் விமான போக்குவரத்துகளில் உத்தரப்பிரதேசம் தற்போது அனைத்து துறைகளிலும் விரைவாக முன்னேறி வருகிறது.
நண்பர்களே,
தற்போது, உத்தரபிரதேசத்தில் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் முழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படுகின்றன. நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நிறைவேற்ற உதவுவதற்காக அரசு அவர்களின் நலனில் உறுதியாக உள்ளது.
மிக்க நன்றி!
***
(Release ID: 2132768)
AD/TS/IR/RR/KR
(Release ID: 2133245)