பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏபீபி நெட்வொர்க்கின் இந்தியா@2047 உச்சி மாநாட்டில் உரையாற்றினார்
Posted On:
06 MAY 2025 10:10PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஏபீபி நெட்வொர்க்கின் இந்தியா@2047 என்ற உச்சி மாநாட்டில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உச்சிமாநாட்டின் வளமான பன்முகத்தன்மையை எடுத்துரைத்தார். உச்சிமாநாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பை அவர் எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் இந்தியாவின் பிரதிபலிப்பாக இந்த உச்சிமாநாட்டை விவரித்த திரு நரேந்திர மோடி, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதே நாட்டின் மிகப்பெரிய இலக்கு என்பதை வலியுறுத்தினார். இந்தியாவின் வலிமை, வளங்கள், உறுதிப்பாடு ஆகியவற்றை எடுத்துரைத்த அவர், சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளையும் சுட்டிக் காட்டினார். மக்கள் தங்கள் இலக்குகளை அடையும் வரை விழித்தெழுந்து, விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த அசைக்க முடியாத மனப்பான்மை இன்று ஒவ்வொரு குடிமகனிடமும் தெரிவதாக அவர் குறிப்பிட்டார். வளர்ந்த இந்தியாவை அடைவதில் இத்தகைய உச்சிமாநாடுகளின் பங்கை திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். இந்த சிறப்பான உச்சிமாநாட்டை நடத்தியதற்காக ஏற்பாட்டாளர்களைப் பாராட்டிய அவர், அதிதேப் சர்க்கார், ரஜ்னிஷ் உள்ளிட்ட ஏபீபி நெட்வொர்க் குழுவினருக்கு அவர்களின் முயற்சிகளுக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்தியாவிற்கு இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், இங்கிலாந்து பிரதமருடன் உரையாடியதாகவும், இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். இரண்டு பெரிய திறந்த சந்தைப் பொருளாதாரங்களுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்றும், இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் பயனளிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். இது இந்தியாவின் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த செய்தி என்றும், ஏனெனில் இது பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்றும், இந்திய வணிகங்களுக்கும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியா சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது மட்டுமல்லாமல், வர்த்தகத்திற்கான ஒரு துடிப்பான மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள உலகத்துடன் தீவிரமாக இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
துணிச்சலாக முடிவெடுப்பதற்கும் இலக்கை அடைவதற்கும் நாட்டின் நலன்களை முதன்மைப்படுத்துவதும், அதன் ஆற்றலில் நம்பிக்கை வைத்திருப்பதும் அவசியம் என்பதை வலியுறுத்திய திரு நரேந்திர மோடி, துரதிர்ஷ்டவசமாக, பல ஆண்டுகளாக, முன்னேற்றத்தைத் தடுக்கும் ஒரு முரண்பாடான அணுகுமுறையில் இந்தியா சிக்கிக் கொண்டது என்று குறிப்பிட்டார். கடந்த காலங்களில், உலகளாவிய கருத்துக்கள், தேர்தல் கணக்கீடுகள், அரசியல் வாழ்வு குறித்த கவலைகள் காரணமாக முக்கிய முடிவுகள் எவ்வாறு தாமதப்படுத்தப்பட்டன என்பதையும் அவர் எடுத்துரைத்தார். சுயநலம் பெரும்பாலும் தேவையான சீர்திருத்தங்களை விட முன்னுரிமை பெற்றது என்று அவர் கூறினார். இதனால் நாட்டிற்கு பின்னடைவுகள் ஏற்பட்டன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். "தேசம் முதலில்" என்ற சிந்தனை இருக்கும்போது மட்டுமே முன்னேற்றம் ஏற்படும் என்று அவர் உறுதிப்படுத்தினார். அந்த வகையில், கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்து வருவதாகவும், இந்த அணுகுமுறையின் விளைவுகளை நாடு இப்போது கண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
