உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தை ஒட்டியுள்ள எல்லை மாநிலங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்

Posted On: 07 MAY 2025 7:12PM by PIB Chennai

பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தை ஒட்டியுள்ள எல்லை மாநிலங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களுடன் பாதுகாப்பு தொடர்பாக புதுதில்லியில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை  அமைச்சர் திரு. அமித் ஷா தலைமை தாங்கினார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் துணைநிலை ஆளுநர்கள், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தின் முதல்வர்கள் மற்றும் சிக்கிம் அரசின் பிரதிநிதி ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை செயலாளர், உளவுத்துறை (ஐபி) இயக்குநர் , எல்லைப் பாதுகாப்புப் படை(பிஎஸ்எஃப்) இயக்குநர்  மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) இயக்குநர்  உள்ளிட்ட உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

ஏப்ரல் 22, 2025 அன்று காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அதற்குக் காரணமானவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நாடு தகுந்த பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான பிரதமர் திரு. நரேந்திர மோடியின் உறுதியான தீர்மானம் மற்றும் முடிவுக்கு உள்துறை அமைச்சர் நன்றி தெரிவித்தார். இந்தியாவின் எல்லைகள், ராணுவம் மற்றும் குடிமக்களுக்கு சவால் விடத் துணிபவர்களுக்கு பாரதத்திலிருந்து கிடைத்த ஒரு பொருத்தமான பதில்தான் ஆபரேஷன் சிந்தூர் என்று அவர் கூறினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து முதலமைச்சர்களும், துணைநிலை ஆளுநர்களும் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்காக பிரதமர் திரு மோடி மற்றும் முப்படைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைப் புறக்கணிக்காமல், ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பியதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். குறிப்பிட்ட உள்ளீடுகளுக்குப் பிறகு பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்திய ஆயுதப் படைகளால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக திரு மோடி அரசின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கைக்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார். இந்த நேரத்தில் நாடு வெளிப்படுத்திய ஒற்றுமை, நாட்டு மக்களின் மன உறுதியை உயர்த்தியுள்ளது என்று திரு ஷா கூறினார்.

 

மே 6-7, 2025 இடைப்பட்ட இரவில், இந்திய ஆயுதப் படைகள் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய ஒன்பது குறிப்பிட்ட இடங்களைத் தாக்கி, அவற்றின் உள்கட்டமைப்பை அழித்ததாக திரு அமித் ஷா கூறினார். இந்திய ஆயுதப் படைகள் நடத்திய நடவடிக்கையில், பயங்கரவாத பயிற்சி முகாம்கள், ஆயுதத் தளங்கள் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் பிற பயங்கரவாதக் குழுக்கள் போன்ற அமைப்புகளின் மறைவிடங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் கூறினார்.

 

போர் ஒத்திகைப் பயிற்சிக்காக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி அனைத்து மாநிலங்களும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். மருத்துவமனைகள், தீயணைப்புப் படை போன்ற அத்தியாவசிய சேவைகளை சீராக இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க எஸ்டிஆர்எஃப், சிவில் பாதுகாப்பு, ஊர்க்காவல் படையினர், என்சிசி போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மாநிலங்களை உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார். குடிமக்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

சமூக மற்றும் பிற ஊடக தளங்களில் தேவையற்ற நபர்களால் தேச விரோத பிரச்சாரம் செய்யப்படுவதைத்  தடுக்க தீவிர கண்காணிப்பு தேவை என்றும், மாநில அரசுகள் மற்றும் மத்திய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் திரு அமித் ஷா கூறினார். தடையற்ற தகவல்தொடர்பைப் பராமரிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்படக்கூடிய இடங்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் கூறினார். பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தைப் பரப்பாமல், வதந்திகளுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார். உள்ளூர் நிர்வாகம், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127583 

***

RB/DL


(Release ID: 2127604) Visitor Counter : 17