WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்தியாவில் கலை படைப்புகளை உருவாக்குவோம் சவாலுக்கு 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 1 லட்சம் பதிவுகள் வந்துள்ளன - உலகளாவிய படைப்பாற்றல் இயக்கமாக இது உருவெடுத்துள்ளது

 Posted On: 18 APR 2025 4:32PM |   Location: PIB Chennai

உலக ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாட்டின் (வேவ்ஸ் - WAVES) கீழ் ஒரு முதன்மை முயற்சியாக தொடங்கப்பட்ட கிரியேட் இன் இந்தியா சேலஞ்ச் (CIC) எனப்படும் இந்தியாவில் கலை படைப்புகளை உருவாக்கும் சவால், 2025 மே 1 முதல் 4 வரை ஒரு கண்கவர் இறுதி நிகழ்வுக்குத் தயாராகி வருகிறது. இதன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து 32 போட்டிகளும்  இப்போது அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இந்த இந்தியாவில் படைப்போம் சவால் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 1,100 க்கும் மேற்பட்ட சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட சுமார் 1 லட்சம் பதிவுகள் இதற்கு வந்துள்ளன. இந்த சவால்களுக்கு 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து உள்ளீடுகள் பெறப்பட்டுள்ளன. இது இந்த முன்னோடி முயற்சியின் உலகளாவிய தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது.

இதில் மொத்தம் 750 இறுதிப் போட்டியாளர்களுக்கு வேவ்ஸ் 2025-ன் ஒரு பகுதியாக, அனிமேஷன், காமிக்ஸ், ஏஐ, எக்ஸ்ஆர், கேமிங், இசை போன்ற பல பிரிவுகளில் புதுமைகளையும் தங்கள் படைப்புத் திறன்களையும் வெளிப்படுத்த வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த சவால்களின் வெற்றியாளர்களுக்கு நிகழ்வின் 2-வது நாளில் 'வேவ்ஸ் கிரியேட்டர் விருதுகள்' வழங்கப்படும்.

வேவ்ஸ் கிரியோட்டோஸ்பியர் குறிப்பிடத்தக்க உலகளாவிய பங்கேற்பைக் காண்கிறது. இதில் 43 சர்வதேச இறுதிப் போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். அர்ஜென்டினா, நேபாளம், ஜெர்மனி, பெர்முடா, அமெரிக்கா, கிரீஸ், இந்தோனேசியா, இங்கிலாந்து, கனடா, இத்தாலி, லாவோஸ், தாய்லாந்து, தஜிகிஸ்தான், எகிப்து, இலங்கை, ரஷ்யா, மாலத்தீவுகள், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகளை இந்த இறுதிப் போட்டியாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். குறிப்பிடத்தக்க வகையில், இலங்கை, நேபாளம் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து தலா 6 இறுதி சுற்றாளர்கள் கலந்து கொள்கின்றனர்

இப்போட்டிகளில் இளைய இறுதிப் போட்டியாளர் 12 வயதுடையவராகவும், மூத்த நபர் 66 வயதை கொண்டவராகவும் உள்ளார். இது வயதைக் கடந்து உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கிய படைப்பு தளத்திற்கான வாய்ப்பை எடுத்துக் காட்டுகிறது.

வேவ்ஸ் ஒவ்வொரு வீட்டையும் ஒவ்வொரு இதயத்தையும் சென்றடைய வேண்டும் என்ற  பிரதமர் திரு நரேந்திர மோடியின் நோக்கத்தை இது பிரதிபலிக்கிறது.

***

(Release ID: 2122688)

SV/PLM/RJ


Release ID: (Release ID: 2122734)   |   Visitor Counter: 44