"கடந்த 10-11 ஆண்டுகளில், தீர்க்கப்படாத நீண்டகால பிரச்சினைகளைத் தீர்க்க எங்கள் அரசு தொடர்ச்சியான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது" என்று பிரதமர் கூறினார். வங்கித் துறையை ஒரு முக்கிய உதாரணமாகக் குறிப்பிட்டு, வங்கி என்பது பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்பதையும் அவர் வலியுறுத்தினார். 2014 க்கு முன்பு, இந்தியாவின் வங்கிகள் சரிவின் விளிம்பில் இருந்தன என்று அவர் தெரிவித்தார். இப்போது இந்தியாவின் வங்கித் துறை உலகின் வலிமையான துறைகளில் ஒன்றாக உள்ளது என்று அவர் கூறினார். எங்களது அரசைப் பொறுத்தவரை, நாட்டின் நலன் மிக முக்கியமானது என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஏழைகளுக்கான அரசு நலத்திட்ட நிதியில் 15% மட்டுமே உண்மையில் அவர்களைச் சென்றடைந்தது என்பதை முன்னாள் பிரதமர் ஒருவர் ஒப்புக்கொண்டதை நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, பல ஆண்டுகளாக, பயனாளிகள் நேரடி நிதி உதவி பெறுவதை உறுதி செய்வதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். ஏழைகளுக்கான ஒவ்வொரு ரூபாயும் கசிவு இல்லாமல் அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக நேரடி பலன் பரிமாற்ற (DBT) முறையை இந்த அரசு அறிமுகப்படுத்தியதாக அவர் கூறினார். இந்த சீர்திருத்தம் அரசுத் திட்டங்களில் திறமையின்மையை நீக்கி, சரியான நபர்களுக்கு பலன்கள் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் பல ஆண்டு கால தாமதத்தை பிரதமர் எடுத்துரைத்தார். முந்தைய அரசுகள் நிதிச் சுமையைக் காரணம் காட்டி இந்தத் திட்டத்தை நிராகரித்ததாகவும், ஆனால் தேசியப் பாதுகாப்புக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களின் நலன்களுக்கு தமது அரசு முன்னுரிமை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுக்கு குறுக்கீடாக இருந்த கடந்த கால அரசியல் தடைகளைப் பிரதமர் நினைவு கூர்ந்தார். ஆனால் அரசியல் பிரதிநிதித்துவம் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை இயற்றியதன் மூலம் இந்த அரசு தேசிய நலனை நிலைநிறுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
தனது அரசால் மேற்கொள்ளப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியான நதிகளை இணைக்கும் திட்டத்தை சுட்டிக் காட்டினார்.
தில்லியில் டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவுச்சின்னத்தை நிறுவியது ஒரு முக்கியமான சாதனை என்பதையும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். பாபாசாகேப் அம்பேத்கருடன் தொடர்புடைய முக்கிய இடங்களை பஞ்சதீர்த்தமாக உருவாக்கி, அவரது மரபுக்கு உலகளாவிய அங்கீகாரத்தை தமது அரசு உறுதி செய்தது என்று அவர் கூறினார்.
அரசின் செயல்முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவிற்கான அடித்தளத்தை வலுப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
பாரம்பரியம் மற்றும் முன்னேற்றம் இரண்டையும் ஒரே சமயத்தில் மேம்படுத்துவதற்கான இந்தியாவின் தனித்துவமான அணுகுமுறையைச் சுட்டிக் காட்டிய பிரதமர், பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் எவ்வாறு ஒன்றாக இணைந்து வளர முடியும் என்பதை இந்தியா நிரூபித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
முன்னேற்றத்தின் போது கலாச்சார வேர்களைக் கைவிட வேண்டிய அவசியமில்லை என்பதை திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார். இந்தியா தனது பாரம்பரியத்துடன் எவ்வளவு ஆழமாக இணைந்திருக்கிறதோ, அவ்வளவுக்கு நவீன முன்னேற்றங்களுடனான அதன் ஒருங்கிணைப்பும் வலுவாக இருக்கும் என்று அவர் கூறினார். இந்தியா தனது மரபைப் பாதுகாத்து வரும் அதே நேரத்தில் எதிர்காலத்திற்கான வலிமையின் ஆதாரமாக இருப்பதை உறுதி செய்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு அடியும் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த 10 ஆண்டுகள் வரவிருக்கும் நூற்றாண்டுகளுக்கு இந்தியாவின் பாதையை வரையறுக்கும் என்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இது ஒரு முக்கிய காலகட்டம் என்று விவரித்தார். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொருவரது நிலையிலும் சிறந்த மாற்றத்தின் உணர்வு தெளிவாகத் தெரிகிறது என்று அவர் தெரிவித்தார். உச்சிமாநாட்டில் நடந்த விவாதங்கள் முன்னேற்றத்தின் இந்த பகிரப்பட்ட பார்வையை பிரதிபலித்ததாகக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, உச்சிமாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக ஏபிபி நெட்வொர்க் நிறுவனத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து தமது உரையை நிறைவு செய்தார்.
***
(Release ID: 2127359)
TS/PLM/RR/KR
(Release ID: 2127423)
Visitor Counter : 13
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada