குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மூத்த குடிமக்களின் நலனுக்கான நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பங்கேற்பு

Posted On: 02 MAY 2025 2:02PM by PIB Chennai

குடியரசு தலைவர்  திருமதி திரௌபதி முர்மு இன்று (மே 2, 2025)  குடியரசு தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெற்ற 'கண்ணியத்துடன் முதுமை' - மூத்த குடிமக்களின் நலனுக்கான முன்முயற்சிகள் என்ற நிகழ்வில் கலந்து கொண்டார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மூத்த குடிமக்கள் நல வலைதளம் தொடங்கப்பட்டது, மூத்த குடிமக்கள் இல்லங்களின் மெய்நிகர் திறப்பு விழா,  உதவி சாதனங்கள் விநியோகம் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் பிரம்மகுமாரிகள் அமைப்பு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியவை நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பேசிய குடியரசு தலைவர், பெற்றோர் மற்றும் பெரியவர்களை மதிப்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்று கூறினார். பொதுவாக குடும்பங்களில் குழந்தைகள் தங்கள் தாத்தா பாட்டிகளுடன் மிகவும் இணக்கமாக இருப்பதைக்  காண முடிகிறது. பெரியவர்கள் குடும்பத்திற்கு உணர்ச்சித் தூணாகச் செயல்படுகிறார்கள். தங்கள் குடும்பம் செழித்து வளர்வதைக் காணும் போது பெரியவர்களும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என அவர் கூறினார்.

இன்றைய போட்டி நிறைந்த மற்றும் வேகமான வாழ்க்கையில், மூத்த குடிமக்களின் ஆதரவு, உத்வேகம் மற்றும் வழிகாட்டுதல் நமது இளைய தலைமுறையினருக்கு மிகவும் முக்கியமானது என்று குடியரசுத் தலைவர் கூறினார். மூத்த குடிமக்கள் கொண்டிருக்கும் அனுபவங்கள் மற்றும் அறிவுச் செல்வம், இளைய தலைமுறையினர் சிக்கலான சவால்களை எதிர்கொள்ள உதவும். முதுமை என்பது ஆன்மீக ரீதியாக தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், ஒருவரின் வாழ்க்கையையும் செயல்களையும் பகுப்பாய்வு செய்யவும், அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவுமான ஒரு கட்டமாகும் என்று அவர் கூறினார். ஆன்மீக ரீதியாக அதிகாரம் பெற்ற மூத்த குடிமக்கள் நாட்டையும் சமூகத்தையும் அதிக செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்ல முடியும் என்று அவர் தெரிவித்தார்.

முதியவர்கள் கடந்த காலத்துடனான ஒரு இணைப்பு என்றும், எதிர்காலத்திற்கு வழிகாட்டிகள் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். நமது மூத்த குடிமக்கள் தங்கள் முதுமையை கண்ணியத்துடனும் சுறுசுறுப்புடனும் வாழ்வதை உறுதி செய்வது ஒரு தேசமாக நமது கூட்டுப் பொறுப்பாகும். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தீவிரமாகப் பங்கேற்கும் வகையில், அரசு பல்வேறு முயற்சிகள் மூலம் மூத்த குடிமக்களுக்கு அதிகாரம் அளித்து வருவதாக அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.  அனைத்து மக்களும் முதியவர்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும், அவர்களின் வழிகாட்டுதலை மதிக்க வேண்டும், அவர்களின் மதிப்புமிக்க துணையை அனுபவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2126092

---  

SM/PKV/KPG/SG


(Release ID: 2126167) Visitor Counter : 23