WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்தியாவில் படைப்பாளிக்கு உகந்த சூழலியலை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்

 Posted On: 03 MAY 2025 8:55PM |   Location: PIB Chennai

மும்பையில் நடைபெற்று வரும் உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டின் (வேவ்ஸ்) மூன்றாவது நாளில், மோஷன் பிக்சர் அசோசியேஷன், (எம்பிஏ) தேசிய பொருளாதாரத்தில் இந்தியாவின் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் ஸ்ட்ரீமிங் துறைகளின் உருமாறும் தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்ற ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் மற்றும் எம்பிஏவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு சார்லஸ் ரிவ்கின் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் முருகன், எம்பிஏவின் உலகளாவிய தலைமையைப் பாராட்டியதுடன், சர்வதேச பார்வையாளர்களிடம் இந்திய திரைப்படங்களின் வளர்ந்து வரும் செல்வாக்கை எடுத்துரைத்தார். "இந்தியக் கதைகள் மொழிகள் மற்றும் புவியியல் ரீதியாக எதிரொலிக்கின்றன என்பதை ஆர்.ஆர்.ஆர் மற்றும் பாகுபலி போன்ற படங்கள் நிரூபித்துள்ளன" என்று டாக்டர் முருகன் கூறினார்.

கொள்கைகள், உற்பத்தி ஊக்கத்தொகைகள் மற்றும் வலுவான அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புகள் ஆகியவற்றின் ஆதரவுடன் படைப்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார். சமீபத்தில் கொண்டு வரப்பட்ட உள்ளடக்கத் திருட்டு எதிர்ப்பு சீர்திருத்தங்களை மேற்கோள் காட்டி, டிஜிட்டல் யுகத்தில் படைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

"திரைப்படம் என்பது வெறும் பொருளாதார இயந்திரம் மட்டுமல்ல. இது ஒரு முக்கியமான ராஜதந்திர மற்றும் கலாச்சார பாலமாகும். உலகளவில் மதிக்கப்படும் மற்றும் பாதுகாப்பான படைப்புத் துறையை இணைந்து உருவாக்க மோஷன் பிக்சர் அசோசியேஷனுடனான கூட்டாண்மையை ஆழப்படுத்த இந்தியா எதிர்நோக்குகிறது" என்று அவர் மேலும் கூறினார்.

 "இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரம் அசாதாரண வளர்ச்சிக்கு தயாராக உள்ளது, மேலும் இந்த பயணத்தை ஆதரிப்பதில் எம்பிஏ பெருமிதம் கொள்கிறது" என்று சார்லஸ் ரிவ்கின் கூறினார். கதை சொல்லல், காட்சி விளைவுகள் மற்றும் உலகளாவிய உள்ளடக்க ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியாவின் பலத்தை எடுத்துரைத்து, எம்பிஏவின் நோக்கங்களுக்கும்  பிரதமர் திரு நரேந்திர மோடியின் படைப்பாற்றல் பொருளாதாரத்திற்கான பார்வைக்கும் இடையிலான சீரமைப்பை திரு ரிவ்கின் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2126614&reg=3&lang=1

***

RB/RJ


Release ID: (Release ID: 2126720)   |   Visitor Counter: 9