பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி துணிச்சல்மிக்க விமானப்படைப் போர் வீரர்கள் மற்றும் இராணுவ வீரர்களுடன் ஆதம்பூரில் விமானப் படை நிலையத்தில் உரையாடினார்.
விமானப்படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களுடன் உரையாடினேன், நமது நாட்டைப் பாதுகாப்பதில் அவர்களின் துணிச்சலும், தொழில்முறையும் பாராட்டத்தக்கது: பிரதமர்
‘பாரத் மாதா கீ ஜெய்’ என்பது வெறும் முழக்கம் அல்ல, இது தமது நாட்டின் கௌரவம், கண்ணியத்திற்காக தமது உயிரைப் பணயம் வைக்கும் ஒவ்வொரு வீரரின் உறுதிமொழி: பிரதமர்
ஆபரேஷன் சிந்தூர் என்பது இந்தியாவின் கொள்கை, நோக்கம் மற்றும் தீர்க்கமான திறன் கொண்ட மூன்று அம்சங்களாகும்: பிரதமர்
நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் குங்குமம் அழிக்கப்பட்டபோது, பயங்கரவாதிகளை அவர்களின் மறைவிடங்களில் நாம் அழித்தோம்: பிரதமர்
இந்தியா மீது கண் வைப்பது அழிவைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை பயங்கரவாதத்திற்கு மூளையாக செயல்படுவோருக்கு தற்போது தெரியும்: பிரதமர்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மற்றும் விமான தளங்கள் அழிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்களின் தீய நோக்கங்களும், துணிச்சலும் தோற்கடிக்கப்பட்டன: பிரதமர்
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் லட்சுமண ரேகை தற்போது தெளிவாக உள்ளது, மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால், இந்தியா பதிலடி கொடுக்கும், அது ஒரு தீர்க்கமான
Posted On:
13 MAY 2025 5:13PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் துணிச்சல்மிக்க விமானப்படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்தார். அவர்களிடம் உரையாற்றிய அவர், 'பாரத் மாதா கி ஜெய்' என்ற முழக்கத்தின் சக்தியை எடுத்துரைத்தார், உலகம் அதன் வலிமையைக் கண்டுள்ளது என்பதை வலியுறுத்தினார். இது வெறும் முழக்கம் மட்டுமல்ல, பாரதத் தாயின் கண்ணியத்தை நிலைநிறுத்த தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் ஒவ்வொரு வீரரும் எடுக்கும் ஒரு புனிதமான உறுதிமொழி என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த முழக்கம் நாட்டிற்காக வாழவும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் விரும்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலாகும் என்று மேலும் கூறினார். போர்க்களத்திலும் முக்கியமான பணிகளிலும் 'பாரத் மாதா கி ஜெய்' எதிரொலிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்திய வீரர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று முழக்கமிடும்போது, அது எதிரியின் முதுகெலும்பில் நடுக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் ராணுவ வலிமையை அவர் விரிவாக எடுத்துரைத்தார். இந்திய ட்ரோன்கள் எதிரிகளின் கோட்டைகளை தாக்கும் போது, ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கும் போது, எதிரி 'பாரத் மாதா கி ஜெய்' என்ற ஒரே ஒரு சொற்றொடரை மட்டுமே கேட்கிறார் என்று கூறினார். இருண்ட இரவுகளிலும் கூட, எதிரிகள் நம் நாட்டின் வெல்ல முடியாத உணர்வைக் காணும்படி கட்டாயப்படுத்தும் வகையில், வானத்தை ஒளிரச் செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அணு ஆயுத அச்சுறுத்தல்களை இந்தியப் படைகள் தகர்த்தெறியும்போது, 'பாரத் மாதா கி ஜெய்' என்ற செய்தி வானத்திலும் எதிரொலிக்கிறது என்று கூறினார்.
இந்தியாவின் ஆயுதப் படைகளின் துணிச்சலையும் உறுதியையும் பாராட்டி, அவர்கள் மில்லியன் கணக்கான இந்தியர்களின் மனங்களைப் பெருமித உணர்வுகளால் நிரப்பியுள்ளனர் என்று கூறிய திரு மோடி, ஒவ்வொரு இந்தியரும் தற்போது அவர்களின் இணையற்ற துணிச்சல் மற்றும் வரலாற்று சாதனைகளால் உயர்ந்து நிற்கிறார்கள் என்று குறிப்பிட்டார். துணிச்சலான வீரர்களைப் பார்ப்பது உண்மையில் ஒரு பெரிய அதிர்ஷ்டம் என்றும், பல ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் வீரம் பற்றி விவாதிக்கப்படும்போது, இந்தப் பணியை வழிநடத்தும் வீரர்கள் மிகவும் கொண்டாடப்படும் நபர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார். அவர்கள் நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு உத்வேகமாக மாறிவிட்டதாக அவர் தெரிவித்தார். நெஞ்சுரம் மிக்க வீரர்களின் மண்ணிலிருந்து ஆயுதப் படையினருடன் உரையாற்றிய அவர், விமானப்படை, கடற்படை, ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார். அவர்களின் வீரதீர முயற்சிகளைப் பாராட்டிய அவர், ஆபரேஷன் சிந்தூரின் தாக்கம் நாடு முழுவதும் எதிரொலிப்பதாகக் கூறினார். இந்த நடவடிக்கையின் போது, ஒவ்வொரு இந்தியரும் வீரர்களுடன் உறுதியாக நின்று, பிரார்த்தனைகளையும், அசைக்க முடியாத ஆதரவையும் அளித்ததாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தியாகங்களை அங்கீகரித்து, முழு நாட்டின் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
“ஆபரேஷன் சிந்தூரின் செயல்பாடு ஒரு சாதாரண இராணுவ நடவடிக்கை அல்ல, ஆனால் இந்தியாவின் கொள்கை, நோக்கம் மற்றும் தீர்க்கமான திறன் ஆகிய மூன்று அம்சங்கள்” என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியா புத்தரின் பூமி என்று எடுத்துரைத்த அவர், "ஒரு போர்வீரனை 125,000 பேருக்கு எதிராகப் போராட வைப்பேன்... குருவிகள் பருந்துகளைத் தோற்கடிக்கச் செய்வேன்... அப்போதுதான் நான் குரு கோபிந்த் சிங் என்று அழைக்கப்படுவேன்" என்று குரு கோபிந்த் சிங் கூறியதை சுட்டிக்காட்டினார். நீதியை நிலைநாட்ட அநீதிக்கு எதிராக ஆயுதங்களை ஏந்துவது எப்போதும் இந்தியாவின் பாரம்பரியமாக இருந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதிகள் இந்தியாவின் மகள்களைத் தாக்கி தீங்கு செய்யத் துணிந்தபோது, இந்தியப் படைகள் அவர்களை அவர்களின் சொந்த மறைவிடங்களில் தாக்கி அழித்தார்கள் என்பதை அவர் குறிப்பிட்டார். இந்தத் தாக்குதல் நடத்தியவர்கள் கோழைத்தனமாக, ரகசியமாக வந்ததாகவும், தாங்கள் சவால் விடுத்த வலிமைமிக்க இந்திய ஆயுதப் படைகளின் வலிமையை மறந்துவிட்டதாகவும் அவர் கூறினார். இந்திய வீரர்களின் துணிச்சலைப் பாராட்டிய அவர், அவர்கள் நேரடியாகத் தாக்கி, முக்கிய பயங்கரவாத மையங்களை அழித்ததாகக் குறிப்பிட்டார். ஒன்பது பயங்கரவாத மறைவிடங்கள் அழிக்கப்பட்டன, 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர். பயங்கரவாதத்தின் மூளையாக இருந்தவர்கள் தற்போது இந்தியாவைத் தூண்டுவதன் ஒரு மறுக்க முடியாத விளைவைப் புரிந்துகொண்டுள்ளனர் என்றும் முழுமையான அழிவு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் அப்பாவியை ரத்தம் சிந்தவைக்கும் எந்தவொரு முயற்சியும் பேரழிவிற்கு மட்டுமே வழிவகுக்கும் என்று குறிப்பிட்ட அவர், இந்த பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான் ராணுவமானது இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையால் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டினார். "இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளன - பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் இல்லை" என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்தியா அவர்களின் சொந்த எல்லைக்குள் அவர்களைத் தாக்கும் என்றும், தப்பிக்க எந்த வாய்ப்பையும் விட்டுவிடாது என்றும் உறுதிப்படுத்தினார். இந்தியாவின் ட்ரோன்களும் ஏவுகணைகளும் பாகிஸ்தான் அவற்றைப் பற்றி யோசித்துக்கொண்டே பல நாட்கள் தூக்கத்தை இழக்கும் அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். மகாராணா பிரதாப்பின் புகழ்பெற்ற குதிரையான சேதக் பற்றி எழுதப்பட்ட வரிகளை மேற்கோள் காட்டி, இந்த வார்த்தைகள் தற்போது இந்தியாவின் மேம்பட்ட நவீன ஆயுதங்களுடன் சரியாகப் பொருந்துகின்றன என்று குறிப்பிட்டார்.
"சிந்தூர் நடவடிக்கையின் வெற்றி நாட்டின் உறுதியை வலுப்படுத்தியுள்ளது, நாட்டை ஒன்றிணைத்துள்ளது, இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாத்துள்ளது மற்றும் இந்தியாவின் பெருமையை புதிய உச்சங்களுக்கு உயர்த்தியுள்ளது" என்று திரு மோடி கூறினார். ஆயுதப் படைகளின் அசாதாரண முயற்சிகளையும் பாராட்டினார். அவர்களின் நடவடிக்கைகள் முன்னோடியில்லாதவை, கற்பனை செய்ய முடியாதவை மற்றும் குறிப்பிடத்தக்கவை என்று விவரித்தார். இந்திய விமானப்படையின் தாக்குதல்களின் ஆழமான துல்லியத்தை அவர் எடுத்துரைத்தார். அவர்கள் பாகிஸ்தானுக்குள் உள்ள பயங்கரவாத மறைவிடங்களை வெற்றிகரமாக குறிவைத்தனர் என்று குறிப்பிட்டார். 20-25 நிமிடங்களுக்குள், இந்தியப் படைகள் எல்லை தாண்டிய தாக்குதல்களை முழுமையான துல்லியத்துடன் நடத்தி, துல்லியமான இலக்குகளைத் தாக்கியதாக திரு மோடி குறிப்பிட்டார். நவீன, தொழில்நுட்ப ரீதியாக ஆயுதம் ஏந்திய மற்றும் மிகவும் தொழில்முறை படையால் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் பாராட்டினார்.
இந்திய ராணுவத்தின் வேகமும், துல்லியமும் அவர்களின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் எதிரிகளை முற்றிலும் திகைக்க வைத்துவிட்டன என்று கூறினார் எதிரிகளின் கோட்டைகள் இடிந்து விழுந்தபோது அவர்கள் எதுவும் அறியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதத் தலைமையகங்களைத் தாக்கி முக்கிய பயங்கரவாத செயல்பாட்டாளர்களை ஒழிப்பதே இந்தியாவின் நோக்கம் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், பொதுமக்கள் விமானங்களைப் பயன்படுத்தி தனது நடவடிக்கைகளைப் பாதுகாக்க பாகிஸ்தான் முயற்சித்த போதிலும், இந்தியப் படைகள் மிகுந்த எச்சரிக்கையுடனும் துல்லியமாகவும் பதிலடி கொடுத்தன என்று கூறினார். விழிப்புணர்வையும் பொறுப்பையும் கடைப்பிடித்து தங்கள் பணியை வெற்றிகரமாகச் செய்ததற்காக ஆயுதப்படைகளைப் பாராட்டினார். இந்திய வீரர்கள் தங்கள் நோக்கங்களை முழுமையான துல்லியத்துடனும் உறுதியுடனும் நிறைவேற்றியதாக அவர் பெருமையுடன் அறிவித்தார். இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத மறைவிடங்கள் மற்றும் விமானத் தளங்களை அழித்தது மட்டுமல்லாமல், அவர்களின் தீய நோக்கங்களையும் பொறுப்பற்ற துணிச்சலையும் நசுக்கியது என்றும் அவர் எடுத்துரைத்தார்.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, எதிரி விரக்தியடைந்து பல இந்திய விமானத் தளங்களை மீண்டும் மீண்டும் குறிவைக்க முயன்றதாக திரு மோடி கூறினார். இருப்பினும், பாகிஸ்தானின் ஒவ்வொரு தாக்குதல் முயற்சியும் தீர்க்கமாக முறியடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள், விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் அனைத்தும் இந்தியாவின் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பின் முன் தோல்வியடைந்தன என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்தியாவின் தயார்நிலை மற்றும் தொழில்நுட்ப வலிமை எதிரியின் அச்சுறுத்தல்களை முழுமையாக நீர்த்துப் போகச் செய்யப்பட்டதை உறுதி செய்கிறது என்று அவர் தெரிவித்தார். நாட்டின் விமானப்படை தளங்களை கண்காணித்த தலைமைக்கு அவர் பெரும் பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் இந்திய விமானப்படையின் ஒவ்வொரு விமானப்படை வீரருக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். நாட்டைப் பாதுகாப்பதில் அவர்களின் சிறந்த செயல்திறன் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு தற்போது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் மீது மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால், நாடு தீர்க்கமாகவும் வலுவாகவும் பதிலடி கொடுக்கும் என்று அறிவித்தார். கடந்த துல்லிய தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்களின் போது இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகளை நினைவு கூர்ந்தார். அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் ஆபரேஷன் சிந்தூர் தற்போது நாட்டின் புதிய இயல்பாகிவிட்டது என்று கூறினார். நேற்றிரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் வெளிப்படுத்திய மூன்று முக்கிய கொள்கைகளை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். முதலாவதாக, இந்தியா ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகினால், பதிலடி அதன் சொந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் இருக்கும். இரண்டாவதாக, இந்தியா எந்த வகையான அணு ஆயுத அச்சுறுத்தலையும் பொறுத்துக்கொள்ளாது. மூன்றாவதாக, பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அரசுகளையும் இந்தியா இனி வேறுபடுத்திப் பார்க்காது. "இந்த புதிய மற்றும் உறுதியான இந்தியாவை உலகம் தற்போது அங்கீகரித்து வருகிறது, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான உறுதியான அணுகுமுறைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது" என்று பிரதமர் கூறினார்.
"சிந்தூர் நடவடிக்கையின் ஒவ்வொரு தருணமும் இந்தியாவின் ஆயுதப் படைகளின் வலிமை மற்றும் திறனுக்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது" என்று திரு மோடி தெரிவித்தார். ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு இடையிலான விதிவிலக்கான ஒருங்கிணைப்பைப் பாராட்டினார். அவர்களின் கூட்டு முயற்சி குறிப்பிடத்தக்கது என்றும் கூறினார். கடல்களில் கடற்படையின் ஆதிக்கம், எல்லைகளை ராணுவம் வலுப்படுத்துதல், தாக்குதல் மற்றும் பாதுகாப்பில் இந்திய விமானப்படையின் இரட்டைப் பங்கு ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பிற பாதுகாப்புப் படைகளின் சிறந்த செயல்திறனுக்காக அவர்களையும் பிரதமர் பாராட்டினார். இந்தியாவின் ஒருங்கிணைந்த வான் மற்றும் தரைவழிப் போர் அமைப்புகளின் செயல்திறனை அவர் எடுத்துரைத்தார். இந்தக் கூட்டு நிலை தற்போது இந்தியாவின் இராணுவ வலிமையின் வரையறுக்கும் பண்பாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டார்.
