மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கல்வி நிறுவனங்களை புகையிலை மற்றும் போதைப்பொருள் இல்லாததாக மாற்றுவதற்காக நாடு தழுவிய அமலாக்க இயக்கத்தை கல்வி அமைச்சகம் தொடங்குகிறது
Posted On:
23 MAY 2025 2:45PM by PIB Chennai
புகையிலை மற்றும் போதைப்பொருட்களின் தவறான பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய படியாக, கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையானது கல்வி நிறுவனங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை புகையிலை, மது மற்றும் போதைப்பொருள் இல்லாதவையாக வைத்திருக்கும் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வலுவான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
மே 15, 2025 அன்று நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் 8-வது உச்சக் குழு கூட்டத்திற்குப் பிறகு, பள்ளிக் கல்வித்துறையின் செயலாளர் திரு சஞ்சய் குமார் நாடு தழுவிய அளவில் அமலாக்கத்தை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்மட்டக் கூட்டம், இளம் மனங்களை தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்களிலிருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசரத் தேவையை வலியுறுத்தியது. கல்வி மற்றும் சட்ட அமலாக்கத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கோள்வதற்கும் அழைப்பு விடுத்தது.
உலகின் இளம் வயது மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அதன் மக்கள்தொகையில் பெரும்பாலோர் 29 வயதுக்குட்பட்டவர்கள். இந்த இளைஞர் தொகை நாட்டின் எதிர்காலத்திற்கு ஆற்றல் வாய்ந்த சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அவர்களைப் பாதுகாப்பது என்பது வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கு மிக முக்கியமானதாகும்.
இளைஞர்களிடையே புகையிலை நுகர்வு வேகமாக அதிகரித்து வருவதாகவும், இந்தப் பழக்கம் பள்ளி/கல்லூரி வளாகங்களுக்குள் பிற வகை போதைப்பொருள்களை பரிசோதித்துப் பார்க்க வழிவகுக்கும் என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. உலகளாவிய இளைஞர் புகையிலை கணக்கெடுப்பு -2019 இன்படி 13–15 வயதுடைய இந்திய மாணவர்களில் 8.5% பேர் ஏதேனும் ஒரு வடிவத்தில் புகையிலையைப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் 5,500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒவ்வொரு நாளும் புதிதாக புகையிலையைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள் என்பது இன்னும் கவலையளிக்கும் உண்மையாக உள்ளது.
புகையிலைப் பயன்பாடு பெரும்பாலும் மிகவும் ஆபத்தான பொருட்களை பயன்படுத்திப் பார்ப்பதற்கான நுழைவாயிலாகும். பெரும்பாலான வயதுவந்த பயனர்கள் இளமைப் பருவத்திலேயே இப்பழக்கத்தைத்தொடங்குகிறார்கள், ஏற்கனவே சட்டங்கள் இருந்தபோதிலும், பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் இருந்து இந்த தயாரிப்புகளை எளிதாக வாங்க முடிகிறது.
அதிகரித்து வரும் இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட, கல்வி அமைச்சகம் புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் வழிகாட்டுதல்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை புகையிலை பயன்பாடு மற்றும் விற்பனையிலிருந்து முற்றிலுமாக விடுவிப்பதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதலை இது வழங்குகிறது.
துறையின் வழிகாட்டுதல்கள், வளாகங்களை புகையிலை இல்லாததாக வைத்திருக்க பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மேற்கொள்ள வேண்டிய பின்வரும் ஒன்பது செயல்பாடுகளை பட்டியலிடுகின்றன.
வளாகத்திற்குள் 'புகையிலை இல்லாத பகுதி' என்ற அறிவிப்புப் பலகையைக் காட்சிப்படுத்தல்
நுழைவாயில்/எல்லையில் 'புகையிலை இல்லாத கல்வி நிறுவனம்' என்ற அறிவிப்புப் பலகையைகா காட்சிப்படுத்தல்
வளாகத்தில் புகையிலை பயன்பாட்டுக்கான சான்றுகள் இல்லாத நிலையை உருவாக்குதல்
புகையிலையின் தீங்குகள் குறித்த விழிப்புணர்வுப் பொருட்களை காட்சிப்படுத்துதல்
ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் குறைந்தது ஒரு புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ளுதல்
புகையிலை கண்காணிப்பாளர்களை நியமித்தல்
பள்ளி நடத்தை விதிகளில் புகையிலை இல்லாத கொள்கையைச் சேர்த்தல்
புகையிலை இல்லாத மண்டலம் என்பதை உறுதிப்படுத்த கல்வி நிறுவனங்களைச் சுற்றி 100 கெஜம் மஞ்சள் கோடு போடுதல்
அந்த 100-கெஜ மண்டலத்திற்குள் எந்தக் கடைகளோ அல்லது விற்பனையாளர்களோ புகையிலை பொருட்களை விற்காமல் இருப்பதை உறுதி செய்தல்
இவற்றில், இரண்டு முக்கிய நடவடிக்கைகளுக்கு உள்ளூர் அதிகாரிகளின் உடனடி ஆதரவு தேவைப்படுகிறது:
இந்த நடவடிக்கைகள் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, கல்வி அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. நவம்பர் 2024 இல் வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையில், இந்த விதிகளை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே கோரப்பட்டிருந்தது.
ஒரு மாத கால அமலாக்க இயக்கமானது உலக புகையிலை எதிர்ப்பு தினமான மே 31, 2025
தொடங்கி போதைப் பொருட்களுக்கு எதிரான சர்வதேச தினம் ஜூன் 26, 2025 வரை தொடரும்.
புகையிலையின் தீய விளைவுகள் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேடிக்கையான முறையில் கல்வி கற்பிக்க, அமைச்சகம் ஒரே நேரத்தில் 'உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு வினாடி வினா-2025' ஐ MyGov தளத்தில் (https://quiz.mygov.in) தொடங்கியுள்ளது. வினாடி வினா மே 22, 2025 முதல் ஜூலை 21, 2025 வரை நேரலையில் ஒளிபரப்பாகிறது.
இணைப்பு: https://quiz.mygov.in/quiz/world-no-tobacco-day-awareness-quiz/
இந்த முக்கியமான பிரச்சாரத்தை ஆதரிக்க அனைத்து குடிமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன், இந்தியா தனது பள்ளிகளையும் கல்லூரிகளையும் பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமாகவும், தீங்கு விளைவிக்கும் பொருட்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவும் செய்ய முடியும் என்று அமைச்சகம் நம்புகிறது.
கல்வி வளாகங்களை பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றுவதற்கு இந்த காலகட்டத்தில் அமலாக்கத்தின் தீவிர பங்கேற்பை உறுதி செய்ய மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
***
(Release ID: 2130713)
SG/TS/PLM/RR/KR
(Release ID: 2130757)