WAVES BANNER 2025
பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு நரேந்திர மோடி வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார்

உலக அரங்கில் இந்தியாவின் படைப்பாற்றல் வலிமையை வேவ்ஸ் எடுத்துக்காட்டுகிறது: பிரதமர்

உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடான வேவ்ஸ் வெறும் பெயர் மட்டுமல்ல - இது கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய தொடர்பு ஆகியவற்றின் அலையாகும்: பிரதமர்

100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியா, 100 கோடிக்கும் அதிகமான கதைக்களம் கொண்ட நாடு: பிரதமர்

இந்தியாவில் படைப்பதற்கும், உலகுக்காக படைப்பதற்கும் இதுவே சரியான நேரம்: பிரதமர்

இப்போது உலகம் கதை சொல்லலுக்கான புதிய வழிகளைத் தேடும் போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கதைகளின் பொக்கிஷத்தை இந்தியா கொண்டுள்ளது, இந்த பொக்கிஷம் காலத்தால் அழியாதது, சிந்தனையைத் தூண்டுவது மற்றும் உண்மையிலேயே உலகளாவியது: பிரதமர்

இந்தியாவில் படைப்பாற்றல் பொருளாதாரம் உதயமாகும் சூழலில் உள்ளடக்கம், படைப்பாற்றல், கலாச்சாரம் ஆகியவை இந்த படைப்பாற்றல் பொருளாதாரத்தின் மூன்று தூண்களாக உள்ளன: பிரதமர்

திரையின் அளவு சிறியதாகி வருகிறது. ஆனால் நோக்கம் எல்லையற்றதாகி வருகிறது. திரை மிகச் சிறியதாக மாறினாலும் சொல்லும் செய்தி மிகப்பெரியதாக மாறுகிறது: பிரதமர்

இப்போது திரைப்படத் தயாரிப்பு, டிஜிட்டல் உள்ளடக்கம், கேமிங், ஃபேஷன், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது: பிரதமர்

உலகை உருவாக்குபவர்களே - பெரியதாக கனவு கண்டு, முதலீட்டாளர்களுக்கு உங்கள் கதையைச் சொல்லுங்கள் – தளங்களில் மட்டுமல்ல, மக்களிடமும் முதலீடு செய்யுங்கள் - இந்திய இளைஞர்களே – உங்களின் சொல்லப்படாத 100 கோடி கதைகளை உலகுக்குச் சொல்லுங்கள்: பிரதமர்

 Posted On: 01 MAY 2025 1:42PM |   Location: PIB Chennai

மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இந்தியாவின் முதலாவது உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மகாராஷ்டிரா தினம் மற்றும் குஜராத் மாநில தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். அனைத்து சர்வதேச பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் படைப்பாற்றல் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் வந்திருப்பதை குறிப்பிட்ட பிரதமர், இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கலைஞர்கள், புதுமைப் படைப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் திறமையையும், படைப்பாற்றலையும் கொண்ட உலகளாவிய அமைப்புக்கு அடித்தளம் அமைக்க ஒன்றிணைந்துள்ளனர் என்று அவர் கூறினார். வேவ்ஸ் என்பது ஒரு சுருக்கப்பெயர் மட்டுமே அல்ல என்றும், இது கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய தொடர்பைக் குறிக்கும் ஒரு அலை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த உச்சிமாநாடு திரைப்படங்கள், இசை, கேமிங், அனிமேஷன், கதைசொல்லல் ஆகியவற்றின் விரிவான உலகத்தை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார். கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களை ஒருங்கிணைக்கவும் ஒத்துழைத்து செயல்படவும் உலகளாவிய தளத்தை இது வழங்குகிறது என அவர் கூறினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவரையும் பாராட்டிய பிரதமர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு விருந்தினர்களை அன்புடன் வரவேற்றார்.

வேவ்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவின் வளமான சினிமா வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் பேசிய திரு நரேந்திர மோடி, 1913 மே 3 அன்று இந்தியாவின் முதல் திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா வெளியிடப்பட்டது என்றும், அதை முன்னோடி திரைப்படத் தயாரிப்பாளர் தாதாசாகேப் பால்கே இயக்கினார் என்றும் குறிப்பிட்டார். பால்கேவின் பிறந்த நாள் நேற்று (ஏப்ரல் 30) கொண்டாடப்பட்டதை பிரதமர் நினைவு கூர்ந்தார். கடந்த நூற்றாண்டில் இந்திய சினிமாவின் தாக்கத்தை சுட்டிக்காட்டிய அவர், அது இந்தியாவின் கலாச்சார சாரத்தை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளது என்று கூறினார். ரஷ்யாவில் ராஜ் கபூரின் புகழ், கேன்ஸில் சத்யஜித் ரேவுக்கு உலகளாவிய அங்கீகாரம், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ஆஸ்கார் வெற்றி ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் உலகளாவிய கதைகளை எவ்வாறு தொடர்ந்து வடிவமைக்கிறார்கள் என்பதை பிரதமர் குறிப்பிட்டார். குரு தத்தின் திரைமொழிக் கவிதைகள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை,  ரித்விக் கட்டக்கின் சமூக பிரதிபலிப்புகள், எஸ்.எஸ்.ராஜமௌலியின் காவிய கதை சொல்லல் போன்றவற்றை அவர் எடுத்துரைத்தார். இந்த கலைஞர்கள் ஒவ்வொருவரும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு இந்திய கலாச்சாரத்தை உயிர்ப்புடன் கொண்டு சென்றுள்ளனர் என்று அவர் கூறினார். இந்திய சினிமா ஜாம்பவான்கள் இந்த தொழில்துறைக்கு செய்த பங்களிப்புக்காக அஞ்சல் தலைகள் மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளனர் என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவின் படைப்பாற்றல் திறனையும், உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய பிரதமர், பல ஆண்டுகளாக, கேமிங், இசை, திரைப்படத் தயாரிப்பு மற்றும் நடிப்பு ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், படைப்புத் தொழில்கள் குறித்த தது புரிதலை ஆழப்படுத்தும் யோசனைகள் குறித்து விவாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி மேற்கொள்ளப்பட்ட தனித்துவமான முன்முயற்சியை அவர் எடுத்துரைத்தார். சுமார் 500-600 ஆண்டுகளுக்கு முன்பு நர்சிங் மேத்தா எழுதிய 'வைஷ்ணவ ஜன தோ' பாடலை 150 நாடுகளைச் சேர்ந்த பாடகர்கள் ஒன்றிணைந்து பாடியதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த உலகளாவிய கலை முயற்சி குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியது எனவும், உலகை நல்லிணக்கத்துடன் ஒன்றிணைக்கும் முயற்சி இது என்றும் அவர் கூறினார். வேவ்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள பல தனிநபர்கள் காந்தியின் தத்துவங்களை முன்னெடுத்து, குறுகிய வீடியோ செய்திகளை உருவாக்குவதன் மூலம் காந்தியின் 150-வது பிறந்த தின முன்முயற்சிகளுக்கு பங்களித்தனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இந்தியாவின் படைப்பாற்றல் உலகத்தின் கூட்டு வலிமை, சர்வதேச ஒத்துழைப்புடன் இணைந்தது என்றும், அது ஏற்கனவே அதன் திறனை நிரூபித்துள்ளது என்றும், அந்த தொலைநோக்கு தற்போது வேவ்ஸ் உச்சிமாநாடாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேவ்ஸ் உச்சி மாநாட்டின் முதல் பதிப்பின் மகத்தான வெற்றியைப் பாராட்டிய திரு நரேந்திர மோடி, இந்த நிகழ்வு அதன் தொடக்கத்திலிருந்து உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது என்று கூறினார். உச்சிமாநாட்டின் ஆலோசனைக் குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை அவர் பாராட்டினார். வேவ்ஸ் உச்சி மாநாட்டை படைப்புத் துறையில் ஒரு மைல்கல் நிகழ்வாக மாற்றுவதில் அவர்களின் பங்கை அவர் எடுத்துரைத்தார். 60 நாடுகளில் சுமார் 1,00,000 படைப்பாற்றல் நிபுணர்களின் பங்கேற்பைக் கண்ட பெரிய அளவிலான படைப்பாளிகள் சவால் மற்றும் கிரியேட்டோஸ்பியர் முன்முயற்சியை அவர் குறிப்பிட்டார். 32 சவால்களில், 800 இறுதிப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களின் திறமையை அங்கீகரித்து அவர்களின் சாதனைக்காக வாழ்த்து தெரிவித்தார். இறுதிப் போட்டியாளர்களை ஊக்குவித்த அவர், உலகளாவிய படைப்பு அரங்கில் தங்கள் அடையாளத்தை உருவாக்க அவர்களுக்கு இப்போது வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

வேவ்ஸ் உச்சிமாநாட்டின் போது இந்திய அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ஆக்கப்பூர்வமான அம்சங்கள் குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். குறிப்பிடத்தக்க புதுமைகள் சாதிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், இந்த படைப்புகளை நேரடியாகக் காண ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார். வேவ்ஸ் பஜார் முன்முயற்சியை சுட்டிக்காட்டிய பிரதமர், புதிய படைப்பாளர்களை ஊக்குவித்து அவர்களை வளர்ந்து வரும் சந்தைகளுடன் இணைக்கும் திறன் கொண்டது என்றார். கலைத்துறையில் வாங்குபவர்களையும் விற்பவர்களையும் இணைக்கும் கருத்தை அவர் பாராட்டினார், இதுபோன்ற முயற்சிகள் படைப்பு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன என்று கூறினார்.

படைப்பாற்றலுக்கும் மனித அனுபவத்திற்கும் இடையே ஆழமாக வேரூன்றியுள்ள தொடர்பை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, ஒலி மற்றும் இசையின் முதல் அறிமுகமான தாயின் தாலாட்டில் இருந்து குழந்தையின் பயணம் தொடங்குகிறது என்று குறிப்பிட்டார். ஒரு தாய் தனது குழந்தைக்காக கனவுகளை உருவாக்கிக்கொள்வது போல, படைப்பாற்றல் மிக்க வல்லுநர்கள் ஒரு சகாப்தத்தின் கனவுகளை வடிவமைக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். தங்கள் கலை மூலம் தலைமுறைகளை ஊக்குவித்து செல்வாக்கு செலுத்தும் தொலைநோக்கு நபர்களை ஒன்றிணைப்பதே வேவ்ஸ் உச்சி மாநாட்டின் நோக்கம் என்று அவர் கூறினார்.

கூட்டு முயற்சிகளில் தனது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்திய திரு நரேந்திர மோடி, கலைஞர்கள், படைப்பாளிகள், தொழில்துறை தலைவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவை வரும் ஆண்டுகளில் வேவ்ஸை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் என்று அவர் கூறினார். வேவ்ஸ் உச்சிமாநாட்டின் முதல் பதிப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கு அளித்த அதே அளவிலான ஆதரவு மற்றும் வழிகாட்டுதலைத் தொடருமாறு தொழில்துறையினரை அவர் கேட்டுக் கொண்டார். பல உற்சாகமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன என்று குறிப்பிட்ட அவர், கலை மற்றும் படைப்பாற்றல் உலகில் மிகவும் மதிப்புமிக்க கௌரவங்களாக தங்களை நிலைநிறுத்தும் வேவ்ஸ் விருதுகள் எதிர்காலத்தில் தொடங்கப்படும் என்று அறிவித்தார். நீடித்த அர்ப்பணிப்பின் அவசியத்தை வலியுறுத்திய அவர், உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களை வெல்வதும், படைப்பாற்றல் மூலம் தலைமுறைகளை ஊக்குவிப்பதும் இதன் குறிக்கோள் என்று கூறினார்.

இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சியை எடுத்துரைத்து, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் இந்தியா உள்ளது என்று கூறிய பிரதமர், உலகளாவிய நிதி தொழில்நுட்ப செயல்பாட்டில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்று கூறினார். இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளர் மற்றும் உலகளவில் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பை இந்தியா கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றும், இன்னும் செல்ல வேண்டிய தூரம் ஏராளம் என்றும் அவர் கூறினார். இந்தியா நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு மட்டுமல்ல என்றும், நூறு கோடிக்கும் அதிகமான கதை களத்தையும் கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். நாட்டின் வளமான கலை வரலாற்றைக் குறிப்பிட்ட பிரதமர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பரத முனியின் நாட்டிய சாஸ்திரம் உணர்ச்சிகளையும் மனித அனுபவங்களையும் வடிவமைப்பதில் கலையின் சக்தியை வலியுறுத்தியதை நினைவு கூர்ந்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, காளிதாசரின் அபிஞான-சாகுந்தலம் பாரம்பரிய நாடகத்தில் ஒரு புதிய திசையை அறிமுகப்படுத்தியது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் ஆழமான கலாச்சார வேர்களை சுட்டிக்காட்டிய பிரதமர், ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கதை உள்ளது எனவும், ஒவ்வொரு மலையிலும் ஒரு பாடல் உள்ளது என்றும், ஒவ்வொரு நதியும் ஒரு ராகத்தை இசைக்கிறது என்றும் கூறினார். இந்தியாவின் ஆறு லட்சம் கிராமங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த நாட்டுப்புற பாரம்பரியத்தையும், தனித்துவமான கதை சொல்லும் பாணியையும் கொண்டுள்ளன என்றும், சமூகங்கள் நாட்டுப்புறக் கதைகள் மூலம் தங்கள் வரலாறுகளைப் பாதுகாத்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய இசையின் ஆன்மீக முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். அது பஜனைகள், கஜல்கள், பாரம்பரிய பாடல்கள் அல்லது சமகால இசை என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு மெல்லிசையும் ஒரு கதையைக் கொண்டுள்ளது என்றார். ஒவ்வொரு தாளமும் ஒரு ஆன்மாவைக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

வேவ்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவின் ஆழமாக வேரூன்றிய கலை மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை சுட்டிக்காட்டிய திரு நரேந்திர மோடி, தெய்வீக ஒலியான நாத பிரம்மா என்ற கருத்தை எடுத்துரைத்தார். இந்திய புராணங்கள் எப்போதும் இசை மற்றும் நடனம் மூலம் தெய்வீகத்தை வெளிப்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்ட அவர், சிவபெருமானின் உடுக்கையை முதல் அண்ட ஒலியாகவும், சரஸ்வதி தேவியின் வீணையை ஞானத்தின் தாளமாகவும், கிருஷ்ணரின் புல்லாங்குழல் அன்பின் நித்திய செய்தியாகவும், விஷ்ணுவின் சங்கை நேர்மறை ஆற்றலுக்கான அழைப்பாகவும் மேற்கோள் காட்டினார். உச்சிமாநாட்டில் இடம்பெற்ற மயக்கும் கலாச்சார விளக்கமும் இந்த வளமான பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். இந்தியாவில் படைப்பது, உலகிற்காக படைப்பது என்ற இந்தியாவின் பார்வையை  அவர் மீண்டும் எடுத்துரைத்தார். இதை வலுப்படுத்த இதுவே சரியான நேரம் என அவர் தெரிவித்தார்.

நாட்டின் கதை சொல்லும் பாரம்பரியம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடிக்கும் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இந்தியாவின் கதைகள் காலத்தால் அழியாதவை, சிந்தனையைத் தூண்டுபவை, உண்மையிலேயே உலகளாவியவை என அவர் தெரிவித்தார். கலாச்சார கருப்பொருள்கள் மட்டுமல்லாமல் அறிவியல், விளையாட்டு, தைரியம், துணிச்சல் ஆகியவற்றையும் உள்ளடக்கியவை என்று அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் கதை சொல்லும் சூழல் அறிவியலை புனைகதையுடனும், வீரத்தை புதுமையுடனும் இணைத்து, பரந்த மற்றும் மாறுபட்ட படைப்பாற்றல் சூழல் அமைப்பை உருவாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் அசாதாரணமான கதைகளை உலகத்துடன் பகிர்ந்து கொண்டு, புதிய மற்றும் ஈர்க்கக்கூடிய வடிவங்கள் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் பொறுப்பை வேவ்ஸ் தளம் ஏற்க வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.

 

மக்களின் பத்ம விருதுகளுக்கும், வேவ்ஸ் உச்சி மாநாட்டின் பின்னணியில் உள்ள தொலைநோக்குப் பார்வைக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த இரண்டு முயற்சிகளும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரும் திறமையாளர்களை அங்கீகரித்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று கூறினார். சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பத்ம விருதுகள் தொடங்கப்பட்டாலும், தொலைதூரப் பகுதிகளிலிருந்து நாட்டுக்கு சேவை செய்யும் தனிநபர்களை அங்கீகரித்து, மக்களின் பத்ம விருதாக இந்தியா ஏற்றுக்கொண்டு உண்மையிலேயே மாறியதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த மாற்றம், விருதுகளை ஒரு விழாவிலிருந்து தேசிய கொண்டாட்டமாக மாற்றியது என்று அவர் குறிப்பிட்டார். அதேபோல், திரைப்படங்கள், இசை, அனிமேஷன் மற்றும் கேமிங் ஆகியவற்றில் இந்தியாவின் மகத்தான படைப்பாற்றல் திறமைக்கான உலகளாவிய தளமாக வேவ்ஸ் செயல்படும் என்றும், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கலைஞர்கள் சர்வதேச அரங்கில் அங்கீகாரம் பெறுவதை உறுதி செய்யும் என்றும் பிரதமர் கூறினார்.

சமஸ்கிருத சொற்றொடரை மேற்கோள் காட்டி, மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் கலாச்சாரங்களை தழுவிய இந்தியாவின் பாரம்பரியத்தை சுட்டிக் காட்டிய திரு மோடி, இந்தியாவின் நாகரிகத் தன்மை, நாட்டில் செழித்து வளர்ந்து அதன் கலாச்சார கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ள பார்சிகள் மற்றும் யூதர்கள் போன்ற சமூகங்களை வரவேற்றுள்ளது என்று கூறினார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் இருப்பதைக் குறிப்பிட்ட அவர்,  ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சுயமான வெற்றிகளும் பங்களிப்புகளும் உள்ளன என்று குறிப்பிட்டார். உலகளாவிய கலை சாதனைகளை மதிப்பதிலும், கொண்டாடுவதிலும், ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புக்கான நாட்டின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதிலும் இந்தியாவின் பலம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளின் சாதனைகளைப் பிரதிபலிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம், உலகளாவிய இணைப்பு மற்றும் கலை பரிமாற்றத்தின் பார்வையை வேவ்ஸ் வலுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

உலகப் படைப்பாளிகளுக்கு அழைப்பு விடுத்த பிரதமர், இந்தியாவின் கதைகளில் ஈடுபடுவதன் மூலம், தங்களது சொந்த கலாச்சாரங்களுடன் ஆழமாக ஒத்துப்போகும் கதைகளை வெளிப்படுத்த முடியும் என்று உறுதியளித்தார். இந்தியாவின் வளமான கதை சொல்லும் பாரம்பரியம், எல்லைகளைக் கடந்து, இயற்கையான மற்றும் அர்த்தமுள்ள தொடர்பை உருவாக்கும் கருப்பொருள்கள் மற்றும் உணர்வுகளைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் கதைகளை ஆராயும் சர்வதேச கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் நாட்டின் பாரம்பரியத்துடன் ஒரு   பிணைப்பை அனுபவிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இந்த கலாச்சார ஒருங்கிணைப்பு, இந்தியாவில் உருவாக்கு என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை மேலும் ஊக்குவிப்பதாகவும், உலகிற்கு எளிதில் கிடைக்கச் செய்வதாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.

இந்தியாவில் படைப்புப் பொருளாதாரம், உள்ளடக்கம், படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் ஆகியவை படைப்புப் பொருளாதாரத்தின் மூன்று தூண்களின் விடியலுக்கான தருணம் இது என்று வியந்த திரு மோடி, இந்திய திரைப்படங்கள் இப்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பார்வையாளர்களை சென்றடைந்துள்ளன. உலகளாவிய பார்வையாளர்கள் இந்திய சினிமாவை மேலோட்டமான ரசிகர்களுக்கு அப்பால் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்று கூறினார். சர்வதேச பார்வையாளர்கள் இந்திய உள்ளடக்கத்தை வசனங்களுடன் பார்க்கும் வளர்ந்து வரும் போக்கை அவர் எடுத்துரைத்தார், இது இந்தியாவின் கதைகளுடன் ஆழமான ஈடுபாட்டைக் குறிக்கிறது. இந்தியாவின் ஓடிடி துறை சமீபத்திய ஆண்டுகளில் பத்து மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, திரை அளவுகள் சுருங்கினாலும், உள்ளடக்கத்தின் நோக்கம் எல்லையற்றது, மைக்ரோ திரைகள் மெகா செய்திகளை வழங்குகின்றன என்றார். இந்திய உணவு வகைகள் உலகளாவிய விருப்பமாக மாறி வருவதை சுட்டிக்காட்டிய அவர், இந்திய இசை விரைவில் இதேபோன்ற உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரத்தின் மகத்தான திறனை வலியுறுத்திய பிரதமர், வரும் ஆண்டுகளில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்களிப்பு கணிசமாக அதிகரிக்கும் என்று கூறினார். திரைப்பட தயாரிப்பு, டிஜிட்டல் உள்ளடக்கம், கேமிங், ஃபேஷன் மற்றும் இசை ஆகியவற்றிற்கான உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டார். நேரடி இசை நிகழ்ச்சித் துறையில் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய அனிமேஷன் சந்தையில் பரந்த திறன் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். தற்போது 430  பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் இது இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார். இந்தியாவின் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் துறைக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை அளிக்கிறது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த விரிவாக்கத்தை சர்வதேச அளவில் சென்றடைய பயன்படுத்திக் கொள்ளுமாறு பங்குதாரர்களை வலியுறுத்தினார்.

இந்தியாவின் இளம் படைப்பாளிகள் நாட்டின் படைப்புப் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று அழைப்பு விடுத்த திரு மோடி, அவர்களின் ஆர்வமும் கடின உழைப்பும் படைப்பாற்றலின் புதிய அலையை வடிவமைக்கின்றன என்று கூறினார். அவர்கள் குவஹாத்தியைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள், கொச்சியைச் சேர்ந்த இணைய ஒலிக் கலைஞர்கள், பெங்களூருவில் உள்ள விளையாட்டு வடிவமைப்பாளர்கள் அல்லது பஞ்சாபில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் என யாராக இருந்தாலும், அவர்களின் பங்களிப்பு இந்தியாவின் வளர்ந்து வரும் படைப்புத் துறைக்கு ஊக்கமளிக்கிறது என்று கூறினார். திறன் இந்தியா, புத்தொழில் ஆதரவு, ஏவிஜிசி தொழில்துறைக்கான கொள்கைகள் மற்றும் வேவ்ஸ் போன்ற உலகளாவிய தளங்கள் போன்ற முன்முயற்சிகள் மூலம் ஆக்கப்பூர்வமான நிபுணர்களின் பின்னணியில் அரசு உறுதியாக நிற்கிறது என்று அவர் உறுதியளித்தார். புதிய கண்டுபிடிப்புகளுக்கும், கற்பனைத்திறனுக்கும் மதிப்பளிக்கும் சூழலை உருவாக்கவும், புதிய கனவுகளை வளர்த்து, அந்தக் கனவுகளை நனவாக்க தனிநபர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். படைப்பாற்றல் குறியீட்டு முறையுடனும், மென்பொருள் கதை சொல்லலுடன் கலப்பதையும், கலை ஆக்மென்டட் ரியாலிட்டியுடன் இணைவதையும் சந்திக்கும் முக்கிய தளமாக வேவ்ஸ் செயல்படும் என்று திரு மோடி குறிப்பிட்டார். இளம் படைப்பாளிகள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், பெரிய கனவு காண வேண்டும், தங்கள் கனவுகளை நனவாக்க தங்கள் முயற்சிகளை அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் உள்ளடக்கப் படைப்பாளிகள் மீது தனக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்திய பிரதமர், அவர்களின் சுதந்திரமான படைப்பாற்றல் உலகளாவிய படைப்பாற்றல் சூழலை மறுவரையறை செய்கிறது என்று எடுத்துரைத்தார். இந்தியாவை உருவாக்குபவர்களின் இளமை உணர்வு தடைகள், எல்லைகள், தயக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை, இது புதுமை செழிக்க அனுமதிக்கிறது என்று அவர் தெரிவித்தார். இளம் படைப்பாளிகள், விளையாட்டாளர்கள், டிஜிட்டல் கலைஞர்களுடனான தனது தனிப்பட்ட தொடர்புகள் மூலம், இந்தியாவின் படைப்பு சூழல் அமைப்பிலிருந்து வெளிவரும் ஆற்றல் மற்றும் திறமையை நேரடியாகக் கண்டதாக அவர் குறிப்பிட்டார். ரீல்கள், இணைய ஒலிகள் மற்றும் விளையாட்டுகள் முதல் அனிமேஷன், ஏஆர் - விஆர் வடிவங்கள் வரை இந்தியாவின் மிகப்பெரிய இளம் மக்கள் புதிய படைப்பாற்றல் பரிமாணங்களை இயக்குகிறார்கள் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். இந்தத் தலைமுறையினருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'வேவ்ஸ்' மேடை என்று குறிப்பிட்ட பிரதமர், இளம் உள்ளங்கள் தங்கள் ஆற்றல் மற்றும் செயல்திறன் மூலம் ஆக்கப்பூர்வமான புரட்சியை மறுகற்பனை செய்யவும், மறுவரையறை செய்யவும் உதவும் தளம் என்று கூறினார்.

தொழில்நுட்பம் சார்ந்த 21-ம் நூற்றாண்டில் ஆக்கப்பூர்வமான பொறுப்புணர்வின் முக்கியத்துவம் குறித்து குறிப்பிட்ட திரு மோடி, மனித வாழ்வில் தொழில்நுட்பம் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், உணர்வுபூர்வமான உணர்திறனையும், கலாச்சார செழுமையையும் பாதுகாக்க கூடுதல் முயற்சிகள் தேவை என்று வலியுறுத்தினார். மனித இரக்கத்தை வளர்க்கும் மற்றும் சமூக உணர்வை ஆழப்படுத்தும் சக்தி படைப்பு உலகிற்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ரோபோக்களை உருவாக்குவது குறிக்கோள் அல்ல, மாறாக உயர்ந்த உணர்திறன், ஆழமிக்க உணர்ச்சி அறிவார்ந்த செழுமை கொண்ட தனிநபர்களை வளர்ப்பதே என்று அவர் எடுத்துரைத்தார்.  இந்த குணங்கள் தகவல் அல்லது தொழில்நுட்ப வேகத்திலிருந்து மட்டும் உருவாக முடியாது. கலை, இசை, நடனம் மற்றும் கதை சொல்லல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, இந்த வடிவங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித உணர்வுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்று குறிப்பிட்டார். இந்த மரபுகளை வலுப்படுத்தி, கருணை நிறைந்த எதிர்காலத்தை உருவாக்குமாறு படைப்பாளிகளை அவர் கேட்டுக்கொண்டார். பிளவுபடுத்தும் மற்றும் தீங்கு விளைவிக்கும் சித்தாந்தங்களிலிருந்து இளம் தலைமுறையினரைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார், கலாச்சார ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும் நேர்மறையான மதிப்புகளை வளர்ப்பதற்கும் வேவ்ஸ் உச்சிமாநாடு ஒரு முக்கிய தளமாக செயல்பட முடியும் என்று கூறினார். இந்த பொறுப்பை புறக்கணிப்பது எதிர்கால சந்ததியினருக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.

படைப்பாற்றல் உலகில் தொழில்நுட்பத்தின் மாற்றத்தக்க தாக்கத்தை வலியுறுத்திய பிரதமர், அதன் முழு திறனையும் பயன்படுத்த உலகளாவிய ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வேவ்ஸ் இந்திய படைப்பாளிகளை உலகளாவிய கதை சொல்லிகளுடனும், அனிமேட்டர்களை உலகளாவிய தொலை நோக்காளர்களுடனும் இணைக்கும் பாலமாகவும், விளையாட்டாளர்களை உலகளாவிய சாம்பியன்களாக மாற்றவும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார். சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் படைப்பாளிகள் இந்தியாவை தங்கள் உள்ளடக்க விளையாட்டு மைதானமாக அரவணைக்கவும், நாட்டின் பரந்த படைப்பு சூழல் அமைப்பை ஆராயவும் அவர் அழைப்பு விடுத்தார். உலகப் படைப்பாளிகளிடையே உரையாற்றிய பிரதமர், அவர்கள் பெரிய கனவு காண வேண்டும், தங்கள் கதையைச் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். முதலீட்டாளர்களை அரங்குகளில் மட்டும் முதலீடு செய்யாமல், மக்களிடமும் முதலீடு செய்ய வேண்டும் என்று ஊக்குவித்த பிரதமர், இந்திய இளைஞர்கள் தங்களது சொல்லப்படாத 100 கோடி கதைகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வேவ்ஸ் உச்சி மாநாட்டின் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ், டாக்டர் எல் முருகன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

வேவ்ஸ் 2025 என்பது "படைப்பாளர்களை இணைத்தல், நாடுகளை இணைத்தல்" என்ற முழக்கத்துடன் நடைபெறும் நான்கு நாள் உச்சிமாநாடு ஆகும்.  இது உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஊடகம், பொழுதுபோக்கு, மின்னணு கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்த தயாராக உள்ளது.

பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைக்க படைப்பாற்றல், தொழில்நுட்பம் மற்றும் திறமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பிரதமரின் பார்வைக்கு ஏற்ப, வேவ்ஸ் திரைப்படங்கள், ஓடிடி, கேமிங், காமிக்ஸ், டிஜிட்டல் மீடியா, ஏஐ, ஏவிஜிசி-எக்ஸ்ஆர், ஒளிபரப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும். இது இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு வலிமையின் விரிவான காட்சிப்பொருளாக மாறும். 2029-ம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலர் சந்தையை ஈர்ப்பது என்பதை வேவ்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உலகளாவிய பொழுதுபோக்கு பொருளாதாரத்தில் இந்தியாவின் தடத்தை விரிவுபடுத்துகிறது.

வேவ்ஸ் 2025-ல், இந்தியா முதல் முறையாக உலகளாவிய ஊடக உரையாடலை நடத்துகிறது. 25 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்புடன், உலகளாவிய ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு சூழலுடன் நாட்டின் ஈடுபாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த உச்சி மாநாட்டில் 6,100 வாங்குபவர்கள், 5,200 விற்பனையாளர்கள் மற்றும் 2,100 திட்டங்களைக் கொண்ட உலகளாவிய இ-சந்தையான வேவ்ஸ் கண்காட்சியும் இடம்பெறும். இது உள்நாட்டிலும் உலகளவிலும் வாங்குபவர்களையும் விற்பவர்களையும் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பரந்த அளவிலான கட்டமைப்பு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை உறுதி செய்கிறது.

ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட 32 இந்தியாவில் உருவாக்குவோம் சவால்கள் திட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். பாரத் அரங்கையும் அவர் பார்வையிடுவார்.

வேவ்ஸ் 2025-ல் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பங்கேற்பார்கள், 10,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 1,000 படைப்பாளர்கள், 300-க்கும் அதிகமான  நிறுவனங்கள் மற்றும் 350-க்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த உச்சிமாநாட்டில் 42 முழுமையான அமர்வுகள், 39 பகுதி அளவிலான அமர்வுகள் மற்றும் ஒளிபரப்பு, இன்போடெயின்மென்ட், ஏவிஜிசி-எக்ஸ்ஆர், திரைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 32 மாஸ்டர் வகுப்புகள்  இடம்பெறும்.

***

(Release ID: 2125725)

SM/PLM/IR/KPG/SG/RJ


Release ID: (Release ID: 2125775)   |   Visitor Counter: 26