சிந்தூர் நடவடிக்கையின் போது மனிதவளத்திற்கும் மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பத்திற்கும் இடையிலான குறிப்பிடத்தக்க ஒருங்கிணைப்பை எடுத்துரைத்த பிரதமர், பல போர்களைக் கண்ட இந்தியாவின் பாரம்பரிய வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆகாஷ் போன்ற உள்நாட்டு தளங்களாலும், எஸ்-400 போன்ற நவீன சக்திவாய்ந்த அமைப்புகளாலும் வலுப்படுத்தப்பட்டன என்று குறிப்பிட்டார். இந்தியாவின் வலுவான பாதுகாப்பு கவசம் ஒரு வரையறுக்கும் பலமாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். பாகிஸ்தானின் தொடர்ச்சியான முயற்சிகள் தொடர்ந்தபோதிலும், இந்திய விமானப்படை தளங்களும் முக்கிய பாதுகாப்பு உள்கட்டமைப்பும் முற்றிலும் பாதுகாப்பாக இருந்தன. எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வீரரின் அர்ப்பணிப்புக்காகவும் களத்தில் போராடிய ஒவ்வொரு தனிநபருக்கும் இந்த வெற்றிக்காக பிரதமர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இந்தியாவின் அசைக்க முடியாத தேசிய பாதுகாப்பின் அடித்தளமாக அவர்களின் அர்ப்பணிப்பை அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானால் ஒப்பிட முடியாத அதிநவீன தொழில்நுட்பத்தை இந்தியா தற்போது கொண்டுள்ளது என்று கூறிய திரு மோடி, கடந்த பத்தாண்டுகளில், இந்திய விமானப்படை மற்றும் பிற ராணுவ அமைப்புகள் உலகின் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் சிலவற்றை பெற்றுள்ளன என்று கூறினார். புதிய தொழில்நுட்பத்துடன் குறிப்பிடத்தக்க சவால்கள் வருகின்றன என்றும், சிக்கலான மற்றும் அதிநவீன அமைப்புகளை பராமரிப்பதற்கும் திறமையாக இயக்குவதற்கும் மகத்தான திறமை மற்றும் துல்லியம் தேவை என்றும் அவர் தெரிவித்தார். தொழில்நுட்பத்தை நிபுணத்துவத்துடன் தடையின்றி ஒருங்கிணைப்பதிலும் நவீன போரில் தங்கள் மேன்மையை நிரூபிப்பதிலும் இந்தியாவின் ஆயுதப்படைகளைப் பாராட்டிய திரு மோடி, இந்திய விமானப்படை இப்போது ஆயுதங்களால் மட்டுமல்ல, தரவு மற்றும் ட்ரோன்களாலும் எதிரிகளை எதிர்கொள்ளும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டுமே இந்தியாவின் இராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், பாகிஸ்தான் மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளிலோ அல்லது ராணுவ தாக்குதல்களிலோ ஈடுபட்டால், இந்தியா முழு பலத்துடன் பதிலடி கொடுக்கும். இந்தியாவின் தாக்குதல் அதன் சொந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும் என்று அவர் உறுதிப்படுத்தினார். இந்த தீர்க்கமான நிலைப்பாட்டிற்கு நாட்டின் ஆயுதப் படைகளின் துணிச்சல், வீரம் மற்றும் விழிப்புணர்வை அவர் பாராட்டினார். வீரர்கள் தங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாடு, ஆர்வம் மற்றும் தயார்நிலையைப் பராமரிக்க வலியுறுத்தினார். இந்தியா எல்லா நேரங்களிலும் விழிப்புடனும் தயாராகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இது ஒரு புதிய இந்தியா - அமைதியை விரும்பும் ஆனால் மனிதசமுதாயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் எதிரிகளை தாக்குவதற்குத் தயங்காத இந்தியா என்று கூறி பிரதமர் தமது உரையாடலை நிறைவு செய்தார்.
***
(Release ID: 2128411)
TS/IR/AG/RR/DL
(Release ID: 2128460)
